Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 12)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
ப்ரபத்தி அவசியம் அற்றது என்ற வாதத்திற்கான பதில்
மூலம் – இப்படியானால் “இன்றென்னை” என்கிற பாட்டுக்கும் இதுக்கு மூலமான வசனங்களுக்கும் நிர்வாஹம் என்னென்னில், அது சொல்லுகிறோம் – ஈச்வரனுக்கு ஸஹஜங்களான ஸ்வாதந்த்ர்யகாருண்யங்களினுடைய ப்ராதாந்யத்தாலே இவற்றுக்கு வ்யாஜபூதங்களான விசேஷ காரணங்களை அநாதரித்து, “பண்டு என்னை பராங்முகனாக்குகைக்கும் இன்று என்னை அபிமுகனாக்குகைக்கும் உன் ஸ்வாதந்த்ர்யமும் க்ருபையுமொழிய வேறொரு ப்ரதாந காரணம் கண்டிலேன்; எனக்குக் காட்டாதே ஸ்வத:ஸர்வஜ்ஞனான நீ கண்டதுண்டாகில் அருளிச் செய்யவேணு”மென்ன, ஈச்வரன் நிருத்தரனாயிருக்கிற விருப்பாலே ஸ்வாதந்த்ர்ய க்ருபைகளினுடைய ப்ராதாந்யத்தை நாட்டுக்கு வெளியிடுகிறார். இத்தால் இச்சேதநனை லீலோபகரணமாக்குகைக்கு ப்ரதாந காரணம் ஈச்வர ஸ்வாதந்த்ர்யம்; இதுக்கு ஸஹகாரி காரணம் ப்ரவாஹாநாதியான ஸ்வதந்த்ராஜ்ஞாதிலங்கனம். இவனை போகோபகரணமாக்குகைக்கு ப்ரதாந காரணம் ஈச்வரனுடைய ஸ்வாபாவிக காருண்யம்; இதுக்குப் ப்ரதிபந்தகமான ஈச்வர நிக்ரஹத்தை சமிப்பித்துக் கொண்டு ஸஹகாரி காரணமென்று பேர்பெற்றது. இவனுடைய ஸுக்ருதவிசேஷ த்வாரக க்ருபையடியாக வந்த வசீகரண விசேஷங்களென்று ஈச்வரனுடைய ஸ்வபாவத்தையும் வைஷம்ய நைர்க்ருண்யங்களில்லாமையும் பந்த மோக்ஷாதி வ்யவஸ்தையையும் ப்ரமாண ப்ரதிநியதமானபடியிலே அநுஸந்தித்து, ஸ்வதந்த்ரனுடைய க்ருபையிலே ஊன்றிப் போரவடுக்கும் என்று கருத்து.
– மேலே கூறியது போன்று கொண்டால், மேலே கூறப்பட்ட திருவாய்மொழி (10-8-9) – இன்றென்னை – என்னும் பாசுரத்திற்கும், அந்தப் பாசுரத்திற்கு ப்ரமாணமாக உள்ள சாஸ்த்ரங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைக்கு என்ன விளக்கம் (அதாவது - என்னை ஏன் முன்பே கைவிட்டு, இப்போது எனது மனதில் புகுந்தான் என்று ஆழ்வார் கேட்க, அதற்கு எம்பெருமானிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை என்ற நிலைக்கும், எம்பெருமானே அனைத்து காலத்திலும் அனைவருக்கும் ரக்ஷகனாக உள்ளான் என்னும் கருத்திற்கும் உள்ள முரண்பாட்டிற்கான விளக்கம்) அளிக்கமுடியும்? இதனை விளக்குவோம். ஈச்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்திற்கும் (சுதந்திரமாக செயலாற்றுதல், எந்தவிதமான தடையும் இல்லாத ஸங்கல்பம் போன்றவை), அவனுடைய கருணைக்கும் ஆழ்வார் முக்கியத்துவம் அளிக்கிறார். இதன் காரணமாக தான் அவனைப் பற்றுவதற்குச் செய்யும் யுக்திகளைத் தள்ளுகிறார். இதனை அவர், “முன்பு நீ என்னைப் பாராமுகமாகக் கைவிட்டதற்கும், இப்போது என்னை உனக்கு மிகவும் வேண்டியவனாக ஏற்றதற்கும் உன்னுடைய சுதந்திரம் மற்றும் காருண்யம் அல்லாமல் வேறு எந்தக் காரணத்தையும் நான் முக்கியமானதாக எண்ணவில்லை; ஆனால் வேறு ஏதேனும் காரணம் உள்ளது என்று அனைத்தும் அறிந்த நீ எண்ணினால், அந்தக் காரணங்களை எனக்கும் உணர்த்துவாயாக”, என்று கூறுகிறார். இதற்கு எந்தவிதமான பதிலும் ஈச்வரன் அளிக்காததால், அவனது ஸ்வாதந்த்ர்யம் மற்றும் காருண்யம் ஆகியவையே ஈச்வரன் ஒருவனை முதலில் கைவிடுவதற்கும், பின்னர் தனக்கு மிகவும் விருப்பமானவனாக ஏற்பதற்கும் உள்ள முக்கிய காரணங்கள் என்று உலகிற்கு அருளிச்செய்தார். ஆக ஸர்வேச்வரன் ஒரு சேதநனை தன்னுடைய லீலைக்கு உட்படுத்துதல் என்பதற்கு அவனுடைய ஸ்வாதந்த்ர்யம் என்பதே முக்கியமான காரணமாக உள்ளது; அந்தச் சேதநன் ஸர்வேச்வரனின் ஆணைகளுக்குக் கட்டுப்படாமல் எல்லையற்ற காலமாக வாழ்ந்தபடி இருப்பதே இதற்குத் துணைக்காரணமாக உள்ளது. ஸர்வேச்வரன் சேதநனுக்குப் பரமபதத்தில் தன்னுடைய இன்பங்களை அளித்தல் என்பதற்கு அவனுடைய காருண்யம் என்பதே முக்கியமான காரணமாக உள்ளது; ஸர்வேச்வரன் சேதநனுக்குத் தண்டனை அளிப்பதிலிருந்து காப்பதும், ஸர்வேச்வரனின் காருண்யத்தை அடையத் தடையாக உள்ளவற்றை நீக்குவதுமான வ்யாஜங்கள் (பக்தி, ப்ரபத்தி முதலானவை) துணைக்காரணமாக உள்ளன. எம்பெருமானின் காருண்யம் காரணமாக சேதநன் ஒருவன் நற்செயல்களில் ஈடுபட்டு, அதனால் பக்தி மற்றும் ப்ரபத்தி போன்றவற்றைக் கைக்கொண்டு ஸர்வேச்வரனின் கருணையைப் பெறுகிறான். இவை ஸர்வேச்வரனின் ஸ்வாதந்த்ர்யம் மற்றும் காருண்ய ஸ்வபாவங்களை உணர்த்துவதாக உள்ளன. ஸர்வேச்வரன் பாரபக்ஷம் இல்லாதவன் மற்றும் தண்டிக்காமல் உள்ள ஸ்வபாவம் கொண்டவன் என்பதும், பந்தங்கள் மற்றும் மோக்ஷத்தை அடைதல் என்பதும் அவனுடைய ஆணைகளை மீறுவதாலும், பக்தி போன்ற வ்யாஜங்களைக் கைக்கொள்வதாலுமே ஆகும் என்று ப்ரமாணங்கள் கூறுவதை அறியவேண்டும். ஆகவே ப்ரபந்நன் ஒருவன் ஸர்வேச்வரனின் க்ருபை என்பதில் ஆழ்ந்த விச்வாசமும் பக்தியும் கொண்டவனாக இருத்தலே பொருந்தும்.