Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 2)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
ஸாத்யோபாயத்தைப் பற்றிய ஞானம் அவசியம்
மூலம் – இப்படி ஸர்வஜ்ஞமாய் ஸர்வசக்தியாய்ப் பரமகாருணிகமாய் ஸர்வசேஷியாய் ஸபத்நீகமாய் ஸர்வலோக சரண்யமான ஸித்தோபாய விசேஷம் தெளிந்தாலும், ஆரோக்யம் இந்த்ரியௌல்பண்யம் ஐச்வர்யம் சத்ருசாலிதா வியோகோ பாந்தவைராயு: கிம் தத் யேநாத்ர துஷ்யதி என்கிறபடியே விவேகமில்லாதார்க்குக் குணமாய்த் தோன்றினவையும் தோஷமானபடி கண்டு ஸம்ஸார வைராக்யம் பூர்ணமானாலும் பரமாத்மநி யோரக்த: என்கிறபடியே ப்ராப்யருசியுண்டானாலும், மஹதா புண்ய பண்யேந க்ரீதேயம் காயநௌஸ்த்வயா ப்ராப்தும் துக்கவோததே: பாரம் த்வர யாவந்ந பித்யதே என்கிறபடியே த்வரை பிறந்தாலும் அநாதியாக அநுவ்ருத்தமான ஆஜ்ஞாதி லங்கநமடியாகப் பிறந்து நிற்கிற பந்தகமான பகவந்நிக்ரஹத்துக்குப் ப்ரசமநமாக மாமேகம் சரண்யம் வ்ரஜ என்று விதி வாக்யத்தாலும், ப்ரபத்யே என்று அநுஷ்டான வாக்யத்தாலும் சொல்லப்பட்ட ஸாத்யோபாய விசேஷம் தெளியாதபோது ஸித்தோபாய பூதனான ஸர்வேச்வரனை வசீகரிக்க விரகில்லை. ஆகையால் அதின் அதிகாரத்திலும், ஸ்வரூபத்திலும், பரிகரங்களிலும் வரும் கலக்கங்களை சமிப்பிக்கிறோம்.
– அனைத்தும் அறிந்தவனும், அனைத்து வலிமையும் கொண்டவனும், மிகவும் கருணை நிரம்பியவனும், தன்னுடைய பத்னியுடன் அனைத்திற்கும் எஜமானனும், அனைத்து உலகங்களில் உள்ள உயிர்களும் சரணம் புக ஏற்றவனும் ஆகிய ஸித்தோபாயமான ஸர்வேச்வரன் குறித்து ஒருவன் நன்றாக அறிந்திருக்கக்கூடும். ஆரோக்யம் இந்த்ரியௌல்பண்யம் ஐச்வர்யம் சத்ருசாலிதா வியோகோ பாந்தவைராயு: கிம் தத் யேநாத்ர துஷ்யதி – மனிதனுக்கு நல்ல ஆரோக்யம் உள்ளபோது, அவனது இந்த்ரியங்களில் உள்ள வலிமையால் பாவங்களைச் செய்ய முனைகிறான்; செல்வம் அதிகமாக இருந்தால் அதிகமான பகைவர்கள் உண்டாகி, துன்பமே விளையும்; நீண்ட ஆயுள் இருந்தால் நமது உறவினர்கள் பலரது மரணத்தைப் பார்த்தபடியே துக்கம் உண்டாகும்; ஆக இவற்றில் எதனை வைத்து இன்பமாக இருக்கமுடியும்? – என்னும் ச்லோகத்துக்கு ஏற்ப, விவேகம் அற்றவர்களுக்கு ஏற்கும்படியாகத் தோன்றுகின்ற ஸம்ஸாரம் என்பது தோஷமாகவும், ஏற்றுக் கொள்ள இயலாதபடியும் உள்ளது. இதனால் ஒருவனுக்கு ஸம்ஸாரம் குறித்து வைராக்யம் உண்டாகிறது. மேலும் ஸர்வேச்வரனை அடையவேண்டும் என்னும் ருசியானது, பரமாத்மநி யோரக்த: - ஸர்வேச்வரனை விரும்பும் ஒருவன் வேறு எதனையும் விரும்புவதில்லை – என்னும் ச்லோகத்திற்கு ஏற்ப ஒருவனுக்கு அதிகமாகலாம். இதனால் வராஹபுராணம் - மஹதா புண்ய பண்யேந க்ரீதேயம் காயநௌஸ்த்வயா ப்ராப்தும் துக்கவோததே: பாரம் த்வர யாவந்ந பித்யதே – மிகுந்த புண்ணியம் என்பதை விலையாகக் கொடுத்து வாங்கப்பட்ட ஓடம் போன்ற இந்த சரீரம் உடைவதற்குள், துன்பத்தின் அக்கரையை அடைவாயாக – என்பதற்கு ஏற்ப மோக்ஷத்தின் மீது அதிக வேகமான ருசி உண்டாகலாம். ஆனாலும் அவனுக்கு ஸாத்யோபாயம் குறித்து தெளிவாக அறியவில்லை என்றால் நடப்பது என்ன? (இதனைத் தொடர்ந்து கூறுகிறார்) எல்லையற்ற காலமாக ஸர்வேச்வரனின் ஆணைகளைத் தொடர்ந்து மீறியபடி உள்ளதால், எல்லையற்ற காலமாக ஸம்ஸாரத்தில் உழலுவதான தண்டனையைப் பெறுகிறோம்; இந்த தண்டனையை விலக்குவது எது என்றால் கீழே உள்ளவற்றில் காணப்படும் ஸாத்யோபாயம் குறித்த விசேஷமே ஆகும்: மாமேகம் சரணம் வ்ரஜ – என்னிடம் மட்டுமே சரணம் அடைவாயாக ப்ரபத்யே – நான் சரணம் புகுகிறேன் இத்தகைய ஸாத்யோபாயம் பற்றி ஒருவன் அறியவில்லை என்றால், அவன் ஸித்தோபாயமாக உள்ள ஸர்வேச்வரனைத் தன்பக்கம் வசீகரிக்க வழி ஏதும் இல்லை. ஆகவே நாம் ஸாத்யோபாயத்தின் தகுதிகள், அதன் ஸ்வரூபம், அதன் அங்கங்கள் ஆகியவை குறித்து உண்டாகும் சந்தேகங்களை இப்போது தீர்ப்போம்.