Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 10)
அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்
ஸாயுஜ்யம் மற்றும் ஸார்ஷ்டிதை என்பதன் விளக்கம்
மூலம்– ஸ்ரீவிஷ்ணுலோகாதிகளிலே ஸாலோக்ய ஸாரூப்யாதிமாத்ரம் பெற்றார்க்கு முக்த வ்யபதேசம் அதூர விப்ரகர்ஷத்தாலேயாமத்தனை இவ்வர்த்தம் லோகேஷு விஷ்ணோர் நிவஸாந்தி கேசித் ஸமீபம்ருச்சந்தி ச கேசிதந்யே அந்யே து ரூபம் ஸத்ருசம் பஜந்தே ஸாயுஜ்யமந்யே ஸ து மோக்ஷ உக்த: என்று நியமிக்கையாலே ஸித்தம். இது பரமபதத்திலே சென்றால் வரும் ஸாயுஜ்ஜமே மோக்ஷமென்கிறது. அதுக்குள்ளே ஸஹஸ்ரத்தில் சதாதிகளைப்போலே ஸாலோக்யாதிகளெல்லாம் அந்தர்பூதங்களாகையால் அங்கு ஒருவர்க்கும் வைஷம்யமில்லை. மோக்ஷம் ஸாலோக்ய ஸாரூப்யம் ப்ரார்யயே ந கதாசந இச்சாம்யஹம் மஹாபாஹோ ஸாயுஜ்யம் தவ ஸுவ்ரத என்கிறவிடத்திலும் இவ்வர்த்தம் கண்டுகொள்வது. ஸாயுஜ்யமாவது ஸயுக்கினுடைய பாவம். ஸயுக்கானவன் ஒரு போக்யத்திலே போக்தாவாய்க் கொண்டு கூட அந்வயிக்குமவன் இங்கு ஸப்ரகார ப்ரஹ்மமாகிற போக்யத்திலே ப்ரஹ்மமும் முக்தனும் கூட போக்தாக்களாய் அந்வயிக்கையாலே முக்தனை ஸயுக் என்கிறது. இப்படியாகில் ச்ருதியில் ஸாயுஜ்ய சப்தமும் ஸார்ஷ்டிதா சப்தமும் சேரப் ப்ரயோகிப்பானேன் என்னில், ஸாயுஜ்யம் ஸமுபயோரத்ர போக்தவ்யஸ்யாவிசிஷ்டதா ஸார்ஷ்டிதா தத்ர போக்யஸ்ய தாரதம்ய விஹீநதா
– ஸ்ரீவிஷ்ணுவின் லோகத்தில் ஒரு சில முக்தர்கள் அவனுடைய லோகத்திலேயே வஸிக்கின்றனர் (ஸாலோக்யம்), ஒரு சிலர் அவனுக்கு மிகவும் அருகில் வஸிக்கின்றனர் (ஸாமீப்யம்), ஒரு சிலர் அவனுக்குச் சமமான ரூபம் பெறுகின்றனர் (ஸாரூப்யம்). இவர்களில் ஸாலோக்யம் மற்றும் ஸாமீப்யம் அடைந்தவர்களும் முக்தர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர், காரணம் அவர்கள் மோக்ஷ நிலையிலிருந்து அதிக தூரத்தில் இல்லாமையால் ஆகும். இதனை ஸ்ரீமத் பாகவதம் - லோகேஷு விஷ்ணோர் நிவஸாந்தி கேசித் ஸமீபம்ருச்சந்தி ச கேசிதந்யே அந்யே து ரூபம் ஸத்ருசம் பஜந்தே ஸாயுஜ்யமந்யே ஸ து மோக்ஷ உக்த: - ஸர்வேச்வரனை உபாஸனை செய்தவர்களில் சிலர் அவனுடைய லோகத்திலேயே வஸிக்கின்றனர் (ஸாலோக்யம்), ஒரு சிலர் அவனுக்கு மிகவும் அருகில் வஸிக்கின்றனர் (ஸாமீப்யம்), ஒரு சிலர் அவனுக்குச் சமமான ரூபம் பெறுகின்றனர் (ஸாரூப்யம்), சிலர் எம்பெருமானுக்குச் சமமான இன்பங்களை அனுபவிக்கின்றனர் (ஸாயுஜ்யம்); இந்த ஸாயுஜ்யம் என்பதே மோக்ஷமென்றும் கூறப்படும் – என்று கூறியது காண்க. இந்த ச்லோகமானது பரமபதம் சென்ற பின்னர் கிட்டுகின்ற ஸாயுஜ்யம் என்பதே மோக்ஷம் என்றது காண்க. ஆயிரம் என்பதில் நூறும் அடங்கும் என்பது போன்று, ஸாலோக்யம் முதலான பலவும் ஸாயுஜ்யம் என்பதில் அடங்குகிறது. மேலும் ஜிதந்தே ஸ்தோத்ரம் (2-36) - மோக்ஷம் ஸாலோக்ய ஸாரூப்யம் ப்ரார்யயே ந கதாசந இச்சாம்யஹம் மஹாபாஹோ ஸாயுஜ்யம் தவ ஸுவ்ரத – நீண்ட திருக்கரங்கள் கொண்டவனே! தவறாத ஸங்கல்பம் கொண்டவனே! ஸாலோக்யம் மற்றும் ஸாரூப்யம் போன்றதான மோக்ஷங்களை நான் எப்போதும் நாடமாட்டேன்; உன்னுடைய ஸாயுஜ்யம் என்பதான மோக்ஷத்தையே விரும்புகிறேன் – என்றது. ஸாயுஜ்யம் என்றால் இணைந்த இருவரிடையே உள்ள ஸம்பந்தம் ஆகும் (ஸயுக்). ஒருவர் மற்றவருடன் ஒரு சில இன்பங்களை அனுபவிப்பதற்கு மட்டுமே ஸயுக் ஆக இருப்பான். முக்தர்களைப் பொறுத்தவரையில் அனுபவிக்கப்படும் வஸ்துவானது அனைத்துவிதமான நிலைகளுடன் கூடிய ப்ரஹ்மமாகும். ஆகவே ப்ரஹ்மமும் முக்தனும் ஒன்றாக ஆனந்தம் அனுபவிப்பதால், முக்தனை ஸயுக் என்பர். இவ்விதம் கொண்டால் ச்ருதி வரி ஒன்றில், ஸாயுஜ்யம் மற்றும் ஸார்ஷ்டிதம் ஆகிய இரண்டு பதங்களுக்கும் ஒரே பொருள் தருவதாக உள்ளது ஏன் (அந்த வரியானது – ஸாயுஜ்யம் ஸார்ஷ்டிதம் ஸமாநலோகதாமாப்ரோதி என்பதாகும்)? ஏனென்றால் - ஸாயுஜ்யம் ஸமுபயோரத்ர போக்தவ்யஸ்யாவிசிஷ்டதா ஸார்ஷ்டிதா தத்ர போக்யஸ்ய தாரதம்ய விஹீநதா – ஸாயுஜ்யம் என்றால் இருவரும் (ப்ரஹ்மமும் முக்தனும்) அனுபவிக்கும் வஸ்துக்களில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை என்பதாகும்; ஸார்ஷ்டிதம் என்றால் இருவரின் அனுபவித்தலிலும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை என்பதாகும் – என்று அறிக.