Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 3)

ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்

ஈச்வரனின் ”தண்டிக்கவேண்டும்” என்ற எண்ணம் நீங்க மூன்று காரணங்கள்

மூலம் – இவ்வர்த்தங்களில் ஜ்ஞாதவ்யதமமான ஸித்தோபாயத்தைப் பற்றவும், ஸாத்யோபாய விஷயமாகவும் இவ்வுபாய ப்ரபாவ விஷயமாகவும் கர்மவச்யருக்குக் கடுகத் தெளிவு பிறவாமைக்கு ஸ்வதந்த்ரனான ஸர்வேச்வரன், இவர்களுடைய பூர்வாபராதத்தாலே இட்ட நினைப்பு ஈடுமாறுகைக்கு ப்ரதான காரணம் மூன்று உண்டு. அவையெவையென்னில்: (1) அஸ்து மே என்றபேக்ஷித்தால், அஸ்து தே தயைவ ஸர்வம் ஸம்பத்ஸ்யதே என்கிற திருமுகப் பாசுரமும், (2) ஸதாசார்யாநுக்ரஹமும், (3) ஸத்ஸம்ப்ரதாய ஸித்தியும். இவற்றில் ஸதாசார்யாநுக்ரஹத்துக்கு வ்யாஜங்களும் இதின் பலவிசேஷங்களும் பராசர மைத்ரேய ஸஞ்ஜய ஆச்வலாயநாதி வ்ருத்தாந்தங்களிலே கண்டுகொள்வது.

– பூர்வ கர்ம வினைகளின் காரணமாக, அறிந்து கொள்ளவேண்டிய உபாயங்களில் முதன்மையாக உள்ள ஸித்தோபாயம் (எம்பெருமான்) பற்றியும், ஸாத்யோபாயம் (பக்தி, ப்ரபத்தி போன்றவை) பற்றியும், இந்த உபாயங்களின் வலிமை பற்றியும் ஜீவன்கள் அறியாமல் உள்ளனர். சற்றே ஆராய்ந்தால் இவர்களுக்கு இந்த விஷயங்களில் தெளிவு பிறவாமைக்குக் காரணம், இவர்களது பூர்வ அபராதங்களின் விளைவாக எம்பெருமான் ”இவர்கள் நம்மை உள்ளபடி அறிந்து கொள்பவர்கள் அல்லர்” என்று எண்ணுவதே ஆகும். எம்பெருமானின் இவ்விதமான தண்டிக்கும் எண்ணமானது நீங்குவதற்கு மூன்று வழிமுறைகள் அல்லது காரணங்கள் உள்ளன. அவையாவன: சரணாகதி கத்யம் - அஸ்து மே – ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளில் எனக்கு உண்மையான சரணாகதி உண்டாகவேண்டும் – என்று விண்ணப்பம் செய்யும்போது, அதனைக் கேட்ட ஸ்ரீரங்கநாச்சியார் - அஸ்து தே தயைவ ஸர்வம் ஸம்பத்ஸ்யதே – உனக்கு அந்தச் சரணாகதி உண்டாவதாக, அதன் மூலமே அனைத்தும் கிட்டுவதாக – என்று திருவாய் மலர்தல். ஆசார்யனின் அனுக்ரஹம் ஸம்ப்ரதாயத்தின் மீது பிடிப்பு இந்த மூன்றில் ஆசார்யனின் அனுக்ரஹம் உண்டாவதற்கான காரணங்களும், அதன் பலன்களும் குறித்து அறிய பராசரர், மைத்ரேயர், ஸஞ்ஜயன் மற்றும் ஆச்வலாயநர் ஆகியவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளில் காண்க.