Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 15)

அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்

முக்தன் மீண்டும் திரும்புதல் குறித்த சந்தேகங்களுக்கான விடை

மூலம் – இப்படியாகில், ந ஸம்பாதம் ஸாமாஹாரே விபதாம் விநிவர்த்தநே ஸமர்த்தோ வித்யதே கச்சித் தம் விநா புருஷோத்தமம் என்கிற நிலையாய் ஸ்வதந்த்ரரல்லாத முக்தருக்கு ஏதேனுமொரு ஹேதுவாலே ஆவ்ருத்திசங்கை வாராதோ என்னில், அது வாராது: ஸாயுஜ்யம் ப்ரதிபந்நா யே தீவ்ரபக்தாஸ்தபஸ்விந: கிங்கரா மம தே நித்யம் பவந்தி நிரூபத்ரவா: என்று தானே அருளிச்செய்தானிறே.

– இவ்விதம் கொண்டால், பரமஸம்ஹிதை (3-34) - ந ஸம்பாதம் ஸாமாஹாரே விபதாம் விநிவர்த்தநே ஸமர்த்தோ வித்யதே கச்சித் தம் விநா புருஷோத்தமம் – ஒருவனுக்கு ஏற்ற செல்வத்தை அளிப்பதற்கும், அதனை அபகரிப்பதற்கும் அந்தப் புருஷோத்தமனைத் தவிர வேறு யாருக்கும் வலிமை இல்லை – என்று கூறுவதற்கு ஏற்ப, எந்தவிதமான சுதந்திரமும் இல்லாமல் எம்பெருமானின் கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளவனாகிய முக்தனுக்கு, ஏதோ ஒரு காரணத்தினால் மீண்டும் இந்த ஸம்ஸாரத்திற்குத் திரும்புதல் என்பது உண்டாவதற்கு வாய்ப்பு உள்ளது அல்லவோ என்ற சந்தேகம் எழலாம். அவ்விதம் நிகழாது. ஏன்? பரமஸம்ஹிதையில் (30-94) - ஸாயுஜ்யம் ப்ரதிபந்நா யே தீவ்ரபக்தாஸ்தபஸ்விந: கிங்கரா மம தே நித்யம் பவந்தி நிரூபத்ரவா: - மிகுதியான ஆசையுடன் பக்தியோகத்தை இயற்றுபவர்களும், மிகவும் உயர்ந்த தவம் என்றே கருதப்படும் ப்ரபத்தியைக் கைக்கொண்டவர்களும் மோக்ஷம் பெற்று, எனக்குக் கைங்கர்யம் செய்தபடி இருப்பார்கள்; அவர்கள் எப்போதும் ஸம்ஸாரத்தின் பிடியில் சிக்கமாட்டனர் – என்று எம்பெருமான் தானே அருளிச்செய்தான் அல்லவோ?