Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 14)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
ஸித்தோபாயம் மற்றும் ஸாத்தோபாயத்தின் உபகாரங்கள்
மூலம்– உபாஸநாதிகளைப்போலே தனக்கு உத்பாதகமாகவாதல், வர்த்தகமாகவாதல், ஸஹகாரியாகவாதல், த்வாரமாகவாதல், ஒன்றால் அபேக்ஷையறும்படி நித்யமாய், உபசயாபசய ரஹிதமாய், ஸர்வதா பரிபூர்ணமான ஸஹஜ காருண்யாதிகளை உடைத்தாய், ஸங்கல்பமுண்டானபோது த்வாரநிரபேக்ஷமாகக் கார்யம் பிறக்கும்படி ஸத்யஸங்கல்பமாயிருக்கிற ஸித்தோபாயத்துக்குப் பக்திப்ரபத்திகள் எவ்வாகாரங்களால் உபகாரகங்களாகின்றனவென்னில் – இவை அநாதியான அபசார பரம்பரையாலே உத்பந்நமாய் ஸம்ஸாரஹேதுவாகாய்க் கிடக்கிற நிக்ரஹத்தைச் சமிப்பித்துக் கொண்டு உபகரிக்கின்றன. இவை பலாந்தரத்துக்கு உபாயங்களாம்போது ஜ்யோதிஷ்டோ மாதிகளைப்போலே தத்ததநுகுண ப்ரீதிவிசேஷங்களை உத்பாதித்துக் கொண்டு அம்முகத்தாலே உபகாரங்களாம். முமுக்ஷுவுக்கு ஸாத்யோபாயங்களாகிற வ்யாஜ மாத்ரத்தாலே சாந்தநிக்ரஹமான ஸித்தோபாயம் நிக்ரஹபலமான ஜ்ஞான ஸங்கோசாதிகளைக் கழித்துப் பரிபூர்ண கைங்கர்ய பர்யந்த பலத்தைக் கொடுத்து யாவதாத்மபாவியாக உபகரிக்கும். ஆகையால் முமுக்ஷுவினுடைய ஸர்வாநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாய் பரிபூர்ண கைங்கர்ய பர்யந்தமான பலபரம்பரையெல்லாம் ஸித்தோபாய கார்யமென்றும், ப்ரஸாதமான ஸாத்தோபாயமடியாக வருகிறதென்றும் சொல்லுகிற ப்ரமாணங்களிரண்டும் ஸுஸங்கதங்கள்.
– (உபாஸனங்கள் போன்று உற்பத்தி ஆதல், பலபல நிலைகளைக் கடந்த பின்னரே முழுமை அடைதல், மற்ற சிலவற்றின் உதவியை நாடியிருத்தல் ஆகியவை ஸர்வேச்வரன் என்னும் உபாயத்துக்கு உண்டா என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்) உபாயமாக உள்ள பகவான் உற்பத்தி ஆதல், படிப்படியாக வளர்ச்சி அடைதல், மற்றவற்றின் உதவிகளை நாடுதல் போன்றவை அற்று இருக்கிறான். அவன் நித்யமாக உள்ளான்; எந்தவிதமான வளர்ச்சியோ குன்றுதலோ அற்றவனாக உள்ளான்; அனைத்து உயிர்களிடத்தும் பரிபூர்ணமாக கருணை கொண்டவனாக உள்ளான்; இவற்றை எப்போதும் உடையவாக இருக்கிறான். அவன் தன்னுடைய தவறாத ஸங்கல்பம் காரணமாக, எதனையும் விடாமல், வேறு எதனுடைய உதவியையும் எதிர்பாராமல், எப்போதும் உபாயமாக இருக்கிறான். இப்படி உள்ளபோது இவனுக்கு பக்தி மற்றும் ப்ரபத்தி ஆகியவை எவ்விதம் உபகாரம் செய்பவையாக உள்ளன என்று கேட்கலாம். நாம் எல்லையற்ற காலங்களாகத் தொடர்ந்து செய்கின்ற பலவிதமான அபசாரங்களே ஸம்ஸாரத்தில் சுழன்றபடி உள்ளதற்குக் காரணமாகின்றன; அதாவது, இந்த அபசாரங்கள் ஸர்வேச்வரனின் தண்டனைகளுக்கு ஏதுவாக இருந்துகொண்டு, அந்தத் தண்டனைகளே ஸம்ஸாரத்தில் உழல்வதற்கு காரணமாக உள்ளன. இந்நிலையில் பக்தியும் ப்ரபத்தியும் அந்த தண்டனைகளை நீக்கவோ (அல்லது குறைக்கவோ) உதவியாக உள்ளன. இவை (பக்தி மற்றும் ப்ரபத்தி) மற்ற பலன்களுக்காகச் செய்யப்படும்போது (மோக்ஷம் தவிர), இந்த உபாயங்கள் அவற்றின் பலனுக்கு ஏற்றபடியான மகிழ்வை ஸர்வேச்வரனுக்கு உண்டாக்கி, அவனைப் பலன் அளிக்கும்படிச் செய்கின்றன; அதாவது ஜ்யோதிஷ்டோமம் போன்றவை எவ்விதம் பலன் அளிக்கிறதோ அது போன்று இவையும் உதவுகின்றன. முமுக்ஷு ஒருவன் இந்த உபாயங்களை மோக்ஷத்தின் பொருட்டு கைக்கொள்ளும்போது, இந்த உபாயங்கள் மூலமாக சேதநனின் விஷயத்தில் (அபசாரம் காரணமாக) தண்டனை அளிக்கின்ற மனோபாவத்தில் உள்ள ஸித்தோபாயமான எம்பெருமான் செய்வது என்னவென்றால் – தன்னுடைய முந்தைய தண்டனை காரணமாக எற்பட்டிருந்த ஞானச்சுருக்கம் போன்றவற்றை விலக்கி, முழுமையான கைங்கர்யம் என்பது வரை உள்ள பலன்களை அளித்து, ஆத்மா உள்ளவரை உபசாரம் செய்வான். ஆகவே ஸித்தோபாயமான எம்பெருமான் முமுக்ஷுவின் தடைகள் அனைத்தையும் விலக்கி, பரிபூர்ணமான கைங்கர்யம் என்பதுவரை உள்ள அனைத்து பலன்களையும் அளிக்கிறான்; தான் செய்கின்ற பக்தி மற்றும் ப்ரபத்தி ஆகிய உபாயங்களால் மகிழ்கின்ற காரணத்தாலேயே எம்பெருமானால் இந்தப் பலன்கள் வருகின்றன – இந்த இரண்டு ப்ரமாண கருத்துக்களும் பொருத்தமானதே ஆகும்.