Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 18)

ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்

ப்ரபத்தி உபாயம் அல்ல என்று கூறுபவர்களின் கருத்து

மூலம் –ஆகையால் ப்ரபத்தியுங்கூட உபாயமன்றென்று சிலர் அதிவாதம்பண்ணுகிறதுவும் ஸித்தோபாயத்தினுடைய ப்ராதாந்யமடியாக வித்தனை. அது ப்ரதாநமானபடி ப்ரஸாதங்களாலே ப்ரதிபந்தகமான நிக்ரஹம் சமித்தால் ஸ்வாபாவிகாநுபவத்துக்குப் ப்ரயோஜகமாகையாலே. அதெங்ஙனேயென்னில், ரத்நத்துக்கு அழுக்கற்றால் வரும் ஸ்வாபாவிகமான ப்ரபாவிகாஸமும் அதுக்கு அநுரூபமான பகவத்ஸங்கல்பமாத்ரத்தாலேயானாற் போலே முக்தனுக்கு வரும் ஜ்ஞானவிகாஸாதிகளும் அதுக்கு அநுரூபமாய்க் கொண்டு வ்யவஸ்திதமான பகவத்ஸங்கல்பமடியாகவாயிருக்கும். இப்படி நித்யர்க்கும். இவ்வர்த்தத்தை இச்சாத ஏவ தவ விச்வபதார்த்தஸத்தா என்று அபியுக்தர் ஸங்க்ரஹித்தார்கள். ஆகையால் ஸித்தோபாயம் ப்ரதாநமேயாகிலும் தத்வசீகரணார்த்தமான ஸாத்யோபாயாநுஷ்டா நத்துக்கு ”இன்றென்னை” இத்யாதி பூர்வாசார்யவாக்ய விரோதமில்லை. யோ மே கர்ப்பகதஸ்யாபி வ்ருத்திம் கல்பிதவாந் ப்ரபு: சேஷவ்ருத்திவிதாநே அபி கிம் ஸுப்தஸ்ஸ: அத வா ம்ருத: இத்யாதிகளும் ரக்ஷகாந்தரம் தேடாமைக்குச் சொன்னவையத்தனை, அல்லாதபோது போஜநாதி வ்யாபாரங்களும் தவிரவேணும். ஸ்வயம் ம்ருத்பிண்டபூதஸ்ய பரதந்த்ரஸ்ய தேஹிந: ஆஜ்ஞோ ஜந்துரநீச: அயம் ஆத்மநஸ்ஸுகதுக்கயோ: ஈச்வரோப்ரேரிதோ கச்சேத் ஸ்வர்க்கம் வா ச்வப்ரமேவ வா அப்ரமேயோ அநியோஜ்யச்ச யத்ர காமகமோ வசீ மோததே பகவாந் பூர்த்தை: பால: க்ரீடநகைரிவ இத்யாதிகளில் ஜீவனுடைய பாரதந்த்யமும், ஈச்வரன் இவனுடைய கர்மாநுகுணமாக நடத்தும்படியுஞ் சொன்னவித்தனை. இப்பாட்டுக்கும் இவ்வசநங்களுக்கும் இப்படி தாத்பர்யமல்லாதபோது ஸர்வசாஸ்த்ர விரோதமும் பூர்வாபரவிரோதமும் வரும்.

– ஆகவே ப்ரபத்தி என்பது ஓர் உபாயம் அல்ல என்று மிகைப்படுத்தி ஒரு சிலர் கூறும் வாதங்கள் அனைத்தும், ஸித்தோபாயமான எம்பெருமானே முதன்மையான உபாயமாக இருப்பதன் காரணமாகவே ஆகும். ஸித்தோபாயம் என்பது மிகவும் முதன்மையாக உள்ளது; எப்படி என்றால், தகுந்த ப்ராயச்சித்தம் காரணமாக செய்த தவறுகளுக்கான தண்டனைகளை எம்பெருமான் தள்ளுபடி செய்யும்போது, இத்தகைய ஸித்தோபாயம் என்பதே ஆத்மாவின் ஸ்வபாவத்துக்கு ஏற்றபடி இருந்து, பகவத் அனுபவத்தை அளிக்கிறது. இது எப்படி என்பதைக் கூறுவோம். ஒரு இரத்தினக்கல்லின் மீது படிந்துள்ள அழுக்குகளை நீக்கினால், தன் இயல்பான ஒளியுடன் மிகவும் ப்ரகாசமான ஒளிர்கிறது; ஆனால் அந்தக் கல்லின் இயல்பான ப்ரகாசம் என்பது, “இந்தக் கல்லிற்கு இந்த ப்ரகாசம் இருக்கட்டும்” என்று எம்பெருமான் ஸங்கல்பித்ததாலேயே உண்டாகிறது. இது போன்றே முக்தன் ஒருவனுக்கு உண்டாகின்ற ஞானப்பெருக்கம் உள்ளிட்ட பல தன்மைகள், பகவத்ஸங்கல்பம் காரணமாகவே உண்டாகிறது. இது போன்ற நிலையே நித்யஸூரிகளுக்கும் உள்ளது. இதனையே நன்கு அறிந்தவர்கள் ஸ்ரீவைகுண்டஸ்தவம் (36) - இச்சாத ஏவ தவ விச்வபதார்த்தஸத்தா – உன்னுடைய இச்சையின் காரணமாகவே இந்த உலகத்தில் ஒரு பொருளாக இருக்கின்ற நிலை எங்களுக்கு உண்டானது – என்று சுருக்கமாக உரைத்தனர். ஆகவே ஸித்தோபாயம் என்பது முதன்மையான உள்ளபோதிலும், அவனுடைய கருணையைப் பெறுவதான ஸாத்யோபாயமும் கைக்கொள்ளப்பட வேண்டும். இந்தக் கருத்து, திருவாய்மொழி (10-8-9) – இன்றென்னை – என்பதில் உள்ள பூர்வர்களின் கருத்துடன் எந்த முரண்பாடும் கொள்ளவில்லை. விஷ்ணுதர்மம் - யோ மே கர்ப்பகதஸ்யாபி வ்ருத்திம் கல்பிதவாந் ப்ரபு: சேஷவ்ருத்திவிதாநே அபி கிம் ஸுப்தஸ்ஸ: அத வா ம்ருத: - எந்த ஒரு ஸர்வேச்வரன் நான் எனது தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதும் பிழைக்கும்படியான வழிகளைச் செய்தபடி இருந்தானோ அவன், நான் இப்போது பிறந்து பின்னர் என்னைப் பிழைக்கவைக்கும் உபாயங்களின் விஷயத்தில் உறங்குகிறானோ அல்லது மறைந்தானோ – என்றது காண்க. இந்த வரியானது ஸர்வேச்வரன் மட்டுமே உபாயம் என்பதையும், ஜீவன் வேறு எந்தவிதமான உபாயத்தையும் கைக்கொள்ள வேண்டியதில்லை என்பதையும் உணர்த்துவதற்காகக் கூறப்படுவதாகும். இதன் உட்கருத்து நம்மைக் காக்க வேறு எதனையும் நாடக்கூடாது என்பதே ஆகும். இவ்விதம் கொள்ளவில்லை என்றால் உண்ணுவது போன்ற செயல்களைக் கூடச் செய்யவேண்டாம் என்றாகிவிடும். இதிஹாஸ ஸமுச்சயம் - ஸ்வயம் ம்ருத்பிண்டபூதஸ்ய பரதந்த்ரஸ்ய தேஹிந: - ஈச்வரனின் உதவி இல்லையென்றால் ஜீவன் மண்கட்டி போன்று மற்றவர்களுக்கு வசப்பட்டுத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் திறன் கூட அற்றவனாக உள்ளான். மஹாபாரதம் சாந்திபர்வம் (12-36) - ஆஜ்ஞோ ஜந்துரநீச: அயம் ஆத்மநஸ்ஸுகதுக்கயோ: ஈச்வரோப்ரேரிதோ கச்சேத் ஸ்வர்க்கம் வா ச்வப்ரமேவ வா – ஜீவன் அறிவற்றவனாகவும், தன்னுடைய சுகதுக்கங்களைக் கூட ஈட்டுவதற்குத் திறன் அற்றவனாகவும் உள்ளான். ஈச்வரனால் நியமிக்கப்பட்டு ஸ்வர்க்கமோ, நரகமோ செல்கிறான். மஹாபாரதம் ஸபாபர்வம் (40-78) - அப்ரமேயோ அநியோஜ்யச்ச யத்ர காமகமோ வசீ மோததே பகவாந் பூர்த்தை: பால: க்ரீடநகைரிவ – ஸர்வேச்வரன் அனைத்தும் நிரம்பியவன், யாராலும் ஏவத் தகாதவன், எங்கே செல்ல எண்ணுகிறானோ அங்குச் செல்லும் திறன் கொண்டவன், அனைத்தையும் தனது வசத்தில் வைத்துள்ளவன், குழந்தை விளையாட்டுப் பொம்மைகள் கொண்டு விளையாடுவது போன்று, உலகில் உள்ள அனைத்தையும் வைத்துக் கொண்டு விளையாடியபடி உள்ளான். மே உள்ள வரிகளின் மூலம் ஜீவன் ஸர்வேச்வரனுக்கு மட்டுமே வசப்படுதலையும், ஈச்வரன் ஜீவனுடைய கர்மங்களுக்கு ஏற்ப வழிநடத்துகிறான் என்பதையும் கூறுவதாக உள்ளன; அதாவது எதனையும் விடும்படி உரைக்கவில்லை. இதே போன்ற கருத்தைத் திருவாய்மொழி பாசுரத்திற்கும், மேலே உள்ள ச்லோகங்களுக்கும் கொள்ளவில்லை என்றால், சாஸ்த்ரங்களுடன் விரோதம் ஏற்படும்; மேலும் முன்னர் கூறியவற்றுக்கு முரண்பாடு உண்டாகும்.