Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 36)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
ஸித்தோபாயத்தை ரஹஸ்யத்ரயத்தில் காணும் இடம்
மன்னுமனைத்துறவாய் மருண்மாற்றருளாழியுமாய்த் தன்னினைவாலனைத்தும் தரித்தோங்குந் தனியிறையாய் இன்னமுதத்தமுதாலிரங்குந் திருநாரணனே மன்னிய வன்சரண் மற்றோர் பற்றின்றி வரிப்பவர்க்கே
– எந்த நிலையிலும் உறுதியாக உள்ள அனைத்துவிதமான உறவினனாகவும், அறியாமை என்பதை நீக்கவல்ல கருணை என்னும் கடலாகவும், செயல் மூலம் அல்லாமல் தனது நினைவு மூலம் மட்டுமே அனைத்தையும் செய்யவல்ல சக்தி கொண்டவனும், ஓங்கி நிற்கின்ற ஒப்பற்ற ஸ்வாமியும், இனிமையான அமிர்தத்துடன் தோன்றிய அமிர்தமாக உள்ள பெரியபிராட்டியின் சிபாரிசு காரணமாக தயை செய்தபடி உள்ளவனும் ஆகியவன் ஸ்ரீமந்நாராயணன் ஆவான். இவனே பக்தியோகம் போன்றதான வேறு எந்தவிதமான உபாயங்களையும் கைக்கொள்ளாமல் சரணம் புகுந்தவர்களுக்கு எப்போதும் இருக்கின்ற உறுதியான உபாயமாக உள்ளான்.