Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 15)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
ஸர்வேச்வரனின் கருணையால் உண்டாகும் நன்மைகள்
மூலம்– இங்குக் காருண்யமாவது பரஹித ப்ரவணதை. இது த்ரிவித சேதநர்களுடைய ஸத்தா ஸ்திதிகளுக்கும், அநுகூல வ்ருத்திகளுக்கும், நித்யருடைய நித்யாநுபவத்துக்கும், முக்தருடைய அநாவ்ருத்திக்கும், லீலாவிபூதியில் ஸாமாந்ய ஸ்ருஷ்ட்யாதிகளுக்கும், ஸ்வாவதாரரூபையான சுத்த ஸ்ருஷ்டிக்கும், சாஸ்த்ரப்ரவர்த்தநத்துக்கும், அதடியாகத் தத்வஹித விஷயமான ஜ்ஞாநத்தைப் பிறப்பிக்கைக்கும், மோக்ஷ ச்ரத்தையை உண்டாக்குகைக்கும், இது கொடுக்கைக்கு ஸ்யாஜமான ஸுக்ருத விசேஷத்துக்கும், அதிகாராநுரூபங்களான நிக்ரஹசமநோபாயங்களைக் கொடுக்கைக்கும், இவற்றில் கரண ப்ரேரண தசையில் ஸஹகாரியாய் நிற்கைக்கும், உபாஸகனுக்கு அந்தராயம் வந்தால் ப்ரதிஸமாதாநம் பண்ணுவிக்கைக்கும், அகிஞ்சநர்க்கு உபாய ஸ்தாநத்திலே நின்று நிரபாயமாக ரக்ஷிக்கைக்கும், இவ்வ்யாஜங்களைக் கொண்டு ப்ரஸந்நனாய் அநாதிகாலம் பண்ணின அநந்த மஹாபாரதங்களை அநாதரித்து அநந்த ஸுகத்திலே விச்ரமிக்கும்படி ஸம்ஸார நிவர்த்தகனாகைக்கும், ஆர்த்தப்ரபந்நர்க்கு அப்போதே மோக்ஷங் கொடுக்கைக்கும், இருந்த நாள் நிரபராதனாயிருக்க வேணுமென்று பலம் கோல மறந்த த்ருப்தப்ரபந்நனுக்குப் ப்ராரப்தகர்மவசத்தாலே புகுந்த அபராதத்துக்கு அநுதாபத்தை விளைப்பித்து அதிகாராநுரூபமான ப்ராயச்சித்த விசேஷத்திலே மூட்டுகைக்கும், அங்ஙன் ம்ருதுப்ரக்ருதிகளல்லாதார்க்கு யமவிஷயகமநமும் கோலின பலத்துக்குப் ப்ரதிபந்தமும் வாராதபடி பண்ணி உபக்லேசங்களாலே சிக்ஷிக்கைக்கும் ப்ரதாநமான ஸாமாந்ய நிதாநமாயிருக்கும்.
– காருண்யம் என்பது அனைவருக்கும் நன்மையை மட்டுமே செய்யவேண்டும் என்னும் ஈடுபாடு ஆகும். இப்படிப்பட்ட ஈச்வரனின் காருண்யம் என்பது பின்வரும் பலவற்றிலும் வெளிப்படுகிறது: பத்தர், முக்தர் மற்றும் நித்யர் ஆகிய மூன்றுவிதமான சேதநர்களின் ஸ்ருஷ்டி மற்றும் இருப்பு அவர்கள் ஈச்வரனின் மனதிற்கு ஏற்ற செயல்களில் மட்டுமே ஈடுபடுதல் நித்யஸூரிகள் எப்போதும் அவனை அனுபவித்தபடி உள்ள நிலை ஸம்ஸார பந்தங்களிலிருந்து மீண்டு முக்தி அடைந்தவர்கள் மீண்டும் ஸம்ஸாரத்திற்குத் திரும்பாத நிலை லீலாவிபூதியில் உள்ள பலவற்றையும் ஸ்ருஷ்டி செய்தல் தன்னுடைய அவதாரங்கள் என்னும் தூய்மையான ஸ்ருஷ்டிகள் சாஸ்த்ரங்கள் தழைத்தோங்குவதற்கும், அதன் மூலமாக நன்மைகள் மற்றும் உண்மைகள் பற்றிய ஞானம் அடையவைத்தல் மோக்ஷத்தின் மீது ஆசை கொள்ளும்ப்படிச் செய்தல் மோக்ஷ ஆசையைத் தூண்டவல்ல காரணமாக இருக்கின்ற நன்மை பயக்கும் செயல்களைச் செய்யும்படிச் செய்தல் தன்னுடைய ஆணைகளை மீறுவதால் கிட்டக்கூடிய தண்டனைகளில் இருந்து தப்பவைக்கும் உபாயங்களை அவரவர்களின் தகுதிக்கு ஏற்பச் செய்யும்படித் தூண்டுதல் இவ்விதமான உபாயங்களில் ஜீவன் தன்னுடைய புலன்களைத் தூண்டி செயலாற்றும் நிலையில் உள்ளபோது, அவனுக்கு உதவி செய்தல் உபாஸகன் ஒருவனுக்கு ஏதேனும் இடையூறு உண்டானால், அதனை நீக்கும்விதமாக அதற்கான எளிய ப்ராயச்சித்தம் செய்யும்படிச் செய்தல் மற்ற உபாயங்கள் அனைத்தையும் கைவிட்டு நிற்கின்ற ப்ரபந்நர்களுக்கு, அந்த உபாயங்கள் என்ன செய்யுமோ அதனைத் தானே செய்து, அவர்களை அனைத்து ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றுதல் ஒருவனது உபாயங்களையே காரணமாகக் கொண்டு, அவன் எல்லையற்ற காலமாகச் செய்துவரும் அபராதங்களைத் தள்ளி, இந்த ஸம்ஸார உலகத்திலிருந்து மீட்டு, எல்லையற்ற ஆனந்தத்தில் ஓய்வெடுக்கும்படிச் செய்தல் மோக்ஷம் பெறுவதில் காலதாமதம் பொறுக்காத ஆர்த்தப்ரபந்நர்களுக்கு உடனடியாக மோக்ஷம் அளித்தல் உடனடியாக மோக்ஷம் பெற விரும்பாமல், ப்ரபத்தி செய்யும்போது எதிர்காலங்களில் பாவங்கள் செய்யாமல் இருக்கவேண்டும் என்று விண்ணப்பம் செய்ய மறந்த ப்ரபந்நர்கள் இருப்பார்கள். அவர்கள், பலன் தரத்தொடங்கிவிட்ட (ப்ராரப்தகர்மங்கள்) கர்மங்களின் காரணமாக ஏதேனும் அபராதங்கள் செய்யக்கூடும். இதற்கான ப்ராயச்சித்தங்களை அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப செய்யும்படித் தூண்டுதல் இப்படி ப்ராயச்சித்தம் செய்யாமல் கல்மனதுடன் உள்ளவர்கள் யமலோகம் செல்லாதபடியும், ப்ரபத்தியானது பலிக்கும்படியும் செய்தல்; அத்தகைய தவறுகளுக்காகச் சிறிய தண்டனைகள் அனுபவிக்கும்படிச் செய்தல்