Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 13)
அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்
ஸாயுஜ்யம் என்ற பதம் ஒன்றாகுதலைக் குறிக்கும் என்னும் அத்வைத வாதம் பொருந்தாது
மூலம் – இப்படி ச்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரங்களிலே ஸாம்யம் கண்டோக்தமாகையால் முக்த தசையில் ஐக்யம் தோற்றினவிடங்களெல்லாம் ராமஸுக்ரீவரோரைக்யம் தேவ்யேவம் ராமஜாயத இத்யாதிகளிற்படியே பேதச்ருத்யவிரோதேந கண்டு கொள்வது இங்ஙனல்லாத போது யதா து மந்யதே அந்ய: அஹமந்ய ஏஷ இதி த்விஜ: ததா ஸ கேவலீபூத: ஷட்விம்ச புநபச்யதி அந்யச்ச ராஜந் ஸ பரஸ்ததா அந்ய: பஞ்சவிம்சக: தத்ஸ்தத்வாதநுபச்யந்தி ஹி ஏக ஏவேதி ஸாதவ: அந்யச்ச ராஜந் ஸ பரஸ்ததா அந்ய: பஞ்சவிம்சக: தேநைதந்நாபிஜாநந்தி பஞ்சவிம்சகம் அச்யுதம் ஜந்ம ம்ருத்யு பயாப்தீதா: ஸாங்க்யயோகாச்ச காச்யப ஷட்விம்சம் அநுபச்யந்தி சுசயஸ்தத்பராயணா: உத்தம: புருஷஸ்த்வந்ய: தத்ர ய: பரமாத்மா து ஸ நித்யோ நிர்குண: ஸ து நாராயணோ ஜ்ஞேய: ஸர்வாத்மா புருஷோ ஹி ஸ: ந லிப்யதே கர்மபலை: பத்மபத்ரமிவாம்பஸா கர்மாத்மா த்வவரோ ய: அஸௌ மோக்ஷபந்தை: ஸ யுஜ்யதே அய: பிண்டே யதா வஹ்நிர்பிந்நஸ்திஷ்டத்யபிந்நவத் ததா விச்வமிதம் தேவோ ஹி ஆவ்ருத்ய பரிதிஷ்டதி இத்யாதி ப்ரமாண ஸஹஸ்ரம் விரோதிக்கும். ஆகையால் முக்தனுக்கு ஜ்ஞாந போக்யாதிகளால் வந்த பரமஸாம்யமே உள்ளது.
– இப்படியாக முக்தன் ப்ரஹ்மம் போன்று ஆகிறான் என்பதை ச்ருதிகளும், ஸ்ம்ருதிகளும், ப்ரஹ்மஸூத்ரமும் மறுக்க இயலாதபடி உரைத்தன. ஆகவே முக்தி பெறும்போது ஐக்யம் என்று கூறும் வரிகளுக்கு விளக்கம் அளிக்கும்போது, அந்த விளக்கமானது ஜீவனுக்கும் ப்ரஹ்மத்திற்கும் உள்ள வேறுபாடுகளை உணர்த்தும் வேதவரிகளுக்கு முரணாகாதபடி விளக்கம் அளிக்கவேண்டும். ”ஐக்யம்” என்ற பதம் எப்படிப்பட்ட பொருளில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்றால், இராமாயணம் ஸுந்தரகாண்டம் (35-51) - ராமஸுக்ரீவரோரைக்யம் தேவ்யேவம் ராமஜாயத – இப்படியாக இராமனுக்கும் சுக்ரீவனுக்கும் மனதால் ஒற்றுமை உண்டானது – என்ற வரியில் என்ன பொருளில் உள்ளதோ, அதே பொருளில் எடுக்கப்படவேண்டும். ”ஐக்யம்” என்னும் பதத்திற்கு இவ்விதம் பொருள் கொள்ளவில்லை என்றால், கீழே உள்ள வரிகளுக்கு முரண்பாடு உண்டாகும் (ச்லோகங்களை மேலே உள்ள மூலத்தில் காண்க): மஹாபாரதம் சாந்திபர்வம் (323-77 முதல் 80) – எந்த ஒரு நேரத்தில் அந்தணன் ஒருவன் “நான் ஸர்வேச்வரனைக் காட்டிலும் வேறுபட்டவன், அவன் என்னைக் காட்டிலும் வேறுபட்டவன்” என்று எண்ணுகிறானோ, அப்போதே அந்த மனிதன் ஸம்ஸார பந்தங்களில் இருந்து விடுபடுகிறான். அவன் இருபத்துஆறாவது தத்துவமாக உரைக்கப்பட்ட பரம்பொருளை அனுபவிக்கிறான். அரசனே! பரமாத்மாவும் இருபத்துஐந்தாவது தத்துவமான ஜீவாத்மாவும் வேறுபட்டவர்கள் ஆவர். ஜீவனுக்கு அந்தர்யாமியாக பரமாத்மா உள்ளதால் ஸாதுக்கள் அவர்கள் இருவரையும் ஒன்றாகக் காண்கின்றனரே அல்லாமல் அவர்களின் ஸ்வரூபம் ஒன்றல்ல. ஜீவாத்மாவும் மற்ற இருபத்துநான்கு தத்துவங்களும் வேறு ஆகும். காச்யபரே! பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய சுழற்சிக்கு அஞ்சியவர்களாக, கர்மயோகம் செய்து, அதனால் மனம் தூய்மை அடைந்தவர்களாக, ஞானயோகத்தில் நிலைநின்று, பரமாத்மாவையே தங்களது உயர்ந்த புருஷார்த்தமாகக் கொள்கின்றனர். கீதை (15-17) - உத்தம: புருஷஸ்த்வந்ய: - புருஷோத்தமன் வேறுபட்டவன். மஹாபாரதம் சாந்திபர்வம் (361-14, 15) – ஜீவனுக்கு எப்போதும் அந்தர்யாமியாக உள்ள பரமாத்மா அழிவில்லாதவன். அவன் ஸத்வம் உள்ளிட்ட மூன்று குணங்களும் அற்றவன் ஆவான். அவனே அனைத்தின் அந்தர்யாமி, அவனே புருஷன் எனப்படுகிறான், அவனே நாராயணன் ஆவான். தாமரை இலையில் நீர் எவ்விதம் ஒட்டுவதில்லையோ அது போன்று அவனிடம் கர்மத்தின் பலன்கள் ஒட்டுவதில்லை. அவனைக் காட்டிலும் தாழ்ந்தவனாகிய ஜீவாத்மா தன்னுடைய கர்மங்கள் மூலம் ஸம்ஸார பந்தத்தையும், ஸர்வேச்வரனைக் குறித்த உபாஸனம் மூலம் மோக்ஷமும் பெறுகிறான். ஜயாக்ய ஸம்ஹிதை (4-83) – நன்றாகக் காய்ச்சப்பட்ட இரும்புக்குண்டு என்பதும், அதில் உள்ள உஷ்ணமும் வெவ்வேறு ஆகும். ஆனாலும் நமக்கு ஒன்றாகவே தோன்றுகிறது. இதே போன்று இந்த உலகைக் காட்டிலும் வேறான ஈச்வரன், உலகிற்குள் அந்தர்யாமியாக ஒன்றாக இருப்பதாகத் தோன்றுகிறான். ஆக மேலே உள்ள வரிகளின் மூலம் உணரப்படுவது என்னவென்றால் முக்தனுக்கும் ப்ரஹமத்திற்கும் ஞானம் மற்றும் இன்பங்களை அனுபவித்தல் போன்றவற்றில் மட்டுமே ஒற்றுமை உள்ளது என்பதாகும்.