Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 32)

ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்

பிராட்டியும் உபாயம் என்பதால், “உபாயம் ஒன்று மட்டுமே” என்பதற்கு முரண்பாடு இல்லை

மூலம்– நாராயண சப்தத்திலும், சரண சப்தத்திலும் தோற்றுகிற குணவிசேஷ விக்ரஹ விசேஷாதி விசிஷ்டமான ஏகம் உபாயமானாற் போலே துல்ய யோகக்ஷேமமான ஸ்ரீமச்சப்தத்தில் தோற்றின நித்ய பத்நீஸம்பந்த விசிஷ்டமானாலும் உபாயைக்யத்துக்குக் குறையில்லை. உபாய விசேஷணங்களை எல்லாம் விட்டு உபாயத்தை ஏகமாக்க வேணுமென்னில், உபாயத்வமும் விசேஷணமன்றிக்கே போம். விசேஷணப்ரயுக்தமாய் விசேஷ்யத்துக்கு வரும் ஏற்றத்தால் விசேஷ்யத்துக்கு வைகுண்யாதிகள் வாராவென்று: ஸ்வத: ஸ்ரீ: த்வம்விஷ்ணோ: ஸ்வம்அஸிததஏவஏஷ: பகவாந் த்வத்ஆயத்தருத்தித்வேபிஅபவத்அபராதீநவிபவ: ஸ்வயாதீப்த்யாரத்நம்பவத்அபிமஹார்கம்நவிகுணம் நகுண்டஸ்வாதந்த்ர்யம்பவத்இதிசநசஅந்யஆஹிதகுணம் என்கிற ச்லோகத்திலே நிர்ணயிக்கப்பட்டது. விசேஷணத்தால், விசேஷ்யத்துக்கு வரும் அதிசயம்போலே விசேஷயத்துக்கு ஸ்வரூபாநுபந்தியான அதிசயமும் அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா என்கிற த்ருஷ்டாந்தத்திலே காணலாம். பாஸ்கரனுக்கும் ப்ரபைக்கும் ஸ்வதஸித்தாமான தேஜஸ்த்வம்போலே இருவருக்கும் அநந்யாதீந கல்யாணம் என்கிறபடியே ஸ்வபாவஸித்த கல்யாணதையாலே. அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா என்றும், தவ ச்ரியா என்றும், “உன் திரு” என்றும், ஸ்ரீய: ஸ்ரீ: என்றும், “திருவுக்கும் திரு” என்றும் அந்யோந்யாதிசயாவஹங்களாக விசேஷண விசேஷ்யங்களை நிர்தேசிக்கிறதற்கும் குறையில்லை. ச்ருதிபலத்தாலே த்வை ச ஸதகைசேஷீ என்கிறபடியே உபயாதிஷ்டாநம் சைகம் சேஷித்வம் என்றும் சோமாசியாண்டான் ஷடர்த்தஸங்க்ஷேபத்தில் நிஷ்கர்ஷித்தபடியே இருவரும் ஏகசேஷித்வாச்ரயரானாபடியாலே ஹவிர்விசேஷங்களிலே அக்ராவிஷ்ணு ப்ரப்ருதி களுக்குப் போலே ஆத்மஹவி: ஸமர்ப்பண ப்ரதிஸம்பந்திகளாகைக்கும் குறையில்லை.

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய். இதனால்தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன், தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான். ஒரு இரத்தினக்கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது. ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்துவிட்டு, இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே. ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா? இப்படியாக குறிப்பிட்ட தன்மைகள் மூலமாக (மஹாலக்ஷ்மி), அந்தத் தன்மைகள் கொண்ட வஸ்துவிற்கு (எம்பெருமான்) மேன்மைகள் ஏற்படும்போதிலும், அந்த வஸ்துவானது தனக்கே உரியதான மேன்மைகள் கொண்டதாகவே உள்ளது. இதனை இராமாயணம் ஸுந்தரகாண்டம் (21-15) - அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா – சூரியனை விட்டு அதன் ஒளி எவ்விதம் பிரிந்திருக்க முடியாதோ அது போன்று நானும் இராமனை விட்டுப் பிரிந்திருக்க இயலாதவள் – என்றது காண்க. அதாவது ஒளி என்பது சூரியனுக்கும், அதன் கதிர்களுக்கும் இயற்கையாகவே உள்ளதாகும். இது போன்றே இராமனுக்கு சீதைக்கும் இயற்கையாகவே அவரவர்களுக்கான குணங்கள் உள்ளன என்பதை லக்ஷ்மீ கல்யாணத்தில் ஸ்வாமி பராசரபட்டர் - அநந்யாதீந கல்யாணம் – தங்களுக்கென்றே உரிய குணங்களுடன் கூடியவர்களும், ஒருவரால் மற்றவருக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாத குணங்கள் கொண்டவர்களும் ஆகிய திவ்யதம்பதிகளை வணங்குகிறோம் – என்றார். இந்த இருவரும் ஒருவருக்கொருவர் மேன்மைகளை பரஸ்பரம் அளித்துக் கொள்கின்றனர் என்பதைக் கீழே உள்ள பல வரிகளிலும் காணலாம்: இராமாயணம் ஆரண்யகாண்டம் (37-18) - அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா – ஜனகனின் திருமகளான அந்த சீதை யாருடைய பத்தினியோ, அந்த இராமனின் தேஜஸ் அளவிட இயலாத ஒன்றாகும். ஸ்தோத்ரரத்னம் (38) - தவ ச்ரியா – உனக்கு ஏற்றபடி உள்ள மஹாலக்ஷ்மியுடன் திருவாய்மொழி (10-10-2) - உன் திரு – உனது மஹாலக்ஷ்மி ஸ்ரீகுணரத்நகோசம் (9) - ஸ்ரீய: ஸ்ரீ: - ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் அழகு சேர்க்கும் ஸ்ரீரங்கநாதா! பெரியதிருமொழி (7-7-1) - திருவுக்கும் திரு – மஹாலக்ஷ்மிக்கும் அழகு சேர்ப்பவனே! ச்ருதிகளில் கூறப்பட்ட வரிகளின் காரணமாகவும், ஸாத்வத ஸம்ஹிதையில் - த்வை ச ஸதகைசேஷீ – பெரியபிராட்டியும் எம்பெருமானும் எப்போதும் சேர்ந்தே இருந்து உலகின் எஜமானர்களாக உள்ளனர் – கூறியதற்கு ஏற்பவும், சோமாசியாண்டான் தன்னுடைய ஷடர்த்தஸங்க்ஷேபத்தில் - உபயாதிஷ்டாநம் சைகம் சேஷித்வம் – எஜமானனாக இருக்கும் தன்மை ஒன்று என்றாலும், அது இருவரிடமுமே உள்ளது – என்று தீர்மானம் செய்தது காண்க. யாகங்களில் அளிக்கப்படும் அவிர்பாகம் என்பது அக்னி மற்றும் விஷ்ணுவிற்கு, அவர்கள் ஒன்றாகவே உள்ளனர் என்பதாகவே எண்ணியபடி அளிக்கப்படுகிறது; இது போன்றே பிராட்டியும் எம்பெருமானும் ஒரே எஜமானன் என்பது போன்றே உள்ளதால், ஆத்மசமர்ப்பணம் என்பதை இந்த இருவருக்கும் ஒன்றாகவே செய்வதில் எந்தக் குறையும் இல்லை என்று கருத்து.

– த்வயத்தில் உள்ள நாராயண என்ற பதம் மூலம் பல குணங்கள் கொண்டவனாகவும், சரணௌ என்னும் பதம் மூலம் திவ்யமங்கள விக்ரஹம் கொண்டவனாகவும் உணர்த்தப்பட்டு, இந்த இரு தன்மைகளாலும் நாராயணனே உபாயம் என்பது உரைக்கப்படுகிறது; இது போன்றே, ஸ்ரீமத் என்பதன் மூலம் எப்போதும் பிராட்டியுடன் கூடியவனாகிய நாராயணன் என்பது உணர்த்தப்பட்டு, அவளுடன் சேர்ந்த அவனே உபாயம் என்பது கூறப்படுகிறது. இதனால் எந்தவிதமான முரண்பாடும் இல்லை. உபாயத்தின் தன்மைகள் அனைத்தையும் விட்ட பின்னரே ”உபாயம் என்பது மட்டும் உள்ளது” என்ற நிலை உண்டாகும் என்பதால், அனைத்து தன்மைகளையும் கைவிடவேண்டும் என்று சிலர் கூறலாம்; அப்படியானால் உபாயமாக உள்ள தர்மமும் (உபாயத்வம்) விடவேண்டியதாகிறது அல்லவோ? இங்கு ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்; அதாவது, மஹாலக்ஷ்மியுடன் கூடியுள்ளதால் எம்பெருமானுக்குச் சிறப்பான தன்மைகள் உண்டு என்று கூறுவதன் மூலம், அப்படி அவளுடன் சேர்ந்து இருப்பதன் முன்பாக அந்தச் சிறப்புகள் அவனுக்கு இல்லை என்று கூறலாகாது. இதனை ஸ்ரீகுணரத்நகோசத்தில் (31) ஸ்வாமி பராசரபட்டர் பின்வருமாறு உரைக்கிறார்: ஸ்வத: ஸ்ரீ: த்வம்விஷ்ணோ: ஸ்வம்அஸிததஏவஏஷ: பகவாந் த்வத்ஆயத்தருத்தித்வேபிஅபவத்அபராதீநவிபவ: ஸ்வயாதீப்த்யாரத்நம்பவத்அபிமஹார்கம்நவிகுணம் நகுண்டஸ்வாதந்த்ர்யம்பவத்இதிசநசஅந்யஆஹிதகுணம்