Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 34)

ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்

பிராட்டியும் உபாயம் என்பதால், “உபாயம் ஒன்று மட்டுமே” என்பதற்கு முரண்பாடு இல்லை

மூலம் – ஆகையால் காம்யப்ரதாநமான அதிகாரார்ச்சநரூபத்திலும் விஷ்ணுபத்நீத்வம் ப்ரதிஷ்டிதமாகையாலே லயபோகார்ச்சநங்களிலே ப்ரவ்ருத்தராய் அநந்யப்ரயோஜநரான முமுக்ஷுக்களுக்கும் காம்யப்ரதாநமான பகவத்ரூபத்திற்போலே மாத்ருத்வாத்யு பாதிகமான ப்ரணாமாத்யாசாரங்களுக்கும் குறையில்லை. இப்படி மத்யஸ்த த்ருஷ்டியாலே ப்ரமாணிகார்த்தங்கள் தோற்றச் செய்தே பற்றினது விடாதொழியில், த்ருடபூர்வச்ருதோ மூர்க்கோ தர்மாணாமவிசாரத: வ்ருத்தாநப்ருச்சந் ஸந்தேஹாந் அந்த: ஸ்வப்ரமிவர்ச்சதி அந்யதா மந்தபுத்தீநாம் ப்ரதிபாதி துராத்மநாம் குதர்க்க வ்யாள தஷ்டாநாம் விப்ராந்தேந்த்ரிய வாஜிநாம் என்கிற தசையாம். ஆகையால் ஸித்தோபாயசப்த வாச்யவிமர்சத்தில் நாநயோர்வித்யதே பரம், யதா ஸர்வகதோ விஷ்ணு: ததைவேயம் த்விஜோத்தம, அஸ்யா தேவ்யா மநஸ்தஸ்மிந் தஸ்ய சாஸ்யாம் ப்ரதிஷ்டிதம் தேநேயம் ஸ ச தர்மாத்மா முஹூர்த்தமபி ஜீவதி, வ்யாபகாவதி ஸம்ச்லேஷாத் ஏகதத்வமிவோதிதௌ என்கிறபடியே ஏகசேஷித்வத்தாலும், ஏகாபிப்ராயதையாலும் பரஸ்பர ப்ராவண்யாதிசயத்தாலும் ஸ்வரூப ரூபாதிகளில் பிரிவற்ற அந்வய விசேஷத்தாலும் காடோபகூடாநிதே என்னும்படி ஸுச்லிஷ்டமான் விசிஷ்ட்தத்த்வம் நிற்கிற நிலை குலையாதபடி ஸவிசேஷணமான நாராயண சப்தம் ப்ரதிபாதிக்கிறபடியை அநுஸந்திக்கை ஸத்த்வஸ்தர்க்குப் ப்ராப்தம்.

– மோக்ஷத்தை மட்டுமே ப்ரதானமாகக் கொண்டு, வேறு எந்தவிதமான பலன் மீதும் ஈடுபாடு இல்லாதவர்கள் மஹாலக்ஷ்மியை எம்பெருமானின் திருமார்பில் லயித்துள்ளவளாகவும், அவனது அருகில் அவனது இன்பமான துணைவி என்னும் வடிவில் உள்ளவளாகவும் வழிபடுகின்றனர். நாம் எம்பெருமானின் ஒரு சில வகையான விக்ரஹங்களைக் கண்டு, அவன் முன்பாக உலகவிஷயங்களை அடைவது குறித்து வணங்குகிறோம் (உதாரணமாக பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள் சந்தானக்ருஷ்ணனை வணங்குவது போன்று); இதே போன்று முமுக்ஷுக்கள் வேறு பயன் எண்ணவில்லை என்றாலும், அவர்கள் மஹாலக்ஷ்மியின் தனியான ஸன்னதி முன்பாக நின்று வணங்குவதில் எந்தவிதமான குறையும் இல்லை; இந்தச் செய்கை, நாம் நமது தாயை வணங்குவது போன்றே ஆகும்; இதன் காரணம் அவளது திவ்யமங்கள விக்ரஹம் என்கு இருந்தாலும், அவள் ஸர்வேச்வரனின் பத்னியாகவே உள்ளாள் என்பது வெளிப்படை ஆகும். இது போன்று பலவிதமான ப்ரமாண வசனங்கள் நடுநிலையாளர்களால் கூறப்பட்டபோதிலும், ஒரு சிலர் தாங்கள் கூறுகின்ற வாதங்களில் மாறாமலேயே இருப்பார்கள். இவர்களின் நிலை பற்றி பின்வருமாறு உரைக்கப்பட்டுள்ளது காண்க: மஹாபாரதம் கர்ணபர்வம் (72-54) - த்ருடபூர்வச்ருதோ மூர்க்கோ தர்மாணாமவிசாரத: வ்ருத்தாநப்ருச்சந் ஸந்தேஹாந் அந்த: ஸ்வப்ரமிவர்ச்சதி – தான் முதன்முதலில் கேட்டதை மட்டுமே உறுதியாகக் கொண்டுள்ளவனும், மூடனும், எந்தவிதமான தர்மங்களை அறியாமல் உள்ளவனும், கற்றவர்களிடம் தன்னுடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெளியாதவனும் ஆகிய ஒருவன், குருடன் எவ்விதம் பள்ளத்தில் விழுகிறானோ அது போன்று விழுந்து தீமையை அடைகிறான். இதிஹாஸ ஸமுச்சயம் (33-108) - அந்யதா மந்தபுத்தீநாம் ப்ரதிபாதி துராத்மநாம் குதர்க்க வ்யாள தஷ்டாநாம் விப்ராந்தேந்த்ரிய வாஜிநாம் – மந்தமான அறிவு கொண்டவர்களாக, பெரியவர்களை நிந்திப்பவர்களாக, தவறான வாதங்கள் என்னும் நாகங்களால் தீண்டப்பட்டவர்களாக, மயக்கம் கொண்ட இந்த்ரியங்கள் என்னும் குதிரைகளைக் கொண்டவர்களாக உள்ளவர்களுக்கு எந்தவொரு விஷயமும் உள்ளது உள்ளபடித் தோன்றாமல் மாறுபட்டே தோன்றும். ஸித்தோபாயம் என்னும் பதத்தின் உண்மையான பொருளை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்ள, கீழே உள்ள வரிகளை மனதில் கொள்ளவேண்டும்: ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-8-35) - நாநயோர்வித்யதே பரம் – இவர்களைத் தவிர உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-8-17) -யதா ஸர்வகதோ விஷ்ணு: ததைவேயம் த்விஜோத்தம – அந்தணர்களில் உயர்ந்தவரே! எம்பெருமான் எவ்விதம் எங்கும் வ்யாபித்துள்ளானோ, எவ்விதம் அவனே அனைவராலும் உபாயம் என்று கொள்ளப்படுகிறானோ, அப்படியே பெரியபிராட்டியும் உள்ளாள். இராமாயணம் ஸுந்தரகாண்டம் (15-52) - அஸ்யா தேவ்யா மநஸ்தஸ்மிந் தஸ்ய சாஸ்யாம் ப்ரதிஷ்டிதம் தேநேயம் ஸ ச தர்மாத்மா முஹூர்த்தமபி ஜீவதி – சீதையின் மனம் இராமனிடமும், இராமனின் மனம் சீதையிடமும் லயித்துள்ளது. இதனால்தான் இவளும், தர்மமே வடிவான இராமனும் ஒவ்வொரு முகூர்த்த காலமும் உயிருடன் உள்ளனர். அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (4-78) - வ்யாபகாவதி ஸம்ச்லேஷாத் ஏகதத்வமிவோதிதௌ – அனைத்திலும் வ்யாபித்தபடியும், எப்போதும் சேர்ந்துள்ளபடியும் இருப்பதால், ஒரே தத்வம் என்று கூறப்படுகின்றனர். என்கிறபடியே ஏகசேஷித்வத்தாலும், ஏகாபிப்ராயதையாலும் பரஸ்பர ப்ராவண்யாதிசயத்தாலும் ஸ்வரூப ரூபாதிகளில் பிரிவற்ற அந்வய விசேஷத்தாலும் காடோபகூடாநிதே என்னும்படி ஸுச்லிஷ்டமான விசிஷ்டதத்த்வம் நிற்கிற நிலை குலையாதபடி ஸவிசேஷணமான நாராயண சப்தம் ப்ரதிபாதிக்கிறபடியை அநுஸந்திக்கை ஸத்த்வஸ்தர்க்குப் ப்ராப்தம். மேலே உள்ள வரிகளின்படி, ஒரே எஜமானன் என்று கூறும்படி இருவரும் ஒன்றாக உள்ளதாலும், ஒரே போன்று சிந்தனை கொண்டுள்ளவர்கள் என்பதாலும், ஒருவருக்கொருவர் ஏற்றவர்கள் என்று கூறும்படியாக உள்ளதாலும், ஸ்வரூபம் மற்றும் ரூபங்களில் எந்தவிதமான பிரிவும் இன்றி ஒத்துள்ளதாலும் – ஸத்வத்தில் எப்போதும் நிலையாக நிற்பவர்கள், நாராயண என்னும் பதத்தை ஸ்ரீமத் என்பதுடன் சேர்த்துப் படிக்கும்போது, தத்வமாகிய பகவானுக்கும் அவனுடைய பிரிக்க இயலாத தன்மை போன்றுள்ள பெரியபிராட்டியாருக்கும் உள்ள பிரிக்க இயலாத தன்மையை மனதிற் கொள்ளவேண்டும். இதனை எவ்விதம் மனதில் நிலைநிறுத்தவேண்டும் என்றால், சது:ச்லோகி (4) – காடோபகூடாநிதே – உனது ஸ்வரூபம் மற்றும் திருமேனியால் அவனது ஸ்வரூபம் மற்றும் திருமேனியானது தழுவப்பட்டுள்ளது – என்று கூறப்பட்டது போன்று ஆகும்.