Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 2)

ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்

கடந்த அதிகாரங்களின் திரண்ட பொருள்

மூலம் – அநாதிகாலம் ஸம்ஸரித்துப் போந்த க்ஷேத்ரஜ்ஞன் அவஸரப்ரதீக்ஷையான பகவத் க்ருபையாலே புரிந்து ஸமீசீந சாஸ்த்ரமுகத்தாலே தத்வ ஹித புருஷார்த்த விசேஷங்களைத் தெளிந்து, முமுக்ஷுவாய், ஸ்வாதிகாராநுரூபமாயிருப்பதொரு உபாய விசேஷத்தைப் பரிக்ரஹித்துக் க்ருதக்ருத்யனாய், தன் நிஷ்டையைத் தெளிந்து, அதுக்கு அநுரூபமாக இங்கிருந்த நாள் யதாசாஸ்த்ரம் நிரபராதமாகப் பண்ணும் கைங்கர்யரூப புருஷார்த்தமிருக்கும்படியும், சரீரபாதாநந்தரம் அர்ச்சிராதிகதியாலே அப்ராக்ருத தேச விசேஷத்திலே சென்றால் இவனுக்கு அநவச்சிந்ந பகவதநுபவ பரிவாஹமாக வரும் பரிபூர்ண கைங்கர்யரூப பரமபுருஷார்த்த ஸித்தியிருக்கும்படியும் சொன்னோம்.

– ஸம்ஸாரத்தில் எல்லையற்ற காலமாக உழன்றபடி இருக்கும் ஜீவனுக்கு உதவத் தயாராக உள்ள எம்பெருமானின் க்ருபை என்பதை, அந்த க்ருபையால் ஒருவன் பற்றிக் கொண்டு, ஸம்ஸாரத்தில் வெறுப்பைக் காண்கிறான். சரியான சாஸ்த்ரங்களின் உதவியால் அவன் உண்மையாகவும், தனக்கு நன்மை மற்றும் புருஷார்த்தங்களை அளிக்கவல்லதாகவும் உள்ள உபாயத்தை அறிகிறான். அதன் பின்னர் மோக்ஷத்தில் ஆசை கொள்கிறான். தனது அதிகாரத்திற்கு ஏற்றபடி உள்ள உபாயத்தை அறிந்த பின்னர் செய்யவேண்டியதைச் செய்கிறான் (அந்த உபாயத்தைக் கைக்கொள்கிறான்). தனது ப்ரபந்நன் என்னும் நிலையைத் தெரிந்து கொள்கிறான். அந்த நிலைக்கு ஏற்றபடி, தான் இந்த உலகில் வாழும் காலம் முடிய சாஸ்த்ரங்களுக்கு விரோதம் உண்டாகாதவகையில் கைங்கர்ய வடிவில் உள்ள புருஷார்த்தத்தைக் கைக்கொள்கிறான். இந்தச் சரீரம் விழுந்தவுடன் அர்ச்சிராதி மார்க்கமாக, இந்த உலகைக் கடந்து, ப்ரக்ருதியின் பாதிப்பு இல்லாத பரமபதம் அடைகிறான். அங்கு எல்லையற்ற பகவத் அனுபவத்தின் விளைவாக உண்டாகும் பரிபூர்ணமான கைங்கர்ய வடிவில் உள்ள புருஷார்த்தம் கிட்டப் பெறுகிறான். இவை அனைத்தும் எப்படி நிகழ்கின்றன என்பதை நாம் கடந்த சில அதிகாரங்களில் விரிவாகக் கூறினோம்.