Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 4)
ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்
ஈச்வரனின் ”தண்டிக்கவேண்டும்” என்ற எண்ணம் நீங்க மூன்று காரணங்கள்
மூலம் – ஸத்ஸம்ப்ரதாயஸித்தியாவது தான் ஸத்த்வோத்தரனாய் ஸம்யகுபஸந்நனாய் ஸாவதாநனாயிருக்கும் அவஸ்தையிலே க்யாதி-லாப-பூஜா-நிரபேக்ஷனாய் காருண்ய-பரதந்த்ரனான ஸதாசார்யன் ஸர்வருக்கும் ப்ரதாமாசார்யனான ஸர்வேச்வரன் முதலாக உபதேச பரம்பரையாலே வந்த தத்த்வஹிதங்களை அநபேக்ஷித-விஸ்தரமும் அபேக்ஷித-ஸங்கோசமுமில்லாதபடி, ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ: கச்சத்வமேநம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா: என்கிற கட்டளையிலே, உபதேசிக்கப் பெறுகை. பஹுக்லேசமாய் புத்திசலந ஸம்பாவநையுண்டான சாஸ்த்ரபரிக்ரமத்தில் அநாதிக்ருதருமாய்ப் பரமாஸ்தி கருமாயிருப்பார்க்கு இவ்வுபதேசமே ப்ரதானம். மற்றுள்ளார்க்குத் தாங்கள் தெளிகைக்காகவும் குதர்க்கங்களாலே கலங்குவாரைத் தெளிவிக்கைக்காகவும் ஸமீசீந யுக்திகளோடே கேட்க ப்ராப்தம்.
– ஸத்ஸம்ப்ரதாயஸித்தி என்பது என்ன? ஸத்வகுணம் முழுவதுமான நிறைந்திருப்பதும், சிஷ்யனாய் இருக்கும் இருப்பைச் சரியானபடி அடைந்தவனாகவும், கவனத்தைத் திருப்பாத மனம் கொண்டவனாகவும் இருப்பதாகும். மேலும் எந்தவிதமான புகழுக்கோ, செல்வத்துக்கோ பின்செல்லாமல் உள்ளவரும், காருண்யம் நிரம்பியவரும் ஆகிய ஓர் ஆசார்யனின் மூலமாக, தத்வம் மற்றும் ஹிதங்கள் (உண்மை மற்றும் நன்மை) ஆகியவற்றைப் பற்றி நன்றாக அறியவேண்டும். இப்படிப்பட்ட உபதேசங்கள், முதன்மையான ஆசார்யனாகிய ஸர்வேச்வரன் தொடக்கமாக இன்றுள்ள ஆசார்யன் முடிய பரம்பரையாக உபதேசிக்கப்பட்டு வருபவையாகும். இப்படியாக உபதேசம் செய்யப்படும்போது தேவையற்ற விரிவாக்கங்களும், தெளிவாக உரைக்க வேண்டியவற்றைத் தள்ளுவதும் கூடாது. மஹாபாரதம் வனபர்வம் (161-56) - ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ: கச்சத்வமேநம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா: - மஹாலக்ஷ்மியின் நாயகனாகிய ஸர்வேச்வரன் அனைத்து உலகங்களுக்கும் தந்தையாகவும் தாயாகவும் உள்ளான்; புருஷர்களில் சிறந்த பாண்டவர்களே! அனைவருக்கும் ரக்ஷகனாக உள்ள அவனையே உபாயம் என்று கைக்கொண்டு சரணாகதி செய்யுங்கள் – என்பது போன்றதான உபதேசங்களாக இருத்தல் வேண்டும். ஒரு சிலர் பரமபக்தர்களாகவும், சாஸ்த்ரங்களில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கக்கூடும்; ஆனாலும் அவர்கள் மிகவும் சிக்கலான விஷயங்களைக் கூறும் சாஸ்த்ரங்களைப் புரிந்துகொள்ளும் தகுதி அற்றவர்களாக இருக்கலாம். அவர்களுடைய சலனம் நிறைந்த புத்திக்கு ஆசார்யனின் உபதேசமே மிகவும் முக்கியமாகும். மற்றவர்களுக்கு அவர்களுடைய தெளிவான ஞானத்தின் பொருட்டும், தங்களுடன் வாதம் செய்யவருபவர்களை எதிர்கொள்ளும் பொருட்டும் சாஸ்த்ரங்களை அவற்றின் காரணங்களுடன் தெளிவது மிகவும் அவசியமாகிறது.