Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 22)

ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்

எம்பெருமானுடனான ஸம்பந்த ஞானமே போதுமானது, ப்ரபத்தி அவசியம் இல்லை என்பதற்கான மறுப்பு

மூலம்–யுக்திமாத்ரத்தால் இவ்வர்த்தங்கள் சொல்லுவார்க்கு “ஸம்பந்த ஜ்ஞாநமே அபேக்ஷிதம், ரக்ஷாபேக்ஷாதிகள் வேண்டாம்” என்று சொல்லவொண்ணாது. அசித்த்ரவ்யங்களும் பசு ம்ருக பக்ஷ்யாதிகளும் ஸ்தநந்தயரும் ரக்ஷாபேக்ஷா ரஹிதங்களானாற்போல ஸம்பந்தஞானரஹிதங்களுமாயிருக்க, அவற்றை ரக்ஷிக்கக் காணாநின்றோமிறே. அப்படிக் கண்டோமாகிலும் சாஸ்த்ர பலத்தாலே இங்கு ஸம்பந்த ஜ்ஞாநம் அபேக்ஷிதமென்னில், சாஸ்த்ரம் சொன்ன கட்டளையிலே ஜ்ஞாநவிசேஷம் ஸ்வீகரிக்கவேணும். தன்னை ஈச்வரன் ரக்ஷிக்கும்போது ஸம்பந்தத்தோடே கூட விலக்காமையே வேண்டுவதென்னில், அதுவும் அநுபபந்நம். ஸுஷுப்த்யாத்ய வஸ்தைகளிலே எல்லார்க்கும் மோக்ஷம் கொடுக்கப் ப்ரஸாங்கிக்கையால், தான் விலக்குகைக்கு யோக்யதையுள்ள அவஸ்த்தையிலே விலக்காதொழிகையே அபேக்ஷிதம் என்னவுமொண்ணாது; விலக்குகைக்கு யோக்யதையில்லாத அசித்தையும், விலக்குகிற பச்சாதிகளையும், புத்த்ராதிகளையும் ரக்ஷிக்கக் காண்கையால். ஆனபின்பு யே நாதவந்தோ ஹி பவந்தி லோகே தே நாத்மகர்மாபி ஸமாரபந்தே தேஷாம் ஹி கார்யேஷு பவந்தி நாதா: சைப்யாதயோ ராம யதா யயாதே: என்கிற ச்லோகத்திலும் நாதசப்தத்தில் வ்யுத்பத்தியாலும் நிர்பரதைக்கு உபயுக்தமான ஸம்பந்த விசேஷத்தைச் சொல்லுகிற மதுப் ப்ரத்யயத்தாலும் யாசநமும் ஆத்மநிக்ஷேபமும் வ்யஞ்ஜிதமாயிற்று. அல்லாதபோது அதிப்ரஸங்காதி தோஷங்கள் வரும். “நாதவந்த:” என்கிறவிடத்தில் இத்தனை விவக்ஷை கொள்ளாதபோது லோக நீதியிலுள்ளதெல்லாம் மோக்ஷ சாஸ்த்ரத்தில் ஊஹிக்க வசந விருத்தம்.

– ஒரு சிலர், “எம்பெருமானுடன் நமக்கு உள்ள ஸம்பந்த பற்றிய ஞானம் இருந்தாலே போதுமானது, நம்மைக் காப்பாற்றும்படி வேண்டிக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை” என்று கூறுவர்; ஆனால் இவ்விதம் கூறுவது பொருத்தமானது அல்ல. ஏன் என்றால் – பசு, மான், பறவைகள், குழந்தைகள் போன்ற பலவும் தங்களைக் காப்பாற்றவேண்டும் என்று கேட்காமல் உள்ளது போன்றே, எம்பெருமானுடன் தங்களுக்கு உள்ள தொடர்பைப் பற்றிய ஞானமும் கொண்டிருக்கவில்லை; ஆயினும் அவை காப்பாற்றப்படுவதை நாம் காண்கிறோம். ஆனால் இது போன்று உள்ள இவையும், ஒரு சில இடங்களில் இவ்விதமான ஞானம் அல்லது வேண்டுதல்கள் மூலம் காப்பாற்றப்பட்டன என்பதை நாம் காண நேரிட்டாலும், இத்தகைய ”ஸம்பந்த ஞானம்” என்பதற்கு சாஸ்த்ரங்களின் அடிப்படையிலான ப்ரமாணங்கள் அவசியம் அல்லவா என்று கேட்கலாம். இதற்கு விடை அளிப்போம். நீங்கள் கேட்பது போன்று கொள்ளும்போது, அதே சாஸ்த்ரங்களின் அடிப்படை காரணமாக பக்தி மற்றும் ப்ரபத்தி ஆகியவை குறித்த ஞானமும் ஒப்புக்கொள்ளப்படவேண்டும். தன்னை ஸர்வேச்வரன் ரக்ஷிக்கும்போது, அவனுடனான ஸம்பந்தம் மட்டும் அல்லாமல், அவனது ரக்ஷிக்கின்ற செயலைத் தடுக்காமல் இருத்தல் வேண்டும் என்றும் சிலர் கூறுவர். இது ஏற்க இயலாத வாதமாகும். ஏன்? இதற்கு பதில் அளிப்போம். இவ்விதம் கொண்டால் கனவுகள் அற்ற உறக்க நிலையான ஸுஷுப்தி நிலையில் உள்ள அத்தனை ஜீவன்களுக்கும் மோக்ஷம் அளித்தே ஆகவேண்டும் (காரணம் அந்த நிலையில் அவனுடஸம்பந்தம் உள்ளது, மேலும் அவனது செயலைத் தடுப்பதில்லை) என்றாகிறது. இதற்கு விடை அளிக்கும்விதமாக, ஸுஷுப்தி நிலை நீங்கலாகத் தன்னால் அவனது ரக்ஷகத்தை விலக்க முடிந்த நிலைகளுக்கு மட்டுமே மேலே கூறப்பட்ட வாதம் பொருந்தும் என்று அவர்கள் கூறலாம். இதுவும் பொருந்தாது. ஏன்? தங்களால் அவனது ரக்ஷகத்தை விலக்க இயலாத அசேதனங்களையும், பசுக்களையும், சிறிய வயதினைரையும் அவன் ரக்ஷிப்பதைக் காணலாம் (ஆக ரக்ஷகத்தைத் தடுத்தல் கூடாது என்பது, ரக்ஷகம் பெறுவதற்கு ஒரு தகுதி அல்ல என்றாகிறது). மஹாபாரதம் வனபர்வம் (96-2) - யே நாதவந்தோ ஹி பவந்தி லோகே தே நாத்மகர்மாபி ஸமாரபந்தே தேஷாம் ஹி கார்யேஷு பவந்தி நாதா: சைப்யாதயோ ராம யதா யயாதே: - இந்த உலகில் உள்ள யாருக்கு ஸ்வாமியாக ஸர்வேச்வரன் உள்ளானோ, அவர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வதற்கான செயல்களைச் செய்ய முனைவதில்லை; பலராமா! அவர்களுடைய ரக்ஷகத்திற்குத் தேவையான செயல்களை அவர்களுடைய ஸ்வாமியாகிய ஸர்வேச்வரனே செய்வான்; யயாதிக்குச் சிபி செய்தது போன்று – என்பது போன்றதான ச்லோகங்கள் மூலமாக, காப்பாற்றப்பட வேண்டியவர்கள் அதற்கான எந்தவித முயற்சியிலும் இறங்கவேண்டிய அவசியம் இல்லை என்று கொள்ளக்கூடாது. இந்த ச்லோகத்தில் உள்ள “நாத” என்னும் பதம் “நாத்” என்னும் தாதுவிலிருந்து வந்ததாகும்; இதற்கு “காப்பாற்றவேண்டும் என்று இறைஞ்சுதல்” என்பதே பொருள் ஆகும். ச்லோகத்தில் உள்ள “நாதவந்த:” என்னும் பதம் தன்னுடைய ரக்ஷகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கு உறுப்பான சேஷ-சேஷி ஸம்பந்தத்தை வெளிப்படுத்துகிறது; இதுவே “காப்பாற்றவேண்டும்” என்ற விண்ணப்பத்தையும், சரணாகதியையும் உணர்த்துவதாக உள்ளது. இந்த ச்லோகத்தில் உள்ள “நாதவந்த:” என்னும் பதத்திற்கு இது போன்ற விளக்கம் பொருந்தாது என்று கூறினால், நாம் அன்றாட வாழ்வில் காண்கின்ற எந்த ஒரு உதாரணத்தையும் மேற்கோள் காண்பிக்கவே இயலாது, காரணம் அவை சாஸ்த்ரங்கள் உரைக்கின்ற வரிகளுக்கு முரணாகவே உள்ளதால் ஆகும்.