Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 21)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
சேஷ – சேஷி ஸம்பந்த தன்மையைக் காரணம் காண்பித்து ப்ரபத்தி அவசியம் இல்லை என்று கூறும் வாதமும், அதற்கான மறுப்பும்
மூலம் – இவர்களை விலக்கும்படி பரமர்ஷிகளும் பாஷ்யகாராதிகளும் விச்வாஸபூர்வக ப்ரார்த்தநாத்மநிக்ஷேபாதிகளைத் தாங்களும் அநுஷ்டித்து இதுக்குச் சாஸ்த்ரங்களையும் மூதலிப்பித்துக் கொண்டு உபதேச பரம்பரையும் நடத்திப் போருகையாலே சேஷித்வாதி ஸம்பந்தம் நித்யமேயாகிலும் கர்மவான்களான ஜீவர்கள் விஷயத்தில் ஈச்வரன் ஒரு ஸாத்யோபாயவிசேஷத்தை முன்னிட்டல்லது ரக்ஷியான் என்று சாஸ்த்ரநிஷ்டருக்கு வேணும். சாஸ்த்ரத்தைக் கைவிட்டால் இஸ்ஸம்பந்தம் சொல்லுகைக்கு ஈச்வரனும் கிடையாது. ஆனபின்பு ஸம்பந்தமடியாக ஈச்வரன் ரக்ஷிக்க ப்ராப்தன் என்றும், சேஷபூதனான இவன் தன்னை ரக்ஷித்துக் கொள்ள ப்ராப்தனன்றென்றும் முன்பு சொன்னதுவும் ரக்ஷ்ய ரக்ஷக பாவத்துக்கு லோகத்ருஷ்ட ப்ரக்ரியையாலே ஔசித்யம் சொன்னபடி இத்தனை. இவ்வளவே ரக்ஷைக்கு நிரபேக்ஷகாரணமென்றபடியன்று. அப்படிக் கொள்ளில் ஸர்வரும் நித்யமுக்தராகப் ப்ரஸங்கிக்கும். ஸ்வாதந்த்ர்யத்தாலே நியமம் சொல்லில் முன்பு சொன்னபடியே வைஷம்ய நைர்க்ருண்யங்கள் ப்ரஸங்கிக்கும்.
– இதற்கான சமாதானம் உரைப்போம். மஹரிஷிகளும் ஸ்ரீபாஷ்யகாரரான ஸ்வாமி எம்பெருமானாரும் தங்களுடைய வாழ்க்கையில், சரணாகதியை உணர்த்துகின்ற தகுந்த ப்ரமாணங்களை முன்னிட்டுக் கொண்டு, மஹாவிச்வாஸத்தை முன்னிறுத்தியபடி, ஸர்வேச்வரனின் ரக்ஷகத்தை வேண்டியபடி இருந்தனர். இவர்கள் இதற்கான தகுந்த ப்ரமாணங்களைக் காண்பித்தவர்களாக, தங்களுக்குப் பின்வருபவர்களுக்கு இவற்றைக் குறித்த உபதேசங்களையும் வைத்தனர். ஈச்வரனின் எஜமானத்தொடர்பு என்பது நித்யமாக உள்ளபோதிலும், தங்களது பூர்வகர்மபலன்களால் பீடிக்கப்படுகின்ற ஜீவர்கள், அவனுடைய க்ருபையைப் பெறுவதற்காக ஏதோ ஒரு உபாயத்தைக் (ஸாத்யோபாயத்தை) கைக்கொண்டால் மட்டுமே ஈச்வரன் அவர்களை ரக்ஷிக்கிறான்; இல்லையென்றால் ரக்ஷிப்பதில்லை. சாஸ்த்ரங்களை ஏற்பவர்கள் இந்த தத்துவத்தை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். மாறாக சாஸ்த்ரங்களைக் கைவிட்டால், இத்தகைய சேஷ-சேஷி ஸம்பந்தம் கூறுவதற்கு ஈச்வரனும் இல்லை என்றே ஆகிறது. எஜமானனாக உள்ளதால் தனக்கு அடிமையாக உள்ள ஜீவனை, உறவுமுறை காரணமாகக் காப்பாற்றவேண்டிய கடமை ஈச்வரனுக்கு உள்ளது என்றும்; அடிமையாக உள்ளதால் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளவேண்டிய அவசியமோ திறனோ ஜீவனுக்கு இல்லை என்றும் முன்பு கூறப்பட்டது (மாறாக மேலே ஈச்வரன் தகுந்த உபாயம் இன்றி காக்கமாட்டான் என்பது முரணாக உள்ளதே என்ற கேள்விக்கு விடை அளிக்கிறார்). இதன் கருத்து என்ன? அங்கு “காப்பாற்றப்படுகிறவன் – காப்பாற்றுபவன்” என்னும் இருவருக்கும் இடையே உள்ள உறவுமுறை என்பது, உலக வழக்கத்தில் காணப்படும் நடைமுறைகளின் அடிப்படையை வைத்து உரைக்கப்பட்டதாகும். எந்தவிதமான காரணமும் காப்பாற்றப்படுபவனுக்கு அமையாமல், காப்பவன் எப்போதும் காத்துநிற்பான் என்ற பொருள்பட அங்கு கூறவில்லை. இவ்விதம் கொண்டால் எப்போதும் அனைத்து ஜீவன்களும் ஸம்ஸாரபந்தம் என்பதே இல்லாமல், எப்போதும் நித்யமாக மோக்ஷம் அடைந்தவர்கள் என்றாகிவிடும். மாறாக தன்னுடைய சுதந்திரம் காரணமாக ஸர்வேச்வரன் ஒரு சிலரைப் பாதுகாக்கிறான், ஒரு சிலரை ஒதுக்கிவிடுகிறான் என்று கூறினால் – முன்பு உரைத்தபடி ஸர்வேச்வரன் பாரபக்ஷமாகவும் கொடுமையாகவும் நடக்கிறான் என்றாகிவிடும்.