Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 14)
அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்
ஈச்வரனுக்கும் முக்தனுக்கும் உள்ள தனித்தன்மைகள்
மூலம்– ஈச்வரனுக்குச் சத்ர சாமராதிகளைப் போலே லக்ஷணமாகச் சொன்ன ஜகத்காரணத்வ மோக்ஷப்ரதத்வ ஸர்வாதாரத்வ ஸர்வநியந்த்ருத்வ ஸர்வசேஷித்வ ஸர்வசரீரத்வ ஸர்வசப்தவாச்யத்வ ஸர்வவேதவேத்யத்வ ஸர்வலோகசரண்யத்வ ஸர்வமுமுக்ஷூபாஸ்யத்வ ஸர்வபலப்ரதத்வ ஸர்வவ்யாப்தஜ்ஞாநாநந்தஸ்வரூபத்வ லக்ஷ்மீஸஹாயத்வாதிகள் ப்ரதிநியதங்கள்; முக்தனுக்கு ஆதேயத்வ விதேயத்வ சேஷத்வ அணுத்வாதிகள் வ்யவஸ்திதங்கள்.
– ஈச்வரனுக்கு கீழே கூறப்பட்டுள்ள தன்மைகள் குடையும் சாமரங்களும் போலே உள்ளன (அதாவது அவனது உயர்ந்த நிலையைக் காட்டுவதாக). அவையாவன – இந்த உலகின் காரணமாக இருத்தல், மோக்ஷம் என்பதை ஜீவனுக்கு அளிப்பவனாக இருத்தல், அனைத்திற்கும் ஆதாரமாக இருத்தல், அனைத்தையும் நியமிப்பவனாக இருத்தல், அனைத்திற்கும் எஜமானனாக இருத்தல் (அல்லது யார் ஒருவனுக்காக அனைத்தும் உள்ளனவோ), அனைத்தையும் தனது சரீரமாக கொண்டிருத்தல், அனைத்து பதங்கள் அல்லது ஒலி மூலம் குறிக்கப்படுபவனாக இருத்தல், வேதங்களால் மட்டுமே அறியக்கூடியவனாக இருத்தல், அனைத்து லோகங்களும் சென்று சரணம் புகக் கூடியவனாக இருத்தல், அனைத்து முமுக்ஷுக்களும் உபாஸனம் செய்யத்தக்கவனாக இருத்தல், அனைத்து பலன்களையும் அளிப்பவனாக இருத்தல், எங்கும் இருப்பவனாக இருத்தல், ஞானமயமாகவும் ஆனந்தமயமாகவும் இருத்தல், மஹாலக்ஷ்மியின் துணைவனாக இருத்தல் போன்ற பலவும் ஆகும். இதே போன்று முக்தனுக்கு வரையறுக்கப்பட்ட தன்மைகளாவன – ஈச்வரனால் தாங்கப்படுபவனாக இருத்தல், ஈச்வரனால் நியமிக்கப்படுபவனாக இருத்தல், எம்பெருமானுக்காக மட்டுமே இருத்தல், அணு அளவாக மட்டுமே இருத்தல் போன்ற பலவாகும்.