Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 12)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

பக்தியோகம் உபாயம் அல்ல என்ற வாதத்திற்கான மறுப்பு

மூலம்–உபாஸநம்தானும் ஸாதநமன்றென்னில், ஸர்வதர்மாந் பரித்யஜ்ய என்றவிடத்தில் உபாஸநத்தையும் தர்மசப்தார்த்தமாக வ்யாக்யானம் பண்ணுகையாலே ஸ்வவசந விரோதமுண்டாம். செருக்கு அடக்குகைக்காக வேண்டாச் சுமைகளை எடுப்பிக்கையாலே அந்யபரமான உபதேசத்தாலே பிறந்த அர்ஜுநன் புத்தியாலே தர்மமென்று தோற்றினவற்றை ஸர்வதர்மாந் என்று அநுவதிக்கிறது என்னில், இஜ்யாசார தமாஹிம்ஸா தாந ஸ்வாத்யாய கர்மணாம் அயம் து பரமோ தர்மோ யத்யோகேநாத்மதர்சநம் ஸர்வேஷாமேவ தர்மாணாமுத்தமோ வைஷ்ணவோ விதி: ந விஷ்ணவாராதநாத் புண்யம் வித்யதே கர்மம் வைதிகம் இத்யாதிகளாலே பரம தர்மங்களாக ப்ரஸித்தங்களான நிவ்ருத்திதர்மங்களைத் தர்மங்களல்லவென்றால், கைமுதிக ந்யாயத்தாலே ப்ரவ்ருத்திதர்மங்களும் தர்மங்களன்றிக்கே ஸர்வ சாஸ்த்ரங்களுக்கும் ப்ராமாண்யமில்லாதபடியாய் பரவாஹ்ய குத்ருஷ்டி பக்ஷங்களிலே ப்ரவேசமாம்.

– ஒரு சிலர் உபாஸநம் என்பது கூட உபாயம் அல்ல என்று கூறுவர்; இவ்விதம் கொண்டால், கீதை (18-66) – ஸர்வதர்மாந் பரித்யஜ்ய – அனைத்து தர்மங்களையும் கைவிட்டு – என்றுள்ள ச்லோகத்திற்கான வ்யாக்யானம் செய்யும்போது, தர்மம் என்ற பதத்திற்கு உபாஸநம் என்று பொருள் கொண்டு அளிக்கப்பட்ட அவர்களது மதத்தைச் சேர்ந்தவர்களின் கருத்திற்கே முரண்பாடு ஏற்படுகிறது. இதற்கு இவர்கள் கூறும் சமாதானம் – தேவையற்ற உபதேசங்கள் மூலமாகக் கலங்கி நிற்கும் அர்ஜுனன், தன்னுடைய உபதேசங்களின் உண்மையான கருத்தை உணராமல் மயங்கி நிற்கிறான்; அவனுடைய செருக்கு காரணமாக உண்டான இந்த நிலையை நீக்கும்விதமாகவே க்ருஷ்ணன் தர்மம் என்ற பதத்தில் அதிகப்படியான கருத்துக்களை ஏற்றிக் கூறும்விதமாக ஸர்வதர்மாந் என்று அருளினான் – என்பதாகும். இவ்விதம் கொண்டால் ஏற்படும் முரண்பாடுகளைக் கூறுவோம். கீழே உள்ள வரிகளைக் காண்க: யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி (1-8) - இஜ்யாசார தமாஹிம்ஸா தாந ஸ்வாத்யாய கர்மணாம் அயம் து பரமோ தர்மோ யத்யோகேநாத்மதர்சநம் – பகவத் ஆராதகம், ஆசாரம், புலன்களை அடக்குதல், அஹிம்ஸை, தானங்கள், வேத அத்யயனம் உள்ளிட்ட பலவிதமான கர்மங்களுக்குள் கர்மயோகம், பக்தியோகம் மற்றும் ஞானயோகம் ஆகியவற்றால் பரமாத்மாவைக் காண்பதே சிறந்த தர்மமாகும். மஹாபாரதம் - ஸர்வேஷாமேவ தர்மாணாமுத்தமோ வைஷ்ணவோ விதி: - அனைத்து தர்மங்களுக்குள், பகவத் ஆராதனம் என்னும் தர்மமே மேன்மையானது. வ்யாஸ ஸ்ம்ருதி (2-42) - ந விஷ்ணவாராதநாத் புண்யம் வித்யதே கர்மம் வைதிகம் – விஷ்ணு ஆராதனை என்பதைத் தவிர புண்ணியமான கர்மம் எதனையும் சாஸ்த்ரங்கள் கூறவில்லை. மேலே உள்ள வரிகளில் காணப்படும் ப்ரஸித்தமான உயர்ந்த தர்மங்கள், இந்த ஸம்ஸார உலகில் உள்ள கர்மங்களில் இருந்து விடுபடச் செய்யும் தர்மங்களாக உள்ளன; இவற்றையே தர்மங்கள் அல்ல என்று உரைத்தால், கௌமுதிக ந்யாயத்தால் (அனைத்து தகுதிகள் உள்ள ஒருவனுக்கே ஒரு வஸ்து கிடைக்காதபோது, தகுதியே இல்லாத ஒருவனுக்குக் கிட்டாது என்னும் ந்யாயம்), ஸம்ஸார உலகிற்கு பரிந்துரைக்கப்படும் தர்மங்களும் தர்மங்களே அல்ல என்றாகிவிடுகிறது. அப்படி என்றால் எந்த சாஸ்த்ரங்களும் ப்ரமாணம் அல்ல என்றாகிறது. ஆக இவ்விதம் உரைப்பவர்கள் நாஸ்திகர்கள் என்றே கூறவேண்டும்.