Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 9)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
சரமச்லோகம் உபாயத்தை விதிக்கவில்லை என்பதற்கான மறுப்பு
மூலம் – சரணம்வ்ரஜ என்கிற இது இமமர்த்தம் ஜாநீஹி என்கிற மாத்ரமாய் ஒரு கர்த்தவ்யோபாயவிதியரமன்றிக்கே யொழிந்தாலோவென்னில், இது சப்தஸ்வாரஸ்ய விருத்தம். ப்ரபத்திம் தாம் ப்ரயுஞ்ஜீத ஸ்வாங்கை: பஞ்சபிராவ்ருதாம் இத்யாதிகளான ஸபரிகர ஸ்புடதர ப்ரபத்திவிதிகளோடும் விரோதிக்கும், ஈச்வரன் மோக்ஷோபாயமென்கிற இவ்வளவே இங்கு வக்தவ்யமாய் மோக்ஷாதிகாரிக்கு விதேயாந்தரமின்றிக்கே ஒழிந்தால் இவ்விடம் ப்ரஸ்துதமான பக்தியோகத்துக்கு அபேக்ஷிதமான தத்த்வோபதேசமாத்ரம்.
– கீதை (18-66) – சரணம் வ்ரஜ – சரணம் புகுவாயாக – என்பதான வாக்கியம் “ஸர்வேச்வரனே சரணம் அடையத்தக்கவன் என்னும் உண்மையை அறிவாயாக” என்ற ஞானத்தை மட்டுமே அளிக்கிறது என்றும் இந்த வரியில் பின்பற்றவேண்டிய உபாயத்தைக் விதிக்கின்ற கருத்தும் ஏதும் இல்லை என்றும் சிலர் கூறுவர்; இந்த வாதம் இந்தப் பதங்களின் உண்மையாய பொருளுக்கு விரோதமாக உள்ளதாகும். மேலும் இந்த வாதம், லக்ஷ்மீ தந்த்ரம் (28-10) - ப்ரபத்திம் தாம் ப்ரயுஞ்ஜீத ஸ்வாங்கை: பஞ்சபிராவ்ருதாம் – ஐந்து அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தியைச் செய்யக்கடவன் – போன்ற வரிகளின்படி கூறப்படுவதான, அங்கங்களுடனே இயற்றப்படவேண்டும் என்று தெளிவாக விதிக்கப்பட்ட ப்ரபத்தி விதிகளோடு விரோதமாகவே உள்ளதாகும். சரமச்லோகம் என்பது ஸர்வேச்வரனே மோக்ஷ உபாயம் என்றும், மோக்ஷத்தை விரும்பும் அதிகாரிக்கான எந்தவிதமான செயல்பாடுகளும் இங்கு கூறப்படவில்லை என்றும் சிலர் கூறுவர்; இவ்விதம் கொண்டால் சரமச்லோகம் என்பது பக்தியோகத்திற்கான தேவை என்ன என்பதை விளக்குவது மட்டுமே என்றாகிறது (அதாவது ப்ரபத்தி குறித்து இதில் கூறப்படவில்லை என்றாகிறது. இது பொருந்தாது).