Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 16)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

ப்ரபத்தியை விதிக்கவேண்டியதில்லை என்னும் வாதத்திற்கான மறுப்பு

மூலம் - மற்றுள்ள உபாயங்களில் ஸமர்த்தனன்றிக்கே ஒழிந்தால் அவற்றினுடைய ஸ்தாநத்திலே ப்ரபத்தியைப் பண்ணுவதென்று சாஸ்த்ரம் விதியாதபோது முன்பு விதித்த உபாயத்துக்கு அநர்ஹனானபடியாலே அதின் பலத்தை இழக்கும்படியாம். எங்ஙனே என்னில், லோகத்தில் ராஜஸேவாதிகளும் தத்பலங்களும் காணச் செய்தே மாலாகரண தீபாரோபண ஸ்துதி நமஸ்காராதிகளை சாஸ்த்ரநிரபேக்ஷமாக அநுஷ்டித்தால் அபசாரங்கள் வரும்படியிருக்கையாலே பரிகர நியமங்களோடு கூடின பகவத்ஸேவாதி ப்ரகாரங்களும் தத்பலங்களும் நியதங்களாகச் சாஸ்த்ரங்கொண்டு அறிகிறாப்போலே இங்கும் லோகத்தில் ப்ரபத்தியும் தத்பலங்களும் கண்டுபோந்தாலும் ஸதாசார்ய உபதேச ஸாபேக்ஷ மந்த்ரவிசேஷாதிகளோடு கூடின ப்ரபத்திக்கும் பலவிசேஷங்களுக்கும் ஸாத்ய ஸாதந பாவம் சாஸ்த்ரம் கொண்டு அறியவேண்டுகையால் அவ்வோ பலங்களுக்காக ஸ்வாவிசேஷங்களை விதிக்கிறாப்போலே ப்ரபத்தியையும் விதிக்கிறது. இங்ஙனல்லாத போது ராஜஸேவையைப் போலே பகவத் ஸேவையும் விதிக்கவேண்டாதொழியும்; ப்ரபத்திக்கும் ஸதாசார்யோபதேச பூர்வக மந்த்ரக்ரஹணாதிகள் அநபேக்ஷிதங்களாகப் ப்ரஸங்கிக்கும். மந்த்ராத்யநர்ஹர்க்கும் சரண்யவிசேஷ பலவிசேஷாநுபந்தியான அந்யூநாநதிக கர்த்தவ்ய விசேஷத்தினுடைய அத்யவஸாயத்துக்கு அநந்யதா ஸித்தமான அநுமாநம் கிடையாது. ஆகையால் ஸபரிகர ஸேவா விசேஷங்கள்போலே ஸபரிகர பரஸமர்ப்பணமும் இங்கு விதேயமாகக் குறையில்லை.

– இது தவிர மற்ற பலன்களை விரும்பும் ஒருவன் பக்தியோகம் போன்ற மற்ற உபாயங்களைக் கைக்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருக்கக்கூடும்; அவற்றுக்குப் பதிலாக ப்ரபத்தியைக் கைக்கொள்ளலாம் என்று சாஸ்த்ரங்கள் விதிக்காவிட்டால், அவன் பக்தியோகம் போன்றவற்றையும் செய்ய முடியாமல், அதற்குப் பதிலாக ப்ரபத்தி உள்ளது என்பதையும் அறியாமல் இருந்துவிடுவான்; இதனால் தான் அடைய விரும்பிய பலன்களை இழக்க நேரிடும். இந்த உலகில் அரசர்களுக்கு மாலை ஸமர்ப்பித்தல், தூபதீபங்கள் ஸமர்ப்பித்தல், துதி செய்தல், வணங்குதல் போன்ற செயல்களைச் செய்யும்போது, சாஸ்த்ரங்களில் கூறிய விதிகளுக்கு உட்பட்டே அவற்றைச் செய்யவேண்டும், மீறிச் செய்தால் அபசாரம் ஏற்படும். இது போன்றே ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யங்களைச் செய்யவேண்டிய முறை என்ன, அவற்றின் பலன்கள் என்ன போன்றவற்றைச் சாஸ்த்ரங்கள் மூலமாக அறிந்து கொண்டு செய்யவேண்டும் என்று முன்னர் உரைக்கப்பட்டது. இது போன்று இந்த உலகில் நாம் ப்ரபத்தி மற்றும் அதன் பலன் ஆகியவற்றைக் கண்டபோதிலும், ஆசார்யனிடம் உபதேசமாகப் பெற்ற மந்த்ரங்களுடன் கூடியதான ப்ரபத்திக்கும் அதன் பலன்களுக்கும் இடையே உள்ள கார்ய - காரண ஸம்பந்தம் என்பதை சாஸ்த்ரங்கள் மூலமாகவே அறிய இயலும். ஒரு சில குறிப்பிட்ட பலன்களை அடையும் பொருட்டு செய்யவேண்டிய செயல்களை எவ்விதம் சாஸ்த்ரம் விதிக்கிறதோ, அது போன்று ப்ரபத்தியும் சாஸ்த்ரம் மூலம் விதிக்கப்பட்டது. இவ்விதம் கொள்ளவில்லை என்றால், அரசர்களுக்குச் செய்யும் செயல்களுக்கு எவ்விதம் சாஸ்த்ரங்கள் ஏதும் விதிக்கவில்லையோ அது போன்றே ஸர்வேச்வரனுக்குச் செய்யும் கைங்கர்யங்களிலும் ஏதும் விதிக்கப்படவில்லை என்றாகும். இதனால், ப்ரபத்திக்கு முன்பாக ஆசார்யனிடம் மந்த்ரங்களைப் பெறுதல் போன்றவையும் அவசியம் இல்லை என்றாகிவிடும். ஒரு சிலர் மந்த்ரங்களைக் கூறும் தகுதி இல்லாதவர்களாக இருக்கலாம்; இவர்கள் சரணமடைவதற்கு ஏற்றவனாகவும், பல குணங்களுடன் கூடியவனாகவும் உள்ள ஸர்வேச்வரனிடம் ப்ரபத்தி செய்யலாம்; இதன் மூலம் இவர்களுக்கு குறிப்பிட்ட பலன்கள் கைகூடும்; ஆனால் இதனைச் சரியான வழியில், எதனையும் எதிர்பாராமல், விதிகளுக்கு மீறாமல் செய்யவேண்டும் – இவ்விதம் சிலர் கூறுவதை எந்தவிதமான அநுமானம் மூலமும் நிரூபிக்க இயலாது. ஆகவே, ஸர்வேச்வரனை வழிபடும் முறைகளும், அவனுக்குக் கைங்கர்யம் செய்யும் விதங்களும் எவ்விதம் அங்கங்களுடன் சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டுள்ளதோ அதே போன்று, ப்ரபத்தியை அதன் அங்கங்களுடன் சாஸ்த்ரங்கள் விதிப்பதில் எந்தவிதமான தோஷமும் இல்லை.