Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 11)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
ப்ரபத்தி அவசியம் அற்றது என்ற வாதத்திற்கான பதில்
மூலம் – இவர்களைத் தெளிவிக்கும்படி – ஈச்வரன் ஸ்வதந்த்ரனேயாகிலும் வைஷம்ய நைர்க்ருண்யங்களாகிற தோஷங்கள் தனக்குத் தட்டாமைக்காக இவன் பக்கலிலே ஒரு வ்யாஜத்தை உண்டாக்கி, அத்தை அவலம்பித்துத்தான் ரக்ஷிக்கும். இவ்வர்த்தத்தை, “திருமாலிருஞ்சோலைமலை என்றேன் என்னத் திருமால் வந்து என்னெஞ்சு நிறையப் புகுந்தான்” என்று ஆழ்வார் தாமே அருளிச்செய்தார். இந்த வ்யாஜம்தானும் ஈச்வரன் தன்னாலேயாகில், இத்தை முன்பே உண்டாக்காதே விட்டதென்னென்னில், இவ்வாத்மாக்களுக்கு அநாதியான கர்மப்ரவாஹங்கள் விஷம விபாக ஸமயங்களாய்க் கொண்டு போருகையாலே ஈச்வரன் கர்மாநுரூப பலப்ரதனல்லாதபோது வைஷம்யதோஷம் வருகையாலே முன்பு இதுக்கு அவஸரமாயிற்றில்லை என்னுமிடம் கார்ய விசேஷதர்சநத்தாலே கல்பிதம். இங்ஙனிசையாதபோது ஸர்வஸித்தாந்திகளுக்கும் “இதுக்கு முன்பில்லாத மோக்ஷச்ரத்தாதிகள் இப்போது பிறக்கைக்கு அடியென்?” என்றால், உத்தரம் சொல்ல விரகில்லை. அநாதி கர்மப்ரவாஹ வைசித்ரயத்தாலே என்னும் உத்தரம் ஈச்வரனை இசைந்தார்க்கும் இசையாதார்க்கும் துல்யம். ஈச்வர ஸ்வாதந்த்ர்யம் ஒரு வ்யாஜத்தைக் கொண்டு அவன் நினைத்தபோதே ரக்ஷிக்கைக்கும் விலக்கவல்லாரில்மைக்கும் உறுப்பாம்.
– இவ்விதம் எண்ணுபவர்களை நாம் கீழே உள்ளபடி தெளிவாக்குவோம். ஈச்வரன் சுதந்திரமானவன் (தனது விருப்பத்தின்படி செயலாற்றுபவன்) என்றாலும், ”ஈச்வரன் ஒரு சேதனனிடம் பாரபக்ஷமாக நடந்துகொள்கிறான் (வைஷம்ய), இரக்கம் இன்றி நடந்துகொள்கிறான் (நைர்குண்யம்)” முதலான அவப்பெயர்கள் தனக்கு வராமல் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறான். ஆகவே தான் யாரைக் காப்பாற்றவேண்டும் என்று எண்ணுகிறானோ அந்தச் சேதனன், தன்னுடைய காப்பாற்றுதலை பெறும் விதமாக, ஏதேனும் ஒரு செயலைச் செய்யவேண்டும் என்றாக்குகிறான். அந்தச் செயலை முன்னிட்டு அவனைக் காப்பாற்றுகிறான் (அப்போது மேலே கூறப்பட்ட அவப்பெயர்கள் வராது அல்லவோ). இவ்விதம் ஈச்வரன் செய்கிறான் என்பதை ஆழ்வார் திருவாய்மொழியில் (10-8-1) - திருமாலிருஞ்சோலைமலை என்றேன் என்னத் திருமால் வந்து என்னெஞ்சு நிறையப் புகுந்தான் – திருமாலிருஞ்சோலை என்று அவனது இருப்பிடத்தின் பெயரை மட்டுமே உச்சரித்தேன்; அதனையே காரணமாக்கி எனது மனதின் அவன் வந்து நின்றுவிட்டான் – என்றார். இதற்கு சிலர், “சரி – இவ்விதம் ஏதோ காரணம் காண்பிக்கவேண்டும் என்பதால் சேதனனை ஒரு செயலைச் செய்யும்படி ஈச்வரன் செய்கிறான் என்றால், அதனை ஏன் அவன் முன்பே செய்யவில்லை?”, என்று கேட்கலாம். இதற்கு பதில் அளிப்போம். ஆத்மாக்களுக்கு எல்லையற்ற காலமாக கர்மங்களும், அவற்றின் பயன்களும் தொடர்ந்தபடி உள்ளன. இப்படி வெள்ளம் போன்று தொடரும் கர்மங்களானவை தங்களது பலன்களை பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு விதமாக அளிப்பவையாக உள்ளன. இப்படிப்பட்ட கர்மபலன்களின் அடிப்படையில் ஈச்வரன் தனது கருணையை ஒரு சேதனன் மீது பொழியவேண்டும். அவ்விதம் செய்யவில்லை என்றால் ”ஈச்வரன் பாரபக்ஷமாக உள்ளான்” என்னும் அவப்பெயர் அவனுக்கு உண்டாகிவிடும். ஆகவே கர்மபலனின் காரணமாகத் தகுந்த நேரம் வராதவரையில், தான் யாரைக் காக்கவிரும்புகிறானோ அந்தச் சேதனனை, காப்பாற்றுவதற்குரிய செய்கைகளைச் செய்யத் தூண்டுவதில்லை. இதனால் மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு விடை அளித்தாயிற்று. இந்தப் பதிலை ஏற்கவில்லை என்றால், “ஏன் ஒருவனுக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டுமே, அதற்கு முன்பு எழாத மோக்ஷ ஆசை உண்டாகிறது?” என்ற கேள்விக்கான பதிலை எந்த மதத்தைச் சேர்ந்த ஸித்தாந்தவாதிகளும் உரைக்க இயலாது. இத்தகைய ஆசைக்குக் காரணம் முன்பு செய்த கர்மங்களின் பலன்களே என்பதை ஈச்வரனை ஒப்புக் கொள்ளும் மதத்தினரும், ஒப்புக் கொள்ளாத மதத்தினரும் நிச்சயம் ஏற்பர். ஆக ஸர்வேச்வரனின் சுதந்திரமான தன்மை என்பது சேதனனிடம் உள்ள ஏதோ ஒரு காரணத்தை மட்டுமே சாக்காகக் ரக்ஷிப்பதற்கும், அவ்விதம் ரக்ஷிக்கும்போது தடுப்பதற்கு யாரும் இல்லாதபடி செய்வதற்கும் ஒரு காரணமாகிறது.