Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 33)

ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்

பிராட்டியும் உபாயம் என்பதால், “உபாயம் ஒன்று மட்டுமே” என்பதற்கு முரண்பாடு இல்லை

மூலம்– யுவத்வாதௌதுல்யேஅபிஅபரவசதாசத்ருசமந ஸ்திரத்வஆதீந்க்ருத்வாபகவதிகுணாந்பும்ஸ்த்வஸுலபாந் த்வயிஸ்த்ரீத்வஏகாந்தாந்ம்ரதிமபதிபாரார்த்த்யகருணா க்ஷமாஆதீந்வாபோக்தும்பவதியுவயோ: ஆத்மநிபிதா என்கிறபடியே பத்நிக்கு நித்யபதிர்பாரார்த்தவ்யத்தாலே யாகதந்த்ரத்திற்போலே பதிப்ரதானமாகச் சாஸ்த்ரங்களில் உபதேசங்களுக்கும், ஏகன் யஜமாநன் என்னுமாப்போலே ஏகவ்யபதேசத்துக்கும் குறையில்லை. “தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு” என்கிறதற்குமிதுவே தாத்பர்யம். தத் அந்தர்பாவாத் த்வாம் ந ப்ருத கபிததே ச்ருதி: அபி என்கிற வழிகளும் கண்டு கொள்வது. “எம்பெருமானைச் சொன்னவிடத்திலே பிராட்டியையுஞ் சொல்லிற்றாம்” என்று தொடங்கி உடையவர் அருளிச்செய்த வார்த்தையை ஆச்சான் பக்கலிலே கேட்டு நஞ்ஜீயர் ஸங்க்ரஹித்தார்.

– ஸ்ரீகுணரத்னகோசத்தில் (34) - மேலே மூலத்தில் “யுவாத்வாதௌ” என்றுள்ள ச்லோகம்) - ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும் ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன – மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல், அடியார்களின் பகைவர்களை அழித்தல், என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு. உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன – இரக்கம் நிரம்பிய மனம், ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல், கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன. இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது– என்றது காண்க. இந்த ச்லோகத்திற்கு ஏற்ப பெரியபிராட்டியார் ஸர்வேச்வரனுக்கு வசப்பட்டே உள்ளாள். மேலும் யஜ்ஞம் முதலான பலவற்றைப் பேசும்போது யஜமானன் பற்றியே கூறப்படுவது காண்க (ஆனால் அந்த யஜமானனுடன் அவனது பத்னியும் சேர்ந்தே அந்த யஜ்ஞம் முதலியவற்றில் ஈடுபடுகிறாள். ஆக யஜமானன் என்னும் ஒரே பதம் மூலம் இருவரும் கூறப்படுவது காண்க). சாஸ்த்ரங்களில் யஜமானன் என்று ஒருவனைப் பற்றிக் கூறுவது என்பது, அங்கு அவனது பத்னியைப் பற்றிக் கூறவில்லை என்றாகாது; இருவரும் ஒன்றே என்று கூறுவது பொருத்தமே ஆகும். முதல் திருவந்தாதியில் (67) - தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு– என்று கூறுவதற்கு இதுவே கருத்தாகும். மேலும், ஸ்ரீகுணரத்னகோசத்தில் (28) - தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபிததே ச்ருதி: அபி - சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள் போன்றவை உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது? இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய். வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன. அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும், திருக்கல்யாண குணங்களாகவும் கண்டன. ஆகவேதான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்! – என்பதிலும் ஸர்வேச்வரன் என்பதிலேயே இவளும் அடக்கம் என்பது உணர்த்தப்படுவது காண்க. உடையவரின் சிஷ்யரான கிடாம்பி ஆச்சானிடம், “எம்பெருமானைப் பற்றிக் கூறும் அனைத்து இடங்களிலும் பிராட்டியும் கூறப்படுகிறாள்” என்பதை நஞ்ஜீயர் அறிந்தார்.