Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 5)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

ப்ரபத்தியின் தன்மை பற்றிய சந்தேகங்களும் விளக்கங்களும்

மூலம்– இவ்வுபாய ஸ்வரூபத்தைப் பற்ற நாராயணம் ஸலக்ஷ்மீகம் ப்ராப்தும் தச்சரணத்வம் உபாய இதி விச்வாஸோ த்வயார்த்த: சரணாகதி: என்கிற அபியுக்தர் பாசுரமும் அதிகார கோடியிலும் அங்க கோடியிலும் நிற்கிற விச்வாஸத்தினுடைய ப்ராதாந்யம் சொல்லுகைக்காக வத்தனை. அப்படியே ப்ரபத்திர்விச்வாஸ:, ஸக்ருத்ப்ரார்தநாமாத்ரேண அபேக்ஷிதம் தாஸ்யதீதி விச்வாஸ பூர்வகம் ப்ரார்த்தநமிதி யாவத் என்கிற வாக்யமும் ப்ராதாந்யவிவக்ஷிதையாலே முதல் விச்வாஸத்தைச் சொல்லி அநந்யஸாத்யே என்கிற பரதமுநி ப்ரணித லக்ஷண வாக்யத்தின்படியே விச்வாஸபூர்வகம் ப்ரார்த்தநமென்று நிஷ்கர்ஷித்தது. இவ்வாக்யந்தானும் ஆத்மநிக்ஷேபம் அங்கி, இதரங்கள் அங்கங்கள் என்று சொல்லுகிற ந்யாஸ: பஞ்சாங்க ஸம்யுக்த: இத்யாதி வசநங்களாலே ப்ரார்த்தனையும் அங்கமாகையால் ரக்ஷாபேக்ஷம் ப்ரதீக்ஷதே என்கிறபடியே ஈச்வரன் அபேக்ஷாமாத்ர ஸாபேக்ஷன் என்று இவ்வங்கத்தின் ப்ராதாந்யத்தை விவக்ஷித்துச் சொன்னபடி சிறிய கத்யத்திலும் விச்வாஸபூர்வக ப்ரார்த்தனையைப் பண்ணி நமோ அஸ்து தே என்று முடிக்கையாலும் உபாய சரணசப்த ஸாமர்த்யத்தாலும் நிக்ஷேபமும் ஸித்தம்.

– ப்ரபத்தியின் ஸ்வரூபத்தை விளக்கும்விதமாக நம்பத்தகுந்தவர்களின் வாசகமான - நாராயணம் ஸலக்ஷ்மீகம் ப்ராப்தும் தச்சரணத்வம் உபாய இதி விச்வாஸோ த்வயார்த்த: சரணாகதி: - பெரியபிராட்டியுடன் கூடியபடி உள்ள ஸ்ரீமந்நாராயணனை அடைவதற்கு, அவனுடைய இரண்டு திருவடிகள் மட்டுமே உபாயம் என்னும் விச்வாஸமே த்வயமந்த்திரத்தில் கூறப்பட்ட சரணாகதி – என்றது காண்க. இந்த வரியின் உட்கருத்து என்னவென்றால், விச்வாஸம் என்பது சரணாகதி செய்பவனின் மனதில் முக்கியமாக இருத்தல் வேண்டும் என்பதும், இந்த விச்வாஸம் என்பது ப்ரபத்தியின் ப்ரதான அங்கமாக உள்ளது என்பதும் ஆகும். இதே போன்று ஸ்ரீபாஷ்யகாரர் - ப்ரபத்திர்விச்வாஸ:, ஸக்ருத்ப்ரார்தநாமாத்ரேண அபேக்ஷிதம் தாஸ்யதீதி விச்வாஸ பூர்வகம் ப்ரார்த்தநமிதி யாவத் – ப்ரபத்தி என்பது விச்வாஸமே; ஒருமுறை வேண்டி நின்றாலே போதுமானது, வேண்டியதை அளிப்பான் என்னும் விச்வாஸம் ஆகும் – என்று உரைத்தார். இந்த வாக்கியமானது முதலில் ப்ரபத்திக்கு மிகவும் முக்கியமானது விச்வாஸமே என்னும் கருத்தால் கூறப்பட்டது. மேலும் இந்த வாக்கியம், அநந்யஸாத்யே – ப்ரபத்தி என்பது விச்வாஸத்துடன் கூடிய வேண்டுதலே – என்பதான பரதமுனியின் வாக்கியத்தையும் வெளிப்படுத்துவதாக, அதாவது முதலில் விச்வாஸம் அவசியம் என்பதைக் கூறுவதாக உள்ளது. ஆத்மசமர்ப்பணம் என்பது ப்ரபத்திக்கு அங்கி என்பதும், கார்ப்பண்யம் உட்பட பலவும் அங்கங்கள் எனவும் முன்பே உரைக்கப்பட்டது. லக்ஷ்மீ தந்த்ரத்தில் (17-74) - ந்யாஸ: பஞ்சாங்க ஸம்யுக்த: - ஐந்து அங்கங்களுடன் கூடியதான ந்யாஸமே சரணாகதி எனப்படுகிறது – என்றது காண்க. ஆகவே ஸ்ரீபாஷ்யகாரரின் வாக்கியத்தில் “ப்ரபத்தி என்பது விச்வாஸத்துடன் வேண்டி நிற்பதே” என்று கூறுவது, ஐந்து அங்கங்களில் ஒன்றான எம்பெருமானின் காப்பாற்றுதலை வேண்டி நிற்கின்ற அங்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவே ஆகும் என்றாகிறது. இதனையே லக்ஷ்மீ தந்த்ரத்தில் (17-78) - ரக்ஷாபேக்ஷம் ப்ரதீக்ஷதே – ரக்ஷிக்கவேண்டும் என்னும் ப்ரார்த்தனையை எதிர்பார்க்கிறான் – என்றது காண்க. ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச்செய்த சிறிய கத்யம் எனப்படும் ஸ்ரீரங்க கத்யத்திலும் ”முதலில் விச்வாஸம் அவசியம்” என்று உரைத்து, ”நமோ அஸ்து தே” என்று முடிப்பதைக் காண்க. மேலும் அங்கு, எம்பெருமானையே உபாயமாக நாடுவதை “சரணம்” என்னும் பதம் மூலம் உரைத்தார்.