Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 24)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் பொறுப்பில் நமக்குத் தொடர்பு இல்லை என்பதன் கருத்து
மூலம்– ஸ்வாமீ ஸ்வசேஷம் ஸ்வவசம் ஸ்வபரத்வேந நிர்பரம் ஸ்வதத்த ஸ்வதியா ஸ்வார்த்தம் ஸ்வஸ்மிந் ந்யஸ்யதி மாம் ஸ்வயம் இது ஆத்மஸமர்ப்பண தசையில் க்யாதி லாப பூஜா பலஸங்க கர்த்ருத்வ உபாயத்வங்களாகிற தூராலற்ற பகவதநுஸந்தானக் கட்டளை. ஆகையால் தாய் முலைப்பால் போலே வருகிற ஈச்வரப்ரஸாதத்துக்கும் ஸ்தநந்தயனுடைய முலையுண்கிற வ்யாபாரம் போலே இவனுடைய அபேக்ஷாதிகள். இத்தால் ஸித்தோபாய ஸ்வரூபத்துக்குக் கொத்தை வராது.
ஸ்வாமீ ஸ்வசேஷம் ஸ்வவசம் ஸ்வபரத்வேந நிர்பரம் ஸ்வதத்த ஸ்வதியா ஸ்வார்த்தம் ஸ்வஸ்மிந் ந்யஸ்யதி மாம் ஸ்வயம் – அனைத்திற்கும் ஸ்வாமியாக உள்ள ஸர்வேச்வரன், தன்னுடைய தொண்டனாகவும் வசப்பட்டவனாகவும் உள்ள என்னை, தன்னால் அளிக்கப்பட்ட பரஸமர்ப்பணம் என்னும் புத்தி மூலமாக, என்னைக் காப்பாற்றிக் கொள்வதில் எந்தவிதமான பொறுப்பும் எனக்கு இல்லாதபடி, என்னைக் காப்பாற்றும் பொறுப்பு தன்னுடையது என்று ஏற்றுக்கொண்டு, என்னைத் தன்னிடம் தானாகவே பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறான் – என்றது காண்க. இந்த வரியானது நம்முடைய பரஸமர்ப்பண நேரத்தில் – ப்ரபலமாக வேண்டும், பலன் பெறவேண்டும், மரியாதைகள் அடையவேண்டும் என்னும் ஆசைகள், பலனில் பற்றுதல், நானே செய்கிறேன் என்னும் எண்ணம் உள்ளிட்ட பலவிதமான சேறு போன்ற தோஷங்கள் நம்மை அடையாமல் இருப்பதற்காக, எம்பெருமானை மட்டுமே எண்ணியபடி இருப்பதற்கான கட்டளை போன்றதாகும். ஆகவே இப்படியாக நம்மைக் காக்கவேண்டும் என்பது போன்றதான வேண்டுதல்களும், அதனை ஈச்வரன் ஏற்பதும் எப்படிப்பட்டது என்றால் – தானாகவே சுரந்து வருகின்ற தாய்ப்பாலும், அதனைப் பருகியபடி உள்ள குழந்தையின் செயலும் – போன்றதாகவே உள்ளது. ஆக இப்படியாக ஸித்தோபாயமான எம்பெருமானின் ஸ்வரூபத்திற்கு எந்தவிதமான தோஷமும் இல்லை.