Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 20)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
சேஷ – சேஷி ஸம்பந்த தன்மையைக் காரணம் காண்பித்து ப்ரபத்தி அவசியம் இல்லை என்று கூறும் வாதமும், அதற்கான மறுப்பும்
மூலம்–ஈச்வரன் சேஷியாயிருக்க, நாம் கர்ப்பபூதாஸ்தபோதநா: என்னுங்கணக்கிலே ஸ்தநந்தய ப்ராயராயிருக்க தாய் முலைப்பாலுக்கு ஆர்த்தனாய் அழுதல் செய்யுமளவன்றிக்கே கூலி கொடுப்பாரைப்போலே, நாம் ஆத்மஸமர்ப்பணம் பண்ணுகையும், ரக்ஷிக்க வேணுமென்று அபேக்ஷிக்கையும், விச்வஸிக்கையும் என்றாற் போலே சொல்லுகிற இவையெல்லாம் ஸ்வரூபத்துக்குப் பொருந்துமோவென்று சிலர் ஸித்தோபாயமுகத்தாலே ஸாத்யோபாயசரீரத்தை அழிக்கப் பார்ப்பார்கள்.
– ஒரு சிலர் ஸர்வேச்வரனின் க்ருபையைப் பெறுவதற்கு ஸாத்யோபாயம் என்பது அவசியம் இல்லை என்பார்கள். இதற்கு இவர்கள் கூறும் காரணம் ஸர்வேச்வரன் எஜமானனாக உள்ளதாலும், அவனுக்காக மட்டுமே நாம் அனைவரும் உள்ளதாலும், அவனுக்கே உரியவர்களாக நாம் உள்ளதாலும் என்பதாகும். இவர்கள் வைக்கின்ற வாதம் பின்வருமாறு: ஈச்வரன் நமக்கு சேஷியாகவும், நாம் அனைவரும் தாய்ப்பால் பருகும் குழந்தைகளாகவும் உள்ளோம். இராமாயணம் ஆரண்யகாண்டம் (3-1-21) - கர்ப்பபூதாஸ்தபோதநா: - குழந்தை போன்றவர்கள் என்று முனிவர்கள் இராமனிடம் உரைத்தனர் – என்று கூறுவது போன்று உள்ளோம். பசித்த குழந்தை தாய்ப்பாலுக்காக அழுவது அல்லாமல் வேறு ஏதேனும் செய்கைகள் செய்வதை யாரேனும் காண இயலுமா? இதனை விடுத்து அவனிடம் ஆத்மஸமர்ப்பணம் செய்வதும், தன்னைக் காக்கவேண்டும் என்று விரும்புவதும், ஆழ்ந்த விச்வாஸம் கொள்வதும் ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு ஏற்குமோ என்று சிலர் கேட்கலாம். இவர்கள் ஸித்தோபாயமான எம்பெருமானைக் காண்பித்து ஸாத்யோபாயங்களை நீக்க முனைவார்கள்.