Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 12)
அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்
ஸாயுஜ்யம் என்ற பதம் ஒன்றாகுதலைக் குறிக்கும் என்னும் அத்வைத வாதம் பொருந்தாது
மூலம்– சப்தசக்தியின்றிக்கேயிருக்க பேதச்ருதிகளும் விரோதிக்க ஸாயுஜ்ய சப்தத்துக்கு ஐக்யம் பொருளாக நினைத்திருப்பார்க்கு முக்தன் பரம ஸாம்யத்தை அடையுமென்றும் தாத்ருக்காமென்றும் சொல்லுகிற ச்ருதிகளும் விரோதிக்கும். மம ஸாதர்ம்யமாகதா: என்று கீதாசார்யனும் அருளிச்செய்தான். இவ்வர்த்தத்தை பரேண பரதர்மீ ச பவத்யேஷ ஸமேத்ய வை விசுத்த தர்மா சுத்தேந புத்தேந ச ஸ புத்திமான் விமுக்த தர்மா முக்தேந ஸமேத்ய பரதர்ஷப வியோக தர்மணா சைவ வியோகாத்மா பவத்யபி விமோக்ஷிணா விமோக்ஷீ ச ஸமேத்யேஹ ததா பவேத் சுசிகர்மணா சுசிச்சைஷ பவத்யமித தீப்திமாந் விமலாத்மா ச பவதி ஸமேத்ய விமலாத்மநா கேவலாத்மா ததா சைவ கேவலேந ஸமேத்ய வை ஸர்வதந்த்ரச்ச ஸவதந்த்ரத்வம் உபாச்நுதே ஏதாவதேதத் கதிதம் மயா தே தத்யம் மஹாராஜ யதார்த்த தத்த்வம் அமத்ஸரஸ்த்வம் ப்ரதிக்ருஹ்ய சார்த்தம் ஸநாதநம் ப்ரஹ்ம விசுத்தமாத்யம் என்று வஸிஷ்ட கரால ஸம்வாதத்தில் பரக்கப்பேசி இதுவே பரமார்த்தமென்று மஹர்ஷி நிகமித்தான். இங்கு முக்தனை ஸ்வதந்த்ரனென்கிறது கர்மவச்யனல்லன் என்றபடி. முக்த விஷயமான ஸ்வராட் சப்தத்தை அகர்மவச்ய: என்று பாஷ்யகாரர் வ்யாக்யாநம் பண்ணியருளினார்.
– ஸாயுஜ்யம் என்பது ப்ரஹ்மத்துடனான ஐக்யம் என்று கூறும் வாதமானது - “ஸாயுஜ்யம்” என்னும் பதம், ஜீவ-ப்ரஹ்ம ஐக்யத்தை தனது பொருள் மூலமாக வெளிப்படுத்த இயலவில்லை; இவ்விதமாகப் பொருள் கொண்டால் பல வேதவரிகள் முரணாகிறது – ஆகிய காரணங்களால் விரோதமாகிறது. மேலும் முக்தன் ப்ரஹ்மத்தைப் போன்றே ஆகிறான் என்பதான் ச்ருதி வரிகள் முரணாகிவிடும். இதனை க்ருஷ்ணனும் கீதையில் (14-2) - மம ஸாதர்ம்யமாகதா: - என்னைப் போன்று ஆகின்றனர் – என்றான். மஹாபாரதத்தில் வசிஷ்டருக்கும் கராலருக்கும் இடையே நடந்த ஸம்பாஷணைக் கீழே உள்ளபடி கூறுகின்ற வ்யாஸபகவான், இதுவே உயர்ந்த உண்மை என்கிறார் (குறிப்பு: இதற்கான ச்லோக வரிகளை மேலே உள்ள மூலத்தில் கண்டுகொள்வது): மஹாபாரதம் சாந்திபர்வம் (313-26 முதல் 31) ”முக்தன் ஒருவன் பரமபுருஷனுடன் சேர்ந்தவனாக, அவனைப் போன்றே தர்மங்களை உடையவன் ஆகிறான். அவித்யை முதலான தோஷங்கள் அற்ற ப்ரஹ்மத்துடன் சேர்வதால் முக்தனும் அவ்விதமான தோஷங்கள் அற்றவன் ஆகிறான். அனைத்தும் அறிந்த ப்ரஹ்மத்துடன் சேர்வதால் முக்தனும் அவ்விதமாக அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான். கர்மங்களின் தொடர்பு இல்லாத ப்ரஹ்மத்துடன் சேர்வதால் முக்தனும் அவ்விதமாகக் கர்மபந்தம் அற்றவன் ஆகிறான். துக்கம் என்பதே இல்லாத ப்ரஹ்மத்துடன் சேர்வதால் முக்தனும் அவ்விதமாக ஆகிறான். பரமானந்தம் கொண்ட ப்ரஹ்மத்துடன் சேர்வதால் முக்தனும் அவ்விதமான பரமானந்தம் கொண்டவன் ஆகிறான். ப்ரஹ்மம் எவ்விதம் கர்மத்தால் அன்றி ஸங்கல்பத்தால் செயலாற்றுகிறதோ, அது போன்றே முக்தனும் ஸங்கல்பத்தால் செயலாற்றுகிறான். மூன்று குணங்களின் ஸம்பந்தம் அற்ற ப்ரஹ்மத்துடன் சேர்வதால் முக்தனும் அக்குணங்கள் நீங்கப் பெறுகிறான். இந்த உலகின் தொடர்புடன் கூடியதான சரீரமோ இந்த்ரியங்களோ அற்ற ப்ரஹ்மத்துடன் சேர்வதால் முக்தனும் அவ்விதமான சரீரமோ இந்த்ரியங்களோ அற்றவன் ஆகிறான். கர்மங்களுக்கு வசப்படாத ப்ரஹ்மத்துடன் சேர்வதால் முக்தனும் கர்மவசப்படாதவன் ஆகிறான். அரசனே! இப்படியாக உண்மை உனக்கு உரைக்கப்பட்டது. இந்த உண்மையை ஏற்றவனாக நித்யமாகவும், தோஷம் அற்றதாகவும், உலகின் காரணமாகவும் உள்ள ப்ரஹ்மத்தை உபாஸிப்பாயாக”, என்றார். இங்கு முக்தனை சுதந்திரமானவன் என்று கூறியது ஏனென்றால், அவன் கர்மவசப்பட்டவன் அல்லன் என்று கூறவே ஆகும். ஸ்வாமி எம்பெருமானாரும் “ஸ்வராட்” என்ற பதத்திற்கு “கர்மவசப்படாதவன்” என்றே பொருள் உரைத்தார்.