Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 8)

அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்

ஆநந்ததீர்த்தரின் (த்வைதம்) மதம் பொருந்தாமை

மூலம்– இப்படி உத்தராவதியில்லாத இவ்வநுபவம் பெறுவார்க்கு அந்திமசரீரம் தேவமநுஷ்யாதிகளில் இன்னதென்று தெரியாது. ப்ரஹ்மாதிகளுக்கும் மோக்ஷமுண்டு. அப்படியே தர்மவ்யாதாதய: அப்யந்தே பூர்வ அப்யாஸாத் ஜுகுப்ஸிதே வர்ணாவரத்வே ஸம்ப்ராப்தா: ஸம்ஸித்திம் ச்ரமணீ யதா என்று மஹர்ஷிகள் சொன்னார்கள். ஆகையால் முமுக்ஷு தசையில் ஔபாதிகங்களான உத்கர்ஷ அபகர்ஷங்களைக் கொண்டு முக்ததசையிலும் அநுபவ தாரதம்யம் உண்டென்ற ஆநந்ததீர்த்தீயயர் முக்தருக்கெல்லாம் ஸர்வேச்வரனோடே பரமஸாம்யம் சொல்லுகிற ச்ருத்யாதிகளை மறந்தார்கள்.

– இப்படியாக எல்லையற்ற ப்ரஹ்ம ஆனந்தம் அனுபவிக்கின்ற முக்தர்களின் இறுதியான சரீரம் என்பது தேவ பிறவியா, மனித பிறவியா போன்ற எதுவும் அறிய இயலாது. நான்முகன் உள்ளிட்டவர்களுக்கும் மோக்ஷம் என்பது உண்டு. விஷ்ணுதர்மம் (102-29) - தர்மவ்யாதாதய: அப்யந்தே பூர்வ அப்யாஸாத் ஜுகுப்ஸிதே வர்ணாவரத்வே ஸம்ப்ராப்தா: ஸம்ஸித்திம் ச்ரமணீ யதா – தர்மவ்யாதர் போன்றவர்கள் அருவருப்பான குலத்தில் பிறந்தபோதும், கடந்த பிறவியில் பக்தியோகம் கைக்கொண்டிருந்த காரணத்தால், அந்தப் பழக்கம் காரணமாக, இந்தப் பிறவியிலும் அதனையே பின்பற்றி, சபரி போன்று ஸித்தி அடைந்தனர் – என்றது. ஆனால் ஆநந்ததீர்த்தரைப் பின்பற்றுபவர்கள் கூறுவது – பூர்வ கர்மங்களின் காரணமாக உண்டாகின்ற புண்ணிய பாவங்களின் விளைவாக முக்தர்களுக்கு முக்தி அடைந்த பின்னர் உண்டாகின்ற இன்பங்களின் ஏற்றதாழ்வுகள் உள்ளன – என்பதாகும். ஆனால் முக்தி அடைந்தபின்னர் ஸர்வேச்வரனுக்கு ஒத்த இன்பங்களை முக்தர்கள் அடைகின்றனர் என்று ச்ருதிகள் முழங்குவதை இவர்கள் மறந்தார்கள் போலும்.