Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 3)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

ப்ரபத்திக்கு அனைவரும் தகுதியானவர்கள் என்பதற்கான ஆக்ஷேபமும் சமாதானமும்

மூலம்– இப் ப்ரபத்தியுமொரு வைதிக தர்மமன்றோ? இதுவுமொரு யாக விசேஷமாகவன்றோ ந்யாஸவித்யையில் ஓதப்படுகிறது? ஆகையால் இது ஸர்வாதிகாரமாகக் கூடுமோ? என்று சிலர் விசாரிப்பார்கள். இது ஸர்வேச்வரனை ஸர்வருக்கும் சரணமென்று ஓதுகிற ச்வேதாஸ்வதர ச்ருதிபலத்தாலே பரிஹ்ருதம், இவ்வர்த்தம். ஸர்வலோக சரண்யாய, ஸர்வயோக்யமநாயாஸம் அப்ரபாவமநூபமம் ப்ரபந்நார்த்திஹரம் விஷ்ணும் சரணம் கந்துமர்ஹஸி இத்யாதி உபப்ருஹ்மணங்களாலும், த்ரயாணாம் க்ஷத்த்ரியாதீநாம் என்று தொடங்கி சூத்ரபர்யந்தங்களான வர்ணங்களை எடுத்து ப்ரபந்நாநாம் ச தத்த்வத: என்று சொல்லுகிற ஸ்ரீ ஸாத்த்வத வசநத்தாலும், குயோநிஷ்வபி ஸஞ்ஜாதோ ய: ஸக்ருச்சரணம் கத: தம் மாதா பித்ரு ஹந்தாரம் அபி பாதி பவார்த்திஹா என்றும் சொல்லுகிற ஸநத்குமார ஸம்ஹிதா வசநத்தாலும் த்ருடீக்ருதம். ஆகையால் உபாஸநம் த்ரைவர்ணிகாதிகாரமாக அபசூத்ராதிகரணத்திலே ஸமர்த்திதமானாலும் வைதிகங்களான ஸத்யவசநாதிகள் போலே ப்ரபத்தியும் ஸாமாந்ய தர்மமாகையாலே யதாதிகாரம் வைதிகமந்த்ரத்தாலேயாதல் தாந்த்ரிக மந்த்ராதிகளாலேயாதல் ஸர்வருக்கும் ப்ரபத்த்யநுஷ்டாநத்துக்கு விரோதமில்லை. காகாதிகளும் ப்ரபந்நராகச் சாஸ்த்ரங்களிலே கேளாநின்றோம்.

– ”ப்ரபத்தி என்பது வேதங்களின் கூறப்படுகின்ற ஒரு தர்மமாக உள்ளது அல்லவோ? இது தைத்திரீய உபநிஷத்தின் நாராயண மந்த்ரத்தில் விசேஷமாக அல்லவோ ஓதப்படுகிறது? அப்படி என்றால், இது அனைவராலும் கைக்கொள்ளக் கூடியது என்று எவ்விதம் கூற இயலும் (வேதங்களை ஓதும் தகுதி படைத்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் அல்லவோ என்று கேட்பதாகக் கருத்து)?”, என்று சிலர் கேட்கலாம். இந்தக் கேள்விக்கான பதிலை, “ஸர்வேச்வரனே அனைவராலும் சரணம் என்று புகும் இடமாக உள்ளான்” என்று கூறுகின்ற ச்வேதாஸ்வதர உபநிஷத் வாக்கியத்தின் மூலம் உரைக்கலாம் (இந்த வரியானது - ஸர்வேந்த்ரிய குணாபாஸாம் ஸர்வேந்த்ரிய விவர்ஜிதம் ஸர்வஸ்ய ப்ரபுமீசாநம் ஸர்வஸ்தம் சரணம் ஸுஹ்ருத் – தான் எண்ணினால் புலன்கள் மூலம் அனைத்தையும் அறிய வல்லவனும், புலன்கள் இல்லாதவனும், கைங்கர்யத்திற்கு ஏற்ற பலன்களை அளிப்பவனும், அனைவரையும் நியமிப்பவனும், கருணை மிகுந்தவனும் ஆகிய ஸர்வேச்வரன் அனைவரும் சரணம் புகும் இடமாக உள்ளான் – என்பதாகும்). இந்தக் கருத்து கீழே உள்ள பல இடங்களின் மூலம் உறுதியாகின்றது: இராமாயணம் யுத்தகாண்டம் (17-15) - ஸர்வலோக சரண்யாய – அனைத்து உலகங்களும் சரண் புக ஏற்றபடி உள்ளவனாகிய இராமனிடம் அழைத்துச் செல்வாயாக. ஸர்வயோக்யமநாயாஸம் அப்ரபாவமநூபமம் ப்ரபந்நார்த்திஹரம் விஷ்ணும் சரணம் கந்துமர்ஹஸி – அனைத்து உயிர்களாலும் சரணம் அடையத்தக்கவனும், எளிதாக அடையக்கூடியவனும், தன்னுடைய எந்தச் செய்கையிலும் தவறுகளுக்கு இடம் அளிக்காதவனும், வேறு யாரையும் ஒப்பாகக் கூற இயலாதபடி உள்ளவனும், ப்ரபத்தி செய்தவர்களின் துன்பத்தைப் போக்குபவனாகவும் உள்ள விஷ்ணுவைச் சரணம் அடைய நீ தகுதி கொண்டவன். ஸாத்த்வத ஸம்ஹிதையில் (2-7 முதல் 2-11) - த்ரயாணாம் க்ஷத்த்ரியாதீநாம் – க்ஷத்ரியர்கள் தொடக்கமாக உள்ள மூன்று வர்ணத்தார்களும் விதிகளின்படி ப்ரபத்தி செய்து, நான்கு வ்யூஹங்களையும் மந்த்ரங்கள் இன்றி ஆராதனை செய்வதில் அதிகாரம் உள்ளது – என்றது காண்க. ஸநத்குமார ஸம்ஹிதை - குர்யோநிஷ்வபி ஸஞ்ஜாதோ ய: ஸக்ருச்சரணம் கத: தம் மாதா பித்ரு ஹந்தாரம் அபி பாதி பவார்த்திஹா – தாழ்ந்த குலத்தில் ஒருவன் பிறந்திருந்தாலும் ஸர்வேச்வரனிடம் ஒருமுறை ப்ரபத்தி செய்தால் போதுமானது; அவன் தனது தாய்தந்தையரைக் கொலை செய்தாலும், ஸம்ஸார துன்பத்தை நீக்கவல்ல ஸர்வேச்வரன் அவனைக் காப்பாற்றுகிறான். உபாஸநம் போன்றவை சூத்திரர்கள் அல்லாத மற்ற மூன்று வர்ணத்தால் மட்டுமே கைக்கொள்ளக் கூடியது, மற்றவர்களுக்கு அந்தத் தகுதி இல்லை என்று ஸ்ரீபாஷ்யத்தின் அபசூத்ராதிகரணத்தில் தீர்மானம் செய்யப்பட்டது; ஆனாலும் வேதங்களில் கூறப்படும் உண்மையான வசனங்கள் போன்று, ப்ரபத்தியும் அனைவருக்கும் தகுதியான ஒன்றே ஆகிறது. ஆகவே இந்த ப்ரபத்தியை அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப வேதங்களில் உள்ள மந்த்ரங்களின் அடிப்படையிலோ அல்லது தந்த்ரங்களில் உள்ள மந்த்ரங்கள் மூலமாகவோ யார் வேண்டுமானாலும் கைக்கொள்ள எந்தவிதமான விரோதமும் இல்லை. காகங்கள் கூட ப்ரபத்தி செய்தன என்று நாம் சாஸ்த்ரங்கள் மூலம் அறியலாம்.