Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 10)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
ப்ரபத்தி அவசியம் அற்றது என்ற வாதத்திற்கான பதில்
மூலம் – அநாதிகாலம் அநாதரித்த ஈசுவரன் இன்று ஒருத்தனை ஆதரிக்கிறது தன் ஸ்வாதந்த்ர்ய மாத்ரத்தாலேயன்றோ? இங்ஙனன்றாகில், “இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான், அன்று என்னைப் புறம் போகப்புணர்த்தது என் செய்வான்” என்று ஆழ்வார் விண்ணப்பஞ் செய்ய, ஸர்வேச்வரன் “சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின” விதொழிய வேறோர் உத்தரம் அருளிச்செய்தானோ? ஆகையால் நாம் ஒரு உபாயாநுஷ்டாநம் பண்ணுகை என்னென்பது? “நடுவே வந்து உய்யக்கொள்கின்ற நாதன்” என்கிறபடியே அருள் புரிந்த சிந்தையடியார்மேல் வைத்து அவன் தானே ரக்ஷித்தபோது காணுமத்தனையன்றோ – என்று சிலர் கலங்குவார்கள்.
– எல்லையற்ற காலம் ஒருவனைத் தள்ளியே வைத்திருந்த ஸர்வேச்வரன் இன்று தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான் என்றால் அதற்குக் காரணம் ஸர்வேச்வரனின் சுதந்திரமே ஆகும். இவ்விதம் கொள்ளாமல், அந்தச் செயலுக்குக் காரணம் சேதனனின் முயற்சியே என்று கூறினால்: திருவாய்மொழியில் (10-8-9) - இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான், அன்று என்னைப் புறம் போகப்புணர்த்தது என் செய்வான் – ஸர்வேச்வரன் என்னை ஒரு பொருளாக்கி தன்னுடன் சேர்த்துக் கொள்ளும்விதமாக என்னில் தன்னை வைத்துக்கொண்டான்; ஆனால் இதற்கு முன்னர் என்னை ஏன் அவனைக் காட்டிலும் வேறான விஷயங்களில் ஈடுபடும்படிச் செய்தான் – என்று ஆழ்வார் வினவினார்; இதற்கு ஈச்வரன், திருவாய்மொழி (10-9-1) - சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின – ஆகாயத்தில் அழகான மேகங்கள் இனிய வாத்திய ஓசையை எழுப்பின – என்று கூறுவதற்கு ஏற்ப எந்தப் பதிலையும் அளிக்கவில்லை – என்பதற்கு எப்படி விடை அளிக்கமுடியும்? ஆகவே அவனது பாதுகாப்பை நாடும் பொருட்டு நாம் ஏதேனும் ஓர் உபாயத்தைக் கைக்கொள்வது எதற்காக (அது வீணே ஆகும்)? திருவாய்மொழி (1-7-5) - நடுவே வந்து உய்யக்கொள்கின்ற நாதன் – எந்தக் காரணமும் இன்றி என்னைப் பிழைக்கும்படிச் செய்பவன் – என்று கூறுவதற்கு ஏற்ப, அவனது கருணையானது எப்போது ஒருவன் மீது விழுகிறதோ அப்போது தானாகவே வந்து ரக்ஷிப்பான் – என்று சிலர் கூறுவார்கள்.