Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 23)

ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்

நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் பொறுப்பில் நமக்குத் தொடர்பு இல்லை என்பதன் கருத்து

மூலம்– ஸர்வ ரக்ஷகனான ஈச்வரன் உண்டாயிருக்க ஸ்வரக்ஷண வ்யாபாரத்தில் நமக்கு அந்வயமில்லை என்கிற ஆப்தர் பாசுரத்துக்குத் தாத்பர்யம் சொல்லுகிறோம். யதர்த்தம் து க்ருதோ ந்யாஸ: ததர்த்தம் ந புந: க்ரியா பூர்வமப்யபராதீந ப்ரவ்ருத்தாவஸ்ய நாந்வய: யதாப்ரமாணம் ஸ்வரக்ஷணபர ஸமர்ப்பணம் பண்ணினவனுக்குப் பின்பு ஸ்வரக்ஷணார்த்த வ்யாபாரத்தில் ப்ராப்தியில்லை. முன்பு தானும் ஸ்வரக்ஷணார்த்தமாகப் பண்ணின ஸமர்ப்பணாதி வ்யாபாரமும் ஸ்வகர்த்தாவான அவன் தானே பீஜாங்குர ந்யாயத்தாலே அநாதியாக ப்ரவர்ப்பித்த கர்மப்ரவாஹ விபாக விசேஷத்திலே வந்ததொரு யாத்ருச்சிக ஸுக்ருதாதி விசேஷகாரணத்தை முன்னிட்டுக் கொண்டு பண்ணுவித்தானாகையால் நாமே நம்மை ரக்ஷித்துக் கொள்ளுகிறோமென்றிருக்கப் ப்ராப்தியில்லை. ஸர்வ ரக்ஷகனாக மூலமந்த்ராதிகளிலே சிக்ஷிதனான இவன்தானே நம்மை ஓருபாயத்திலே வ்யாபரிப்பித்து அந்த வ்யாபாரத்தாலே ப்ரஸந்நனாய் ரக்ஷிக்கிறானென்றிக்க ப்ராப்தம்.

– அனைத்தையும் காப்பாற்றுகிறவனாக ஸர்வேச்வரன் உள்ளபோது, நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் இறங்குவதற்கு நமக்கு அவசியம் இல்லை என்பதை உரைக்கின்ற சோமாசியாண்டானின் கருத்திற்கு உட்கருத்து உரைப்போம். யதர்த்தம் து க்ருதோ ந்யாஸ: ததர்த்தம் ந புந: க்ரியா பூர்வமப்யபராதீந ப்ரவ்ருத்தாவஸ்ய நாந்வய: - எந்தப் பலனிற்காக பரஸமர்ப்பணம் செய்யப்பட்டதோ, அதே பலனிற்காக மீண்டும் பரஸமர்ப்பணம் செய்தல் கூடாது; ஆத்மாவிற்கு எம்பெருமானின் கட்டளைக்குக் கீழ்ப்படிதல் என்னும் நிலை இல்லாமல், சுதந்திரமாக இயங்குவதில் தொடர்பு இல்லை – என்றது காண்க. இந்த ப்ரமாணம் மூலமாக அறியப்படுவது என்னவென்றால் – தன்னைக் காக்கும் செயல் என்பதை ஸர்வேச்வரனிடம் ஒப்படைத்த பின்னர், தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிகளில் இறங்க நமக்கு உரிமையில்லை. நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் விதமாக நாம் செய்த பரஸமர்ப்பணம் என்பது நம்முடைய ஸ்ருஷ்டி மற்றும் இருப்புக்குக் காரணமாக உள்ள ஸர்வேச்வரன் மூலமாக ஊண்டானதே ஆகும் (அதாவது நம்மைக் காப்பாற்றும் விதமாக பரஸமர்ப்பணம் செய்தல் என்பதும் நம்முடைய செயல் அல்ல, அவனால் ஆனது). செடியிலிருந்து விதை உண்டானதா, அல்லது விதையிலிருந்து செடி உண்டானதா என்பதை அறிய இயலாமல் தொடர்கின்ற ந்யாயத்திற்கு பீஜாங்குர ந்யாயம் என்று பெயர். இந்த ந்யாயம் போன்றே நமது கர்மவினைகளும், அவற்றின் பலன்களும் உள்ளன. இப்படி உள்ளபோது தற்செயலாக நடந்த ஏதோ ஒரு நல்வினை காரணமாக ஸர்வேச்வரன் நம்மை பரஸமர்ப்பணம் செய்யும்படியாகச் செய்தான். ஆகவே நம்மை நாம் காப்பாற்றிக் கொள்கிறோம் என்பது பொருந்தாது. அனைத்தையும் காப்பாற்றுபவனாக மூலமந்த்ரங்களின் மூலம் அறியப்படுகின்ற ஸர்வேச்வரன், தானாகவே வலிய வந்து, நம்மை ஓர் உபாயத்தில் நிற்க வைத்து, நம்முடைய அந்தச் செயலையே நம்மைக் காப்பாற்றுகின்ற வாய்ப்பாகக் கொண்டு, நம்மைக் காக்கிறான் என்று கருத்து.