Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 6)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
மேலே கூறப்பட்டவர்களின் நட்பை விடவேண்டியதன் அவசியம்
மூலம் – இவ்வபஹாரங்களில் ஏதேனுமொன்று ஸ்வரூபத்தில் ம்ருதுப்ரஜ்ஞனாய் ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணினவனுக்கு விபரீத ஸம்ஸர்க்கத்தாலே வருமாகில் தத்தஸ்ய ஹரணேந ச என்கிற அபஹாரத்திலும் கொடியதாய், களவுகொண்டு கொடுத்த த்ரவ்யத்தை மீளக்களவு கொண்டாற்போலேயாம். ஆகையால் பஹிவிதங்களானவ்யாமோஹ காரணங்களில் ஹைதுக ஸம்ஸர்க்கம் போரப் பரிஹரணீயம். இவ்வர்த்தத்தை பாஷாண்டிநோ விகர்மஸ்தாந் பைடால வ்ரதிகாந் சடாந் ஹைதுகாந் பக்வ்ருத்திம்ச்ச வாங்மாத்ரேணாபி நார்சயேத், டம்பி ஹைதுக பாஷண்டி பக்வ்ருத்திம்ச்ச வர்ஜயேத், நாஸப்தி: கிஞ்சிதாசரேத், த்யஜ துர்ஜநஸம்ஸர்க்கம், வரம் ஹைதுவஹ ஜ்வாலா பஞ்ஜராந்தர்வ்யவஸ்திதி: ந சௌரி சிந்தா விமுக ஜநஸம்வாஸவைசஸம் இத்யாதிகளிலே ப்ரபஞ்சித்தார்கள்.
– அற்பமான ஞானத்தைக் கொண்ட ஒருவன் ப்ரபத்தியைச் செய்திருக்கலாம். அப்படிப்பட்டவன் சேரக்கூடாடதவர்களுடன் சேரும்போது, மேலே கூறப்பட்ட விபரீதமான எண்ணங்கள் அவனுக்கு உண்டாகக்கூடும். அவனது இந்தச் செய்கைகள் எப்படிப்பட்டவை என்றால், சாண்டில்ய ஸ்ம்ருதி - தத்தஸ்ய ஹரணேந ச – தானமாகக் கொடுக்கப்பட்டதை அபஹரிப்பதைக் காட்டிலும் பாவமானவை ஆகும். ஒருவன் ஒரு பொருளை மற்றவனுக்கு அளிக்கிறான்; பின்னர் அவ்விதம் அளித்தவன் அதனையே திருடிவிடுகிறான்; சற்று காலம் கழிந்து மனம் திருந்தி மீண்டும் அப்பொருளை உரியவனிடம் ஒப்படைக்கிறான்; ஆனால் மீண்டும் அதனைத் திருடுகிறான். இந்தச் செயலைக் காட்டிலும் பாவமானது மேலே கூறப்பட்ட செய்கைகள் ஆகும். ஆகவே மயக்கத்தில் ஆழ்த்தவல்ல பலவிதமான காரணங்களில், மேலே கூறப்பட்டவர்களின் நட்பு என்பது மிகவும் விலக்கப்படவேண்டியது ஆகும். கீழே உள்ள பல வரிகளில் இத்தகைய கருத்தையே பலரும் விளக்கினார்கள்: மநு ஸ்ம்ருதி (4-30) - பாஷாண்டிநோ விகர்மஸ்தாந் பைடால வ்ரதிகாந் சடாந் ஹைதுகாந் பக்வ்ருத்திம்ச்ச வாங்மாத்ரேணாபி நார்சயேத் – ஸர்வேச்வரனைத் தாழ்வாக உரைக்கும் பாஷாண்டிகள், பூனை போன்று வஞ்சனையுடன் உள்ளவர்கள், வேதங்களை ஏற்காமல் தர்க்கவாதம் மட்டுமே செய்தபடி உள்ள ஹைதுகர்கள், கொக்கு போன்று தன்னருகில் உள்ளவர்களைத் துன்புறுத்தியபடி உள்ளவர்கள் ஆகியவர்களை வாயால் புகழக்கூடாது. யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி (1-130) - டம்பி ஹைதுக பாஷண்டி பக்வ்ருத்திம்ச்ச வர்ஜயேத் – தானங்களும் தர்மங்களும் செய்வது போன்று வேடம் இடுபவன், ஹைதுகர்கள், பாஷாண்டிகள், கொக்கு போன்றவர்கள் ஆகியோரிடம் பசியால் இருக்கும் ஒருவன் தானம் பெறக்கூடாது. நாஸப்தி: கிஞ்சிதாசரேத் – ப்ரஹ்மத்தைப் பற்றிய ஞானம் அற்றவர்களிடம் சிறிதளவு கூட எந்தவிதமான நட்பும், விவாதமும் வைத்துக் கொள்ளக்கூடாது. மஹாபாரதம் - த்யஜ துர்ஜநஸம்ஸர்க்கம் – தீயநடத்தை உள்ளவர்களின் நட்பைக் கைவிடு. வரம் ஹைதுவஹ ஜ்வாலா பஞ்ஜராந்தர்வ்யவஸ்திதி: ந சௌரி சிந்தா விமுக ஜநஸம்வாஸவைசஸம் – ஸர்வேச்வரனைப் பற்றிய எண்ணம் சிறிதும் இல்லாமல் உள்ளவர்களுடன் கொள்ளும் நட்பைக் காட்டிலும் ஒரு சிறிய அறையில் எரிகின்ற பெரிய நெருப்புடன் உள்ள நிலை சிறந்ததாகும்.