Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 13)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

ப்ரபத்தி உபாயம் அல்ல என்ற வாதத்திற்கான மறுப்பு

மூலம் – ஆனாலும், உபாஸநாதிகள்போலே சரணவரணமும் தர்ம சப்த வாச்யமாகையாலே இங்கு ஸர்வசப்த ஸங்கோசம் வாராமைக்காக இதுவும் ஸாதநத்வ வேஷத்தாலே த்யாஜ்யமன்றோ? ஆகையால் ப்ரபத்திக்கும் ஸாதநத்வமாதல் ஸித்தஸாதந ஸஹகாரித்வமாதல் கொள்ளுகை இவ்வசநம் தனக்கும் விருத்தமன்றோவென்னில் – இங்கு ஸாக்ஷாத் ஸாதநத்வ புத்தியை விடவேணுமென்னும்போது பக்தியோகாதிகளிலும் துல்யம். ப்ரஸாதநத்வ வேஷத்தாலும் தர்மத்வம் இதுக்கு விடவேணுமென்னில் ஸர்வசப்த ஸங்கோசம் வாராமைக்காகவே க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம் இத்யாதிகளிற்படியே தர்மமான ஸித்தோபாயத்திலும் ஸாதநத்வ புத்தியைவிடப் ப்ரஸங்கிக்கும். இவ்வாக்யத்தில் ப்ரதிபாத்யமான தர்மத்தையொழித்த தர்மங்களல்லவோ த்யாஜ்யங்களாவனவென்னில், இங்கு விஹிதையான சரணாகதியிலும் துல்யம்.

– உபாஸனம் என்பது உபாயம் அல்ல என்று மேலே வாதம் செய்பவர்கள், மேலும் ஒரு கேள்வி கேட்கலாம்: ஸர்வேச்வரனிடம் சரணம் புக வேண்டுவது என்பதும் உபாஸநம் போன்று ஒருவிதமான தர்மமே ஆகும்; ஆகவே, ஸர்வதர்மாந் என்பதில் உள்ள “ஸர்வ = அனைத்து” என்னும் பதத்தின் பொருளைச் சுருக்காமல் இருக்கவேண்டும் என்றால் – இத்தகைய சரணமடைதல் என்பதும் ஓர் உபாயமாகவே உள்ளதால், இதுவும் கைவிடத்தக்கதே ஆகிறது அல்லவா? இது போன்றே, ப்ரபத்தி என்பது நேரடி உபாயமாகவோ அல்லது மறைமுக உபாயமாகவோ உள்ளதால், இத்தகைய உபாயம் என்பது கீதையின் – ஸர்வதர்மாந் பரித்யஜ்ய – என்பதற்கு எதிர்மறையாக உள்ளது அல்லவோ? இதற்கு மறுப்பாக நாம் ஒரு கேள்வி எழுப்புகிறோம். நீங்கள் (ப்ரபத்தி உபாயம் அல்ல என்று கூறுபவர்கள்) என்ன கூறவிரும்புகிறீர்கள்? ”உபாயம் என்பது நேரடியாகப் பலன் அளிக்கும்” என்னும் எண்ணத்தையும் துறந்த பின்னரே உபாயத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் கூறினால், இதே கருத்து பக்தியோகத்திற்கும் பொருந்தும். ப்ரபத்தி என்பது ஸர்வேச்வரனின் க்ருபையைப் பெற்றுத் தரவல்ல ஸாதநம் என்பதால், அதுவும் ஒரு தர்மமே என்றாகிறது; ஆகவே “ஸர்வதர்மாந்” என்பதற்குள் இத்தகைய தர்மமும் அடங்குவதால், ப்ரபத்தி என்ற தர்மத்தையும் கைவிடவேண்டும் என்று நீங்கள் கூறலாம் – இவ்விதம் கொண்டால் ஸர்வதர்மாந் என்ற பதத்திற்கு எந்தவிதமான குறையும் வராமல் இருக்கும்விதமாக, மஹாபாரதம் ஆரண்யபர்வம் (71-123) - க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம் – க்ருஷ்ணனே எப்போதும் உள்ள தர்மம் – என்றுள்ள நிலையில், தர்மம் என்னும் பதம் மூலம் கூறப்பட்ட ஸித்தோபாயமான எம்பெருமானையும் கைவிடவேண்டியதாகிறது அல்லவோ? இதற்கு நீங்கள், “சரமச்லோகத்தில் கூறப்பட்ட தர்மத்தைத் தவிர (மாமேகம் – என்னை மட்டும் – என்பதான தர்மம்), மற்ற தர்மங்கள் அனைத்தையும் கைவிடவேண்டும் என்று கொள்ளவேண்டும்”, என்று கூறலாம்; இவ்விதம் கொண்டால், அதே ச்லோகத்தில் கூறப்பட்ட சரணாகதியையும் ஏற்கவேண்டியதுதானே!