Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 17)

அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்

முக்தன் மீண்டும் திரும்புதல் குறித்த சந்தேகங்களுக்கான விடை

மூலம்– பகவத்விஷய வைலக்ஷண்ய ஞானத்தாலே முன்பு பிறந்த பக்திசப்த வாச்யமான ப்ரீதிரூபாபந்நஞானம் இப்போது சாஸ்த்ரங்களுக்கு நிலமில்லாத பகவத் வைலக்ஷண்யமெல்லாம் ப்ரத்யக்ஷமானபடியாலே நிரதிசய ப்ரீதிரூபாபந்நமாய்த் தலைக்கட்டிற்று. இப்படி இருக்கையாலே ஸ ச மம ப்ரிய: என்ற ஈச்வரனுடைய ப்ரீத்யதிசயம் அவன் தன்னாலும் நியமிக்கவொண்ணாதபடி கரைபுரண்டு இவனோடு பரம்பரயா ஸம்பந்தமுடைய திடர் நிலங்களிலும் ஏறிப்பாயும்படியாயிற்று. ஆகையால் கர்மமில்லையேயாகிலும் ஸ்வதந்த்ரனான ஈச்வரனுடைய இச்சையாலே புநராவ்ருத்தியுண்டாகிறதோ என்று சங்கிக்கவொண்ணாது.

– ஸம்ஸார நிலையில் உள்ளபோது எம்பெருமானின் மேன்மைகளைக் குறித்ததும், பக்தி என்பதான அவன் மீது கொண்ட பேரன்பு என்னும் வடிவானதும் ஆகிய ஞானம் பிறக்கிறது. அத்தகைய ஞானமானது முக்தி நிலையில் - சாஸ்த்ரங்களாலும் தெளிவாக அறிய இயலாத எம்பெருமானின் தனித்தன்மைகளைத் தனது அனுபவங்களால் கண்கூடாக உணர்வதால் – எம்பெருமான் மீது எல்லையற்ற பேரன்பாக தழைத்து நிற்கிறது. கீதையில் (7-17) - ஸ ச மம ப்ரிய: - அத்தகைய ஞானி எனக்கு மிகவும் ப்ரியமானவன் – என்று கூறுவதற்கு ஏற்ப, ஈச்வரன் அந்த ஜீவன் மீது கொள்கின்ற பேரன்பு என்னும் வெள்ளமானது, ஈச்வரனாலும் கட்டுப்படுத்த இயலாதபடி கரைபுரண்டு பாய்கிறது. பாய்ந்து வரும் வெள்ளம் எவ்விதம் மேட்டு நிலங்களிலும் பாய்கிறதோ அது போன்று, அந்த ஜீவனுக்கு மிகவும் தூரத்தில் உள்ள பரம்பரைகளுக்கும் ஈச்வரனின் பேரன்பு என்னும் வெள்ளம், அந்த ஜீவனின் பொருட்டு பாய்கிறது. ஆகவே அந்த ஜீவனுக்குக் கர்மம் இல்லை என்றாலும், யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாதவனான ஈச்வரனின் ஸங்கல்பத்தால் அந்த முக்தன் மீண்டும் ஸம்ஸாரத்திற்குத் திரும்புவானோ என்னும் சந்தேகத்திற்கும் இடமில்லை.