Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 7)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

சேஷத்வ அநுஸந்தானம் மட்டுமே உபாயம் என்பது கண்டிக்கப்படுதல்

மூலம்– இவ்விடத்திலே சிலர் சாஸ்த்ரார்த்த தத்த்வம் தெளிந்தபோதே சேஷத்வாநுஸந்தாநம் பண்ணினானன்றோ? ஸ்வோஜ்ஜீவநேச்சா யதி தே ஸ்வஸத்தாயாம் ஸ்ப்ருஹா யதி ஆத்மதாஸ்யம் ஹரே: ஸ்வாம்யம் ஸ்வபாவம் ச ஸதா ஸ்மர என்றதுவும் பரமபுருஷார்ய ததுபாயங்களை வேண்டியிருந்தாயாகில் நீ தாஸனாய் ஈச்வரன் ஸ்வாமியாயிருக்கிறது ஸ்வபாவ ஸித்தம் என்று தத்துவத்திலே தெளிவோடே வர்த்தியென்றபடியன்றோ? ஆனால் இப்போது ஆத்ம ஸமர்ப்பணமென்று ஒரு விதேயமுண்டோ என்று சொல்லுவார்கள். இதுவும் வாக்யஜந்ய ஜ்ஞாநமாத்ரத்தாலே மோக்ஷமென்கைபோலே அநாதரணீயம். ஜித கௌஸ்துப சௌர்யஸ்ய ஸம்ராஜ: ஸர்வபாப்மநாம் சிஷ்டம் ஹ்யாத்ம அபஹாரஸ்ய நிஷ்க்ருதி: ஸ்வபரார்பணம் பரசேஷத்வ தீமாத்ரம் அதிகாரி விசேஷகம் பச்சாதாத்ம அபராஹஸ்ய நிரோதாய ச கல்பதே சேஷத்வாதிவிசிஷ்டமான ஆத்ம தத்த்வத்தைச் சாஸ்த்ரத்தாலே தெளிந்தவனுக்கு அதிகார விசேஷத்தோடும், பரிகர விசேஷத்தோடும், பலஸங்கல்ப விசேஷத்தோடும் கூடி சேஷத்வ ப்ரதிஸந்தாநகர்ப்பமான ஸ்வாத்மரக்ஷா பரந்யாஸமிறே அநாத்யபராதமூல நிக்ரஹ நிவ்ருத்திக்கு உபாயமாக விதிக்கப்படுகிற ஆத்ம ஸமர்ப்பணம். தத்த்வ ஜ்ஞாநத்தாலே மோக்ஷமென்கிற இதுவும் ஓர் உபாயாநுஷ்டாநத்தை முன்னிட்டென்னுமிடம் பஜஸ்ய மாம், மாமேகம் சரணம் வ்ரஜ இத்யாதி விதிபலப்ராப்தம்.

– ஒரு சிலர் கூறுவது, “ஒரு மனிதன் சாஸ்த்ரங்களில் கூறப்பட்ட தத்துவங்களை அறிந்தான் என்றால், தான் எம்பெருமானுடைய அடிமை என்னும் ஸம்பந்தத்தைப் அவன் புரிந்து கொண்டவன் ஆகிறான் அல்லவோ?” என்று கூறுவர். ஸ்ரீவிஷ்ணுதத்வம் - ஸ்வோஜ்ஜீவநேச்சா யதி தே ஸ்வஸத்தாயாம் ஸ்ப்ருஹா யதி ஆத்மதாஸ்யம் ஹரே: ஸ்வாம்யம் ஸ்வபாவம் ச ஸதா ஸ்மர – உன்னுடைய உயர்ந்த வாழ்க்கை மற்றும் உன்னுடைய இருப்பு ஆகியவற்றில் உனக்கு விருப்பம் இருந்தால் ஸர்வேச்வரன் ஸ்வாமியாக உள்ளதையும், நீ உன்னுடைய ஸ்வபாவமாகவே அவனது தாஸனாக உள்ளதையும் எப்போதும் சிந்தித்தபடி இருப்பாயாக – என்றது காண்க; இந்த ச்லோகத்தின் பொருள், “நீ உன்னுடைய உயர்ந்த புருஷார்த்தங்களையும், அவற்றை அடையும் உபாயங்களையும் விரும்பினாய் என்றால் நீ ஸர்வேச்வரனின் தாஸன் என்பதையும், அவனே எஜமானன் என்பதையும், இந்த ஸம்பந்தம் இயற்கையாகவே உள்ளது என்பதையும் அறியவேண்டும்”, என்பதே ஆகும் அல்லவோ? அவர்கள் மேலும் கேட்பது, “இப்படி உள்ளபோது, இவ்விதமாக உள்ள ஸம்பந்தம் பற்றி சிந்தித்தபடி உள்ளதைக் காட்டிலும், ஆத்மஸமர்ப்பணம் என்பதான விதி தனியாக உள்ளதோ?”, என்பதாகும். ச்ருதி வாக்கியங்களைப் பற்றிய ஞானம் உண்டானாலே மோக்ஷம் கிட்டிவிடும் என்று கூறும் அத்வைத வாதங்களைப் போன்று, இவர்களின் வாதமும் தள்ளப்பட வேண்டியதே ஆகும். கீழே உள்ள வரிகள் காண்க: ஜித கௌஸ்துப சௌர்யஸ்ய ஸம்ராஜ: ஸர்வபாப்மநாம் சிஷ்டம் ஹ்யாத்ம அபஹாரஸ்ய நிஷ்க்ருதி: ஸ்வபரார்பணம் – ஸர்வேச்வரனுக்குச் சொந்தமான கௌஸ்துபம் என்னும் இரத்தினத்தைத் திருடுவது போன்ற குற்றமாக உள்ளதும், அனைத்துவிதமான பாவங்களுக்கும் முதன்மையான பாவமாக உள்ளதும் ஆகிய ஆத்மாபஹாரம் (நான் சுதந்திரமானவன் என்னும் எண்ணம்) என்னும் பாவத்திற்கு ப்ராயச்சித்தமாக, தன்னுடைய அனைத்து பொறுப்புகளையும் எம்பெருமானிடம் சமர்ப்பித்தல் என்பதே சாஸ்த்ரங்களில் கூறப்பட்டுள்ளது அல்லவோ? பரசேஷத்வ தீமாத்ரம் அதிகாரி விசேஷகம் பச்சாதாத்ம அபராஹஸ்ய நிரோதாய ச கல்பதே – தான் ஸர்வேச்வரனுக்கு வசப்பட்டவன் என்பதான ஞானம் ஒருவனுக்கு முதலில் சரணாகதியின் அதிகாரத்தை அளிக்கிறது; அதன் பின்னர் அந்த எண்ணமானது ஆத்மாபஹாரத்தைத் தடுக்கும் சக்தியைக் கொண்டதாக உள்ளது. ஸர்வேச்வரனுக்கு அடிமைப்பட்டதான ஆத்மதத்வம் குறித்து ஒருவன் சாஸ்த்ரம் மூலம் முதலில் அறிகிறான். இப்படியாகக் கிட்டிய அதிகாரம், ப்ரபத்திக்கான அங்கங்கள், தனக்குக் கிட்டப்போகும் பலன் என்ன என்பது குறித்த ஞானம் போன்ற பலவற்றுடன் கூடியவனாக, தான் ஸர்வேவரனுக்குத் தாஸன் என்னும் எண்ணத்தைக் கொண்டவனாக, தன்னைக் காக்கும் பொறுப்பை ஸர்வேச்வரனிடம் ஒப்படைக்கிறான். எல்லையற்ற காலமாகச் செய்துவரும் அபராதங்களுக்கான தண்டனையிலிருந்து தப்ப உதவும் உபாயமாக உள்ள இந்தச் செயலே ஆத்மஸமர்ப்பணம் எனப்படுகிறது. தத்வஜ்ஞானம் மூலம் மோக்ஷம் கிட்டும் என்பதான இந்த வாதமும் ஒரு குறிப்பிட்ட உபாய அனுஷ்டானத்தை முன்னிட்டே கிட்டும் என்பதை கீதை (9-33) – பஜஸ்ய மாம் – என்னை உபாஸிப்பாயாக, கீதை (18-66) – மாமேகம் சரணம் வ்ரஜ – என்னை மட்டும் சரணம் அடைவாய் – என்பதான வாக்கியங்களில் அறியலாம்.