Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 16)
அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்
முக்தன் மீண்டும் திரும்புதல் குறித்த சந்தேகங்களுக்கான விடை
மூலம் - முமுக்ஷு தசையில் கேவல அசித்தையும் கேவல சித்தையும் அநுபவிக்கையாகிற ஐச்வர்ய கைங்கர்யங்களில் வைராக்யம் பிறந்தவிது முக்தனுக்கு ப்ரஹ்மாத்மகமாக ஸர்வத்தையும் காண்கையாலே கேவலாநுபவ ப்ரஸங்கமில்லாமையாலும் அந்தப் புருஷார்த்தாந்தரங்களினுடைய தோஷமெல்லாம் மேல் நித்ய ப்ரத்யக்ஷிதமாகையாலும் ப்ரதிஷ்டிதமாயிற்று. ஆகையால் தன்னிச்சையடியாக ஆவ்ருத்தி சங்கையில்லை. சிதசிதீச்வர தத்த்வத்ரய விஷயமாகவும் ஹேயோபாதேய விஷயமாகவும் முன்பு பிறந்த ஜ்ஞாநம் இப்போது விச்சேந்த ஸங்கோசங்களில்லாதபடி விகஸிதமாயிற்று. ஆகையால் தன் அஜ்ஞாநமடியாக ஆவ்ருத்தி சங்கிக்கவொண்ணாது.
– மோக்ஷத்தின் மீது விருப்பம் கொள்கின்ற நேரத்தில் முமுக்ஷு ஒருவனுக்கு அசித் பொருட்களையும், சித் பொருளாகிய தனது ஆத்மாவையும் அனுபவிக்கவேண்டும் என்பதான ஐச்வர்யம் மற்றும் கைவல்ய ஆசைகளின் மீது வெறுப்பு உண்டாகிவிடும். அப்போது அவன் அனைத்தின் அந்தராத்மாவாக ப்ரஹ்மம் உள்ளதைக் காண்கிறான். ஆகவே அவனுக்கு தனது ஆத்மாவைத் தனித்து அனுபவிப்பதற்கான சந்தர்ப்பமே கிடையாது. மேலும் மற்ற புருஷார்த்தங்களில் எப்போதும் உள்ளதான தோஷங்களை அவன் தெளிவாகக் காண்கிறான். ஆகவே அவனது வைராக்யம் நிலையாக நிற்கிறது. எனவே அவன் மீண்டும் (ஈச்வர ஸங்கல்பம் அல்லாமல்) தனது விருப்பத்தால் ஸம்ஸாரத்திற்குத் திரும்புவானோ என்னும் சந்தேகத்திற்கு இடமில்லை. அவனுக்கு சித்-அசித்-ஈச்வரன் ஆகிய மூன்றைப் பற்றியதும், நன்மை-தீமை பற்றியதும் ஆகிய ஞானம் என்பது தற்போது பூர்ணமாக, எந்தவிதமான இடையூறும் இன்றி, எந்தவிதமான சுருக்கமும் இன்றி தழைக்கிறது. எனவே அவன் மீண்டும் தனது அறியாமையால் ஸம்ஸாரத்திற்குத் திரும்புவானோ என்னும் சந்தேகத்திற்கும் இடமில்லை.