Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 8)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
மேலே கூறப்பட்டவர்களின் நட்பை விடவேண்டியதன் அவசியம்
மூலம்– அசரண்ய சரண்யனான ஸர்வேச்வரனைச் சரணமாகப் பற்றுகிற பரமாஸ்திகனுக்குச் சிலரோடு சேர்த்தியால் பாஹ்யதை வாராதாகிலும், அவனுக்குக் கலக்கங்கள் வரவும், அதுக்கு ஸதாசார்யர்கள் பரிஹாரம் பண்ணவும் காணாநின்றோம். மஹரிஷிகளும் ஏகம் யதி பவேச்சாஸ்த்ரம் ஜ்ஞானம் நிஸ்ஸம்சயம் பவேத் பஹுத்வாதிஹ சாஸ்த்ராணாம் ஞாநதத்வம் ஸுதுர்லபம் என்றும் நிஸ்ஸம்ச்யேஷு ஸர்வேஷு நித்யம் வஸதி வை ஹரி: ஸஸம்ச்யாந் ஹேதுபலாந் நாத்யாவஸதி மாதவ: என்றும் சொன்னார்களிறே. ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம் லோபோ நாசுபா மதி: இத்யாதிகளும் ஆத்மகுணபரிபூர்ண அதிகாரி விசேஷ விஷயத்திலேயாகக் கடவன. ஆன பின்பு ஆரூரூக்ஷுக்களுக்குக் கலக்கமுண்டென்னுமிடம் ச்ரூயதே கில கோவிந்தே பக்திமுத்வாஹதாம் ந்ருணாம் ஸம்ஸார ந்யூநதா பீதா: த்ரிதசா: பரிபந்திந: ஸத்யம் சதேந விக்நாநாம் ஸஹஸ்ரேண ததா தப: விக்நாயுதேந கோவிந்தே ந்ருணாம் பக்திர்நிவார்யதே இத்யாதிகளிலே ப்ரஸித்தம்.
– வேறு கதியற்ற அனைவருக்கும் ஏற்ற புகலிடமாக உள்ள எம்பெருமானைச் சரணம் என்று புகுந்த ஒருவன், தகாத சேர்க்கை காரணமாக மயக்கமும் கலக்கமும் அடையக்கூடும். ஆனாலும் அவன் எம்பெருமானின் விலக்குதலுக்கு இலக்காவதில்லை. அவன் சரியான காலத்தில் ஆசார்யர்களால் திருத்தப்படுகிறான். கீழே உள்ள வரிகள் காண்க: இதிஹாஸ ஸமுச்சயம் (33-105) - ஏகம் யதி பவேச்சாஸ்த்ரம் ஜ்ஞானம் நிஸ்ஸம்சயம் பவேத் பஹுத்வாதிஹ சாஸ்த்ராணாம் ஞாநதத்வம் ஸுதுர்லபம் – சாஸ்த்ரம் ஒன்றை மட்டுமே உரைப்பவையாக இருந்தால், எந்தவிதமான ஐயமும் இன்றி அனைவருக்கும் சரியான ஞானம் உண்டாகும். ஆனால் சாஸ்த்ரங்கள் பலவாக உள்ளதால் உண்மையான ஞானம் பெறுவது மிகவும் கடினமான செயலாகும். மஹாபாரதம் சாந்திபர்வம் (359-71) - நிஸ்ஸம்ச்யேஷு ஸர்வேஷு நித்யம் வஸதி வை ஹரி: ஸஸம்ச்யாந் ஹேதுபலாந் நாத்யாவஸதி மாதவ: - எந்தவிதமான சந்தேகமும் இல்லாதவர்கள் அருகில் மாதவன் எப்போதும் உள்ளான். ஆனால் ஏதோ பல காரணங்களை வைத்துக் கொண்டு சந்தேகம் அடைபவர்களை அவன் விட்டுச் செல்கிறான். மஹாபாரதம் ஆநுசசனிகபர்வம் (232-135) - ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம் லோபோ நாசுபா மதி: - மிகுந்த புண்ணியம் செய்ததன் காரணமாக பஎம்பெருமானிடம் பக்தி கொண்டவர்களுக்கு கோபம், த்வேஷம், லோபம், தீய எண்ணம் ஆகியவை தோன்றாது – என்று கூறும் வரிகள் பரிபூர்ண ஆத்மகுணங்கள் கொண்ட அதிகாரிகளுக்குப் பொருந்தும். ஆனால், பக்தியில் ஆழ்பவர்களுக்கும் கலக்கம் உண்டாகும் என்பதைக் கீழே உள்ள வரிகளில் காணலாம்: விஷ்ணுதர்மம் (2-25) - ச்ரூயதே கில கோவிந்தே பக்திமுத்வாஹதாம் ந்ருணாம் ஸம்ஸார ந்யூநதா பீதா: த்ரிதசா: பரிபந்திந: - கோவிந்தனிடம் பக்தியில் ஆழ்ந்தவர்களுக்கு “ஸம்ஸாரம் என்பது குறையுமோ” என அச்சம் கொண்டு தேவர்கள் விரோதம் செய்வதாகக் கேட்கப்படுகிறது. விஷ்ணுதர்மம் (74-94) - ஸத்யம் சதேந விக்நாநாம் ஸஹஸ்ரேண ததா தப: விக்நாயுதேந கோவிந்தே ந்ருணாம் பக்திர்நிவார்யதே – மனிதன் செய்கின்ற ஸத்யங்கள் நூறு தடைகளாலும், தவங்கள் ஆயிரம் தடைகளாலும், கோவிந்தனிடம் கொள்ளும் பக்தியானது பதினாயிரம் தடைகளாலும் தடுக்கப்படுகின்றன.