Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 19)
அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்
ஏறியெழிற்பதம் எல்லாவுயிர்க்கும் இதமுகக்கும் நாறுதுழாய்முடி நாதனை நண்ணி அடிமையில் நம் கூறுகவர்ந்த குருக்கள் குழாங்கள் குரைகழற்கீழ் மாறுதலின்றி மகிழ்ந்தெழும் போகத்து மன்னுவமே
– அழகாக விளங்குகின்ற பரமபதத்தை நாம் அடைந்து, அனைத்து ஜீவன்களும் செய்கின்ற சிறிய உபாயத்தை எண்ணி மனம் மகிழ்பவனும், நறுமணம் வீசுகின்ற துளசி மாலையைத் தனது திருமுடியில் கொண்டவனும் ஆகிய ஸர்வேச்வரனை நெருங்குவோம். அங்கு சென்ற பின்னர், அவனது கைங்கர்யத்தில் நமக்காக ஒதுக்கப்பட்ட பணியினை நாம் அடையவேண்டும் என்று எப்போதும் விருப்பம் கொண்ட ஆசார்யர்களின் சதங்கை ஒலியுடன் கூடிய திருவடிகளின் கீழ் நிற்போம். ”மீண்டும் திரும்புதல்” என்பதே இல்லாமல், தழைக்கின்ற பகவத் அநுபவத்தில் மகிழ்வுடன் நிலையாக நிற்போமாக.