Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 15)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
ப்ரபத்தியை விதிக்கவேண்டியதில்லை என்னும் வாதத்திற்கான மறுப்பு
மூலம்– ஆனாலும் இப் ப்ரபத்தியாகிற உபாய விசேஷத்தைச் சாஸ்த்ரம் விதிக்க வேணுமோ? லோகத்தில் தன்னை ரக்ஷித்துக் கொள்ள விரகில்லாதே அழுந்துவான் ஒருவன் அப்போது ஸந்நிஹிதனான ரக்ஷண ஸமர்த்தனைப் பற்றுமாப்போலே தன்னையும் ஈச்வரனையும் ஸித்தபரமான சாஸ்த்ரத்தாலே தெளிந்தால் தானே, அவனை சரணமாகப் பற்றானோ? ஆகையால் அகிஞ்சநனுக்குப் பக்தி ஸ்தானத்தில் ப்ரபத்தியை விதிக்கக் கூடாதே என்றும் சிலர் சொல்லுவார்கள். இதுவும் ஔசித்யமூலமான அதிவாதம். எங்ஙனேயென்னில் – லோகத்தில் ஒருவனை ஒருவன் ஆச்ரயிக்கும்போது இன்னபடியே இவன் இரங்கும் என்னுமிடத்தை ஒரு ப்ரமாணத்தாலே அறிந்து ஆச்ரயிக்குமாபோலே, இங்கும் ஈச்வரனை இன்ன ப்ரகாரத்தாலே இன்ன அதிகாரி பற்றினால் இவனை ஈச்வரன் ரக்ஷிக்குமென்னும் இடம் அறியும்போது கர்த்தவ்யபரமான சாஸ்த்ரமொழிய வேறொரு ப்ரமாணமில்லை. நாம் ஆச்ரயிக்க ரக்ஷிக்குமென்று அநுமாநத்தாலே அறுதியிட்டு ஆச்ரயிக்கில் ஈச்வர தத்த்வ ஜ்ஞாநமுடையாரெல்லார்க்கும் இப்படி அநுஷ்டிக்கலாமாகையாலே உபாஸந விதாயக சாஸ்த்ரங்கள் நிரர்த்தங்களாம். ஸமர்த்தன் உபாஸநாதிகளைப் பண்ண, அவற்றில் ஸமர்த்தனல்லாதவன் ப்ரபத்தியைப் பண்ணவென்று விசேஷித்து நியமிக்கை அநுமாநத்தால் கடைப்படாது.
– பக்தியோகத்தைக் கைக்கொள்ள இயலாதவனுக்கு ப்ரபத்தி என்பதை சாஸ்த்ரங்கள் ஏன் விதிக்கவேண்டும்? இந்த உலகில் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள இயலாத ஒருவன், ஒரு விபத்தில் சிக்கும்போது, தனக்கு அருகில் உள்ள காப்பாற்றும் சக்தி கொண்ட ஒருவனை, தானாகவே வலியச் சென்று பற்றுகிறான்; இது போன்றே உபாயம் மற்றும் உபேயம் ஆகியவை குறித்து எடுத்துக் கூறுகின்ற சாஸ்த்ரங்கள் மூலம் தன்னைக் குறித்தும், ஈச்வரனைக் குறித்தும் அறிந்து தெளிந்த ஒருவன், தானாகவே ஸர்வேச்வரனை சரணம் என்று பற்றமாட்டானோ? இதற்கு ஏன் விதிக்க வேண்டும்? எனவே தன்னிடம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எந்தத் திறனும் இல்லை என்று தெளிந்த ஒருவனுக்கு பக்திக்குப் பதிலாக ப்ரபத்தியை விதிக்க வேண்டிய அவசியம் இல்லையே என்று சிலர் ஆக்ஷேபம் செய்யக்கூடும். இந்த வாதம் சரியான காரணத்தைக் கூறி அமைத்துள்ளபோதிலும், ஏற்க இயலாத ஒன்றாகிறது. ஏன்? இந்த உலகில் ஒருவனை மற்றொருவன் ஓர் உதவிக்காக அண்டும்போது, அவன் இவ்விதமாகத் தனக்கு உதவி செய்யக்கூடும் என்பதை தகுந்த சான்றுகள் மூலம் அறிந்த பின்னரே, அவனை அண்டுகிறான் அல்லவோ? இது போன்று ஈச்வரனை எத்தகைய அதிகாரி, எந்த முறையில் பற்றினால், அவனை ஈச்வரனம் ரக்ஷிப்பான் என்று அறிவதற்கு கடமைகளைச் சரிவர உரைக்கின்ற சாஸ்த்ரங்களைத் தவிர வேறு ப்ரமாணம் ஏதும் இல்லை. இதற்கு ஒரு எதிர்கேள்வி கேட்கலாம் – “நாம் அவனை அண்டினால் அவன் தானாகவே ரக்ஷிக்க மாட்டானோ?” என்று யூகத்தின் அடிப்படையிலே அவனை அண்டலாம் அல்லவோ – என்று கேட்கலாம். ஸர்வேச்வரனைப் பற்றிய ஞானம் கொண்ட அனைவரும் இவ்விதமாக யூகத்தின் அடிப்படையில் அவனை அண்டலாம் என்னும்போது பக்தியோகத்தை விதிக்கின்ற சாஸ்த்ரங்கள் அனைத்தும் பயனற்றுப் போய்விடும். தகுதி உள்ளவன் பக்தியோகம் போன்ற உபாயங்களையும், தகுதி இல்லாதவன் ப்ரபத்தியையும் கைக்கொள்ளலாம் என்பதை அநுமானத்தால் அறிய இயலாது.