Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 25)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
பிராட்டியின் தொடர்பு குறித்து உண்டாகின்ற ஐயங்களும் விளக்கமும்
மூலம்– இப்படி நாராயண சப்தத்தில் ஸித்தமான குணவிசேஷ ஸம்பந்த விசேஷங்களடியாகப் பிறக்கும் கலக்கங்களுக்குப் பரிஹாரம் உதாஹரித்தோம். இனி லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேசோ தேவ்யா காருண்ய ரூபயா ரக்ஷக: ஸர்வஸித்தாந்தே வேதாந்தே அபி ச கீயதே என்கிறபடியே ஸபத்நீகனாய்க் கொண்டு ஸ்வரக்ஷண யஜ்ஞநீக்ஷிதனான ஸர்வேச்வரனுக்கு ஸ்ரீமச்சப்தத்தாலே சொல்லுகிற பத்நீ ஸம்பந்தத்தில் வரும் கலக்கங்களுக்கு திங்மாத்ரத்தாலே பரிஹாரம் காட்டுகிறோம்.
– இப்படியாக இதுவரை நாராயண என்னும் பதம் மூலம் வெளிப்படுவதான ஸர்வேச்வரனின் ப்ரத்யேக குணங்களைப் பற்றியும், எஜமானன் – தொண்டன் என்னும் உறவுமுறைகள் பற்றியும் உண்டான பலவிதமான சந்தேகங்களுக்கான சமாதானங்களை அளித்தோம். லக்ஷ்மீதந்த்ரத்தில் (28-14) - லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேசோ தேவ்யா காருண்ய ரூபயா ரக்ஷக: ஸர்வஸித்தாந்தே வேதாந்தே அபி ச கீயதே – கருணையே வடிவம் எடுத்தாற்போன்று இருக்கின்ற லக்ஷ்மியுடன் இருந்தபடியே ஸர்வேச்வரன் அனைத்தையும் ரக்ஷிக்கிறான் என அனைத்து ஸித்தாந்தங்களும் வேதாந்தங்களும் உரைக்கின்றன – என்றது காண்க. இந்த ச்லோகத்தில் உள்ளபடியே மஹாலக்ஷ்மியைத் தனது பத்னியாகக் கொண்டுள்ளவனும், அனைத்தையும் காப்பதை ஒரு யஜ்ஞமாகவே கொண்டுள்ளவனும் ஆகிய ஸர்வேச்வரனுக்கு, “ஸ்ரீமத்” என்னும் பதம் மூலம் உரைக்கப்படுவதான பிராட்டியுடனான ஸம்பந்தம் காரணமாக உண்டாகும் சந்தேகங்களுக்குப் பொதுவாக எவ்விதம் சமாதானம் உரைக்கப்படுமோ அப்படியே உரைப்போம்.