Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 6)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

ப்ரபத்தியின் தன்மை பற்றிய சந்தேகங்களும் விளக்கங்களும்

மூலம் – நமஸ்ஸு ஆத்மநிக்ஷேபபரமென்னுமிடம் நமஸ்காராத்மகம் யஸ்மை விதாயாத்ம நிவேதனம் இத்யாதிகளிலே ப்ரஸித்தம். ஸ்ரீவைகுண்டகத்யத்தில் ப்ரார்த்தநா பூர்வக ஆத்மநிக்ஷேபம் கண்டோக்தமாயிற்று. ஆகையால் அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத், ஆத்மாத்மயி பரந்யாஸ: இத்யாதிகளிலே அங்கிவிதாநம். இப்படியல்லாதபோது ஷட்விதா சரணாகதி: என்கிற வாக்யத்தில் ஆபாத ப்ரதீதியைக் கொண்டு ஸ்நாநம் ஸப்தவிதம் ஸ்ம்ருதம் இத்யாதிகளிற் சொன்ன ஸாநாநாதி பேதங்கள் போலே தனித்தனியே ப்ரபத்தி விசேஷங்களாகப் ப்ரஸங்கிக்கும். ப்ரபத்திம் தாம் ப்ரயுஞ்ஜீத ஸ்வாங்கை: பஞ்சபிராவ்ருதாம் இத்யாதி வசநாந்தர பலத்தாலே நியமிக்கப் பார்க்கில் அப்படியே ப்ரார்த்தநா விச்வாஸாதிகளை ப்ரபத்தியென்று சொல்லுகிற வசநங்களையும் நியமித்து ந்யாஸ: பஞ்சாங்க ஸம்யுத: இத்யாதிகளிற்படியே நிக்ஷேபமொன்றுமே அங்கி, இதரங்கள் அங்கங்கள் என்கை உசிதம். பூயஸாம் ந்யாயத்தைப் பார்த்தாலும் ஸாத்யகிதந்த்ர லக்ஷ்மீதந்த்ர அஹிர்புத்ந்யஸம்ஹிதாதிகளில் ப்ரபத்த்யத்யாயங்களிலே நிக்ஷேபம் அங்கியென்றே ப்ரஸித்தம். த்வமேவோபாயபூதோ மே பவேதி ப்ரார்த்தநாமதி: சரணாகதிரித்யுக்தா என்கிறதுவும் தத்ப்ரகரணத்திலே ப்ரதானமாகச் சொன்ன பரந்யாஸ பர்யந்தமென்னுமிடம் அவதாரண ஸஹக்ருத உபாய சப்தத்தாலே வ்யஞ்ஜிதம் ஓரொரு விவக்ஷைகளாலே அங்கங்களைப் ப்ரதானமாகச் சொல்லுகை லோகத்திலுமுண்டு. ஆலம்ப சப்தம் யாகபர்யந்தமானாற்போலே ”சரணம் வ்ரஜ” இத்யாதிகளின் தாதுக்கள் ந்யாஸ நிக்ஷேப த்யாகாதி சப்தங்களாலே சொல்லப்பட்ட ஆத்ம யாகத்தைச் சொல்லுகை வைதிக மர்யாதைக்கு அநுகுணம். யாகமாவது இன்ன தேவதைக்கு இன்ன ஹவிஸ்ஸு என்று இங்ஙனே ஒரு புத்தி விசேஷம். இப்படி என் ஆத்மாவாகிற ஸ்வாதுதமான ஹவிஸ்ஸு ஸ்ரீமானான நாராயணன் பொருட்டு என்றிங்ஙனேயிருப்பதொரு புத்திவிசேஷம். இவ்விடத்தில் ஆத்மயாகம் இவ்வாத்மநிக்ஷேபத்தில் ஸர்வபலார்த்திகளுக்கும் ஸாதாரணமான கர்த்தவ்ய ஸ்வரூபம் ரக்ஷாபரந்யாஸமென்னுமிடம் முன்பே சொன்னோம். ஹவிஸ்ஸமர்ப்பணாதத்ர ப்ரயோகவிதி சக்தித: ஆத்மரக்ஷா பரந்யாஸ: அகிஞ்சநஸ்யாதிரிச்யதே அத: ஸ்ரீராமமிச்ராத்யை: பரந்யாஸ விவக்ஷயா ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்த்யம்ச: ப்ரபத்திரிதி லக்ஷித: அக்ருதே து பரந்யாஸே ரக்ஷாபேக்ஷண மாத்ரத: பச்சாத் ஸ்வயத்ந விரதி: ந ப்ரஸித்தயதி லோகவத் ஆகிஞ்சந்ய பரந்யாஸோபாயத்வ ப்ரார்த்தநாத்மநாம் த்ரயாணாம் ஸௌஹ்ருதம் ஸூக்ஷ்மம் ய: பச்யதி ஸ பச்யதி இப்படி அங்கபஞ்சக ஸம்பந்நமான ஆத்மரக்ஷா பரந்யாஸமே ப்ரபத்தி சாஸ்த்ர மெல்லாவற்றிலும் ப்ரதானமான விதேயமென்று ஸ்ரீவிஷ்ணுசித்த வாதிஹம்ஸாம்புவாஹ வரதாசார்யாதிகள் ஸங்க்ரஹித்தார்கள்.

– நமோஸ்துதே என்பதில் உள்ள நம: என்னும் பதம் ஆத்ம சமர்ப்பணத்தைக் குறிக்கிறது என்னும் கருத்தை மந்த்ரராஜபத ஸ்தோத்ரம் (11) - நமஸ்காராத்மகம் யஸ்மை விதாயாத்ம நிவேதனம் – நமஸ்காரம் என்பதான ஆத்மசமர்ப்பணத்தை யாரிடத்தில் செய்து, தன்னுடைய துக்கம் அனைத்தும் நீங்கப் பெற்று, அடையவேண்டிய அனைத்தையும் அடைகிறானோ அந்த ஸர்வேச்வரனை வணங்குகிறேன் – என்பதில் காணலாம். ஸ்ரீவைகுண்டகத்யத்தில் ப்ரார்த்தனையைத் தொடர்ந்து ஆத்மசமர்ப்பணம் என்பது தெளிவாகவே உரைக்கப்பட்டது. ஆகவே கீழே உள்ள வாக்கியங்களின் மூலம் ஆத்மசமர்ப்பணம் என்பது ”காப்பாற்றவேண்டும்” என்னும் ப்ரார்த்தனையைக் காட்டிலும் வேறுபட்டது என்பதும், ப்ரார்த்தனை என்பது அங்கம் என்பதும், ஆத்மசமர்ப்பணம் அங்கி என்பதும் விதிக்கப்படுகிறது: ஸாத்யகிதந்த்ரம் - அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத் – இந்த மந்த்ரம் கொண்டு ஒருவன் ஆத்மாவை என்னிடம் சமர்ப்பணம் செய்யவேண்டும். லக்ஷ்மீதந்த்ரம் - ஆத்மாத்மயி பரந்யாஸ: - ஆத்மாவின் ரக்ஷணத்தை ஸர்வேச்வரனிடம் ஒப்படைத்தலே ஆத்மசமர்ப்பணம். இவ்விதம் கொள்ளவில்லையென்றால், அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37-2-28) - ஷட்விதா சரணாகதி: - சரணாகதி ஆறு வகைப்படும் – என்பது போன்றதான வாக்கியங்கள், உள்ளது உள்ளபடி பொருள் கொள்ளப்படும்; இவ்விதம் பொருள் கொள்ளப்பட்டால், பாத்மஸம்ஹிதை - ஸ்நாநம் ஸப்தவிதம் ஸ்ம்ருதம் – ஸ்நாநம் ஏழு வகைப்படும் – என்று கூறும் வாக்கியத்தின்படி நாம் எவ்விதம் ஸ்நாநம் என்பது ஏழு விதமாக உள்ளது என்று கொள்ளுகிறோமோ, அதே போன்று, ப்ரபத்தியின் ஐந்து அங்கங்களும், ஒவ்வொரு விதமான அங்கி (அல்லது ப்ரபத்தி) என்று கொள்ளப்பட்டுவிடும். ஆனால் லக்ஷ்மீ தந்த்ரம் (28-10) - ப்ரபத்திம் தாம் ப்ரயுஞ்ஜீத ஸ்வாங்கை: பஞ்சபிராவ்ருதாம் – ஐந்து அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தியைச் செய்யக்கடவன் – என்னும் வரியின் மூலம், அங்கங்களை மேலே கூறப்பட்டது போன்று அங்கியாகக் கருதிவிட வாய்ப்பில்லை என்று வாதம் செய்யலாம். அப்படி என்றால் அதே வாதம் மூலமும், லக்ஷ்மீ தந்த்ரம் (17-74) - ந்யாஸ: பஞ்சாங்க ஸம்யுத: - ந்யாஸம் என்பது ஐந்து அங்கங்களுடன் கூடியது – என்னும் வாக்கியம் மூலமும் ”ப்ரபத்தி என்பது ப்ரார்த்தனை, ப்ரபத்தி என்பது விச்வாஸம்” என்று கொள்ளப்பட்டு, “நிக்ஷேபம் அல்லது சமர்ப்பணம் என்பது மட்டுமே அங்கி” மற்ற அனைத்தும் அங்கங்களே என்று தீர்மானித்துக் கொள்ளவேண்டும். ஒரு குறிப்பிட்ட வசனத்தைப் பொறுத்தவரையில் ஏதேனும் சந்தேகம் உண்டானால், அந்த வசனத்திற்கு அதிகப்படியான பொருள் எவ்விதம் அளிக்கப்படுகிறதோ (பூயஸாம் ந்யாயம்), அதன்படி கொள்ளப்படலாம். இதன்படி, ப்ரபத்தியைக் குறித்து ஸாத்யகி தந்த்ரம், லக்ஷ்மீ தந்த்ரம், அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை ஆகியவற்றில் உள்ளதைக் கொண்டால், ஆத்மசமர்ப்பணம் என்னும் நிக்ஷேபம் என்பது அங்கி என்றே ஆகிறது. அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37-31) - த்வமேவோபாயபூதோ மே பவேதி ப்ரார்த்தநாமதி: சரணாகதிரித்யுக்தா – நீயே எனக்கு உபாயமாக ஆவாய் என்று ப்ரார்த்தனை செய்வதே சரணாகதி என்றாகிறது – என்னும் ச்லோகத்தில், உபாயம் என்னும் பதம் ஏவகாரத்துடன் (நீயே என்பதில் உள்ள ஏவகாரம் – நீ மட்டுமே என்னும் பொருளில் கொள்க) வருவதைக் காண்பித்து, அதுவே பரந்யாஸம் அல்லது தன்னுடைய பொறுப்புகள் அனைத்தையும் அவனிடம் ஒப்படைத்தல் என்று கூறியது காண்க. நாம் பொதுவாகவே ஒரு பொருளின் முக்கியத்துவத்தை உணர்த்த மற்றொரு பொருளை முக்கியமானது என்று மறைமுகமாகக் கூறி உணர்த்துவதைக் காண்கிறோம். ஆலம்ப என்னும் பதம் யாகம் என்பதையும் குறிக்கும் (இந்தப் பதம் கொல்லுவதையும் குறிக்கும்) என்பது போன்று, சரமச்லோகத்தில் உள்ள “சரணம் வ்ரஜ” என்பதில் உள்ள தாதுவும், இதே போன்று வேறு சில இடங்களில் உள்ள தாதுக்களும், ”ந்யாஸம், நிக்ஷேபம், த்யாகம்” போன்ற பல பதங்களால் உணர்த்தப்பட்ட ஆத்மசமர்ப்பணம் என்பதான ஆத்ம யாகத்தைக் குறிப்பதாகவே கொள்ளவேண்டும்; இவ்விதம் கொள்வதே வேதங்களில் உள்ளது போன்ற பதப்ரயோகங்களைப் பயன்படுத்துவதாக அர்த்தமாகிறது. யாகம் என்பது இன்ன தேவதைக்கு, இன்ன அவிர்பாகம் அளிக்கப்படவேண்டும் என்பதாகவே உள்ளது. இதே போன்று ஆத்மயாகம் என்பதும் ”எனது ஆத்மாவான மிகவும் இனிமையான அவிர்பாகம் என்பதி ஸ்ரீமானான நாராயணன் பொருட்டே உள்ளது” என்றே கொள்ளப்படவேண்டும். இப்படியாக உள்ள ஆத்மசமர்ப்பணம் என்பதில், அனைவராலும் செய்யப்பட வேண்டியது என்னவென்றால், தங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தல் என்பதே ஆகும்; இதனை நாம் முன்பே கூறினோம். ஹவிஸ்ஸமர்ப்பணாதத்ர ப்ரயோகவிதி சக்தித: ஆத்மரக்ஷா பரந்யாஸ: அகிஞ்சநஸ்யாதிரிச்யதே – மோக்ஷத்தின் பொருட்டு செய்யப்படும் ப்ரபத்தியில், அங்கு விதிக்கப்பட்டுள்ள விதிகளின் காரணமாக, வேறு கதி இல்லாத ப்ரபந்நன் ஒருவனுக்கு, தன்னுடைய ஆத்மா என்னும் அவிர்பாகத்தை அளிப்பதைக் காட்டிலும், தன்னுடைய ஆத்மாவைக் காப்பாற்றும் பொறுப்பை அளித்தல் என்பதே வலுவாக உள்ளது. அத: ஸ்ரீராமமிச்ராத்யை: பரந்யாஸ விவக்ஷயா ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்த்யம்ச: ப்ரபத்திரிதி லக்ஷித: - ஸ்ரீராம்மிச்ரர் உள்ளிட்ட ஆசார்யர்களால் பரந்யாஸத்தைக் கூறவேண்டும் என்னும் ஆசை காரணமாக, “தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முயலுதல் என்பதைச் செய்யாமல் இருக்கவேண்டும் என்னும் நிலையே ப்ரபத்தி” எனப்பட்டது. அக்ருதே து பரந்யாஸே ரக்ஷாபேக்ஷண மாத்ரத: பச்சாத் ஸ்வயத்ந விரதி: ந ப்ரஸித்தயதி லோகவத் – இந்த உலகில் “என்னைக் காக்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன்” என்று கூறினாலே தவிர, ”என்னைக் காக்கவேண்டும்” என்னும் வேண்டுகோளானது, நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முயலாமல் கைகூடாது. இதே போன்றுதான் பரந்யாஸம் செய்யப்படாத நிலையிலும் உள்ளது. ஆகிஞ்சந்ய பரந்யாஸோபாயத்வ ப்ரார்த்தநாத்மநாம் த்ரயாணாம் ஸௌஹ்ருதம் ஸூக்ஷ்மம் ய: பச்யதி ஸ பச்யதி – ஆகிஞ்சந்யம், பரந்யாஸம், உபாயமாக இருக்கவேண்டும் என்னும் ப்ரார்த்தனை ஆகிய அனைத்திற்கும் இடையே உள்ள ஸூக்ஷ்மமான ஒற்றுமையை யார் அறிகிறானோ அவனே ப்ரபத்தியின் ஸ்வரூபத்தை அறிந்தவன் ஆகிறான். ஆக ஐந்து அங்கங்களுடன் கூடியதான ப்ரபத்தி என்பதைப் பற்றிக் கூறும் சாஸ்த்ரங்களை அனைத்துமே ”தன்னுடைய ஆத்மாவைக் காப்பாற்றும் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கவேண்டும்” என்பதையே முதன்மையாக விதிக்கின்றன. இந்த உண்மையையே ஸ்ரீவிஷ்ணுசித்தர், வாதிஹம்ஸாம்புவஹர், வரதாசார்யர் உள்ளிட்ட பலரும் சுருக்கமாக உணர்த்தினர்.