Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 26)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
த்வயத்தின் இரு வரிகளிலும் உள்ள ஸ்ரீமத் பதம்
மூலம் – சிலர் த்வயத்தில் பூர்வகண்டத்தில் ஸ்ரீமச்சப்தம் உபலக்ஷண பரமென்றும், உத்தரகண்டத்தில் ஸ்ரீமச்சப்தம் விசேஷண பரமென்றும் பிரியச் சொன்னார்கள். இவ்விடத்தில் சப்தம் ஏகரூபமாயிருக்க, ஸ்வாரஸ்யத்துக்கு பாதகமுமன்றிக்கேயிருக்க, ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத இதம் இத்யாதிகளிலே ப்ரஸித்தமான கூடஸ்த ஸம்ப்ரதாய விருத்தமாகப் பண்ணுகிற இவ்விபாகம் அநுபபந்நம். அநந்யோபாயத்வ விருத்தமான உபாயவிதித்வ ப்ரஸங்கம் இவ்விடத்தில் பாதகமானாலோவென்னில், அநந்யப்ரயோஜநத்வ விருத்தமான ப்ராப்யவிதித்வ ப்ரஸங்கத்தாலே உத்தரகண்டத்திலும் விசேஷணத்வம் தவிரப் ப்ரஸங்கிக்கும். ஆனால் இரண்டிடத்திலும் உபலக்ஷணமானாலோவென்னில், குண விக்ரஹ வ்யாபார விசேஷங்களுக்கும் இரண்டிடத்திலும் உபலக்ஷணங்களாகப் ப்ரஸங்கிக்கும். உபயுக்தங்களாகையாலே அவை விசேஷணங்களென்னில், இது பூர்வோத்தரகண்டங்களில் பத்நீஸம்பந்தத்திலும் துல்யம். உபயோக விசேஷங்கள் தத்தத்வஸ்துக்களுக்கு அநுரூபமானபடியிலே ப்ரமாண ஸம்ப்ரதாயங்களாலே கண்டு கொள்வது. வஸ்த்வநுரூபமாயிறே உபயோகமிருப்பது.
– த்வயத்தின் முதல் பகுதியில் உள்ள ஸ்ரீமத் என்னும் பதம் உபலக்ஷணமாக உள்ளது என்று சிலர் கூறுவர் (உபலக்ஷணம் என்றால் என்ன? அந்தப் பறவை அமர்ந்திருக்கும் மரமே ஆலமரம் என்று கூறும்போதும் பறவையானது ஆலமரத்திற்கு உபலக்ஷணமாகிறது. அதாவது அது அந்த நேரத்தில் ஆலமரத்தை அடையாளம் காட்ட உதவுகிறது அல்லாமல், ஆலமரத்தின் நிரந்தரமான தன்மை அல்ல). மேலும் சிலர் த்வயத்தின் அடுத்த பகுதியில் உள்ள ஸ்ரீமத் என்னும் பதம் விசேஷணமாக உள்ளது என்று சிலர் கூறுவர் (விசேஷணம் என்றால் ஒரு வஸ்துவிடம் காணப்படும் நிரந்தரமான குணங்களாகும்). இங்கு ஸ்ரீமத் என்னும் பதம் இரண்டு இடங்களிலும் ஒன்றாகவே உள்ளது; இரு இடங்களிலும் ஒரே பொருளை இப்பதத்திற்குக் கொள்வதில் எந்தவிதமான முரண்பாடும் இல்லை. இப்படி உள்ளபோது நம்முடைய பூர்வர்களின் கருத்திற்கும், நம்மாழ்வாரின் மதத்திற்கும் மாறுபட்டதான “இரு இடங்களின் உள்ள ஸ்ரீமத் பதமானது இரு வேறுபட்ட பொருளை அளிக்கிறது” என்று கூறுவது பொருந்தவில்லை. ஸ்வாமி பராசரபட்டரும் ஸ்ரீகுணரத்னகோசத்தில் (28) - ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத இதம் – ஸ்ரீரங்கநாச்சியாரே! உன்னுடைய ஸம்பந்தம் காரணமாக அல்லவோ ஸ்ரீரங்கநாதன் சுதந்திரம் என்னும் ஸ்வரூபம் கொண்டவனாக உள்ளான் – என்றது காண்க. இங்கு ஓர் ஆக்ஷேபம் எழலாம். நாம் ஸ்ரீமத் என்பதை நாராயணனிடமிருந்து பிரிக்க இயலாத ஒன்றாக த்வயத்தின் முதல் வரியிலும் கூறிவிட்டு, இரண்டு உபாயங்கள் உள்ளன (நாராயணன், மஹாலக்ஷ்மி) என்பதையும் மறுத்தால், பகவானைத் தவிர வேறு உபாயம் இல்லை என்று கூறும் ப்ரமாணங்களுக்கு இது முரணாக இருக்கும் அல்லவோ? இதற்கு சமாதானம் கூறுவோம். நீங்கள் கூறுவது போன்று த்வயத்தின் முதல் வரியின் மூலம் மஹாலக்ஷ்மியை நாராயணனிடமிருந்து பிரிக்க இயலாதவளாகவே கொண்டு, இரண்டாம் வரியில் அடையப்படும் இலக்குகள் இரண்டு (நாராயணன், லக்ஷ்மி) என்று கூறினால், இந்தக் கருத்து “எம்பெருமானைத் தவிர அடையப்படும் இலக்கு வேறு ஏதும் இல்லை” என்பதற்கு முரணாகிறதே! இங்கு மற்றொரு கேள்வி எழலாம் – நீங்கள் இறுதியாகக் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்விதமான, ஸ்ரீமத் என்னும் பதத்தை பகவானுக்கு உபலக்ஷணமாகக் கொண்டு, இதே காரணத்தின் மூலம் த்வயத்தின் இரு வரிகளிலும் பகவான் வேறுபடுத்திக் காண்பிக்கப்படுகிறான் என்று கொள்ளலாம் அல்லவோ? இதற்கு விடை அளிப்போம். ஈச்வரன் உபாயமாக இருப்பதற்கு சில குறிப்பிட்ட குணங்கள், ரூபங்கள் மற்றும் செயல்பாடுகள் அவசியம் இருத்தல் வேண்டும். இதே போன்று ஈச்வரன் அடையப்படும் இலக்காக இருப்பதற்குச் சில குறிப்பிட்ட குணங்கள், ரூபங்கள் மற்றும் செயல்பாடுகள் அவனிடம் எப்போதுமே காணப்படுகின்றன. இப்படியாக நிச்சயமாக இருத்தல்வேண்டும் என்பதான பலவும் ஈச்வரன் மட்டுமே உபாயம் என்னும்போதும், ஈச்வரன் மட்டுமே இலக்கு என்னும்போதும் இரண்டாக மாறுபட்டு உள்ளன (அதாவது உபாயம் என்னும்போது உள்ள தன்மைகள் வேறு, இலக்கு என்னும்போது உள்ள தன்மைகள் வேறு). ஆகவே இவற்றை ஈச்வரனின் விசேஷணமாகக் கொள்ளாமல் உபலக்ஷணமாகக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இவ்விதம் கொள்ளும்போது ஸர்வேச்வரன் எங்கும் உள்ளவன் என்பதாலும், கருணையே வடிவானவன் என்பதாலும் மட்டுமே அவன் அனைத்தையும் காப்பவனாக உள்ளான் என்னும் எண்ணம் கொண்டவர்களுக்கு முரணாக இருக்கும். இவர்கள் இது போன்ற தன்மைகள் உபலக்ஷணங்களாக ஏற்கமாட்டனர். இவர்கள் ஸர்வேச்வரனுடைய இந்தத் தன்மைகள், ரூபங்கள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் விசேஷணங்கள் அல்லாமல் உபலக்ஷணங்கள் அல்ல என்று கூறுவர். இதன் காரணம் இவை அனைத்தும் அவன் அனைத்தையும் ரக்ஷிக்கத் தேவையானவை என்றும் கூறுவர். இதற்கு நாம் விடை அளிப்போம். இதனையே நாம் வேறு விதமாகக் கூறுவோம் – அவனுக்கு மஹாலக்ஷ்மியுடனான ஸம்பந்தம் என்பது த்வயத்தின் முதல் மற்றும் இரண்டாம் வரியில் காணப்படுகிறது என்றும், இந்தத் தொடர்பு என்பது அவன் அனைத்தையும் ரக்ஷிக்கத் தேவையானது என்றும் கூறுவோம். ஒரு குறிப்பிட்ட வஸ்துவின் பயன் என்பது அந்த வஸ்துவின் தன்மைக்கு ஏற்றபடி உள்ளதா என்பதையும், அந்த வஸ்துவின் பயன் என்ன என்பதையும் நாம் ப்ரமாணங்கள் மூலமாகவும், பழக்கவழக்கங்கள் மூலமாகவும் அறியலாம். ஆனால் ஒரு வஸ்துவின் பயன் என்பது அதன் தன்மை மூலமாகவே அறியப்படுகிறது.