Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 27)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
உபாய தசை மற்றும் பல தசை ஆகியவற்றில் பெரியபிராட்டியின் பணி
மூலம்– உபாயோபேயபரமான வாக்யத்வயத்திலும் ச்ருதமான இவ்விசேஷணத் தினுடைய உபயோக ப்ரகாரத்தை “வேரி மாறாத பூமேலிருப்பாள் வினை தீர்க்கும்” என்றும், “நின்திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து” என்றும் நம்மாழ்வார் அருளிச் செய்தார்.அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத் என்றும், அலமேஷா பரித்ராதும் ராகவாத்ராக்ஷஸீகணம் என்றும் ஸ்ரீவால்மீகி பகவான் சரணாகதிஸாரமான ஆதிகாவ்யத்திலே நிபந்தித்தான். ஸம்ஸரார்ணவ தாரிணீம் என்று ஹிரண்யவர்க்க காச்யபாதிகளும் சொன்னார்கள். வாச: பரம் ப்ரார்த்தயிதா ப்ரபத்யேந்நியத: ச்ரியம் என்று ஸ்ரீசௌநகபகவான் விதித்தான். ஆத்மவித்யா ச தேவி த்வம் விமுக்திபல தாயிநீ என்று வஸிஷ்ட புலஸ்த்ய வரப்ரஸாத லப்த பரதேவதா பரமார்த்தய ஞானமுடைய ஸ்ரீபராசரப்ரஹ்மர்ஷி அருளிச்செய்தான். “விமுக்திபல தாயிநீ” என்கிறவிது “ஆத்மவித்யா” விசேஷணமானாலும் தத்ஸாமாநாதிகரண்யத்தாலே அது இவளுடைய விபூதியாயிற்று.
– உபாயத்தை விளக்கவல்லதாகவும், உபேயத்தைக் காண்பிக்கவல்லதாகவும் இருக்கின்ற த்வயத்தின் இரண்டு வரிகளிலும் பெரியபிராட்டியின் விசேஷணம் (அவளிடமிருந்து பிரிக்க இயலாத தன்மைகள்) கூறப்பட்டுள்ளது; இதன் ப்ரயோஜனம் என்ன என்பதை ஸ்வாமி நம்மாழ்வார் கீழே உள்ளபடி அருளிச்செய்தார்: திருவாய்மொழி (4-5-11) - வேரி மாறாத பூமேலிருப்பாள் வினை தீர்க்கும்– நறுமணம் நீங்காமல் உள்ள தாமரை மீது உள்ள மஹாலக்ஷ்மியானவள், ஜீவன்களின் அனைத்து வினைகளையும் தீர்ப்பாள். திருவாய்மொழி (9-2-1) - நின்திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து– உன்னுடைய கருணை மற்றும் மஹாலக்ஷ்மியின் கருணை ஆகியவை மூலமாக நீங்கள் வஸிக்கின்ற கோயிலைப் பெருக்கி. இதே போன்று, சரணாகதி தத்துவத்தைத் தனது சாரமாகக் கொண்ட ஸ்ரீஇராமாயணத்தில் வால்மீகிபகவான் கீழே உள்ளது போன்று அருளிச்செய்தார்: இராமாயணம் ஸுந்தரகாண்டம் (27-44) - அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத் – ராக்ஷஸிகளே! இராமன் என்னும் மிகவும் பெரிய பயத்திலிருந்து நம்மை இவளால் மட்டுமே காக்க இயலும். இராமாயணம் ஸுந்தரகாண்டம் (58-91) - அலமேஷா பரித்ராதும் ராகவாத்ராக்ஷஸீகணம் – இராமனிடமிருந்து இந்த ராக்ஷஸிகளைக் காப்பாற்றும் திறன் கொண்டவள் சீதை மட்டுமே. ஹிரண்யகர்ப்பனும் காச்யபனும் காச்யபஸ்ம்ருதியில் - ஸம்ஸரார்ணவ தாரிணீம் – ஸம்ஸாரம் என்னும் ஸமுத்திரத்திலிருந்து கரை சேர்ப்பவள் – என்றனர். சௌநக ஸம்ஹிதையில் ஸ்ரீசௌநகபகவான் - வாச: பரம் ப்ரார்த்தயிதா ப்ரபத்யேந்நியத: ச்ரியம் –சொற்கள் அனைத்திற்கும் தாத்பர்யமாக விளங்கும் பகவானை அடைய எண்ணுபவன், அவனது பத்னியாகிய பெரியபிராட்டியையும் சரணம் அடையவேண்டும் – என்றார். வஸிஷ்டர் மற்றும் புலஸ்த்யர் ஆகியோர்களிடமிருந்து பெற்ற வரம் மூலமாக பரதேவதையான ஸர்வேச்வரனைக் குறித்த உண்மையான ஞானத்தைப் பெற்றவராகிய ஸ்ரீபராசரமஹரிஷி விஷ்ணுபுராணத்தில் (1-9-20) - ஆத்மவித்யா ச தேவி த்வம் விமுக்திபல தாயிநீ – தேவியே! மஹாலக்ஷ்மீ! ஆத்மஞானம் மற்றும் மோக்ஷபலன் ஆகியவற்றை அளிப்பதை உனது ஸ்வபாவமாகவே நீ கொண்டுள்ளாய் – என்றார். இந்த ச்லோகத்தில் உள்ள “மோக்ஷம் அளித்தல்” என்பது “ஆத்மஞானம்” என்பதன் விசேஷணமாக உள்ளது என்றாலும் (அதாவது ஆத்மஞானம் என்பதிலிருந்து மோக்ஷம் பெறுவதைப் பிரிக்க இயலாது), “மோக்ஷம் அளித்தல்” என்பது இவளது செல்வமாகவே உள்ளது என்று கொள்ளவேண்டும்.