Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 7)

அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்

பரிபூர்ண பகவத் அநுபவம் என்றும் அழிவதில்லை

மூலம்– இவ்வநுபவமுண்டானால் பின்பு ஒரு காலத்திலும் அழியாதென்னுமிடம் ப்ராப்யதே பரமம் தாம யதோ நாவர்த்ததே யதி: மாமுபேத்ய புநர்ஜந்ம துக்காலயம சாஸ்வதம் நாப்நுவந்தி மஹாத்மந: ஸம்ஸித்தி பரமாம் கத: ஆப்ரஹ்ம புவநால்லோகா: புநராவர்த்திந: அர்ஜுந மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்யதே யதா ஸ கேவலீபூத: ஷட்விம்சமநுபச்யதி ததா ஸ ஸர்வஸித்தத்வாத் புநர்ஜந்ம ந விந்ததி கத்வா கத்வா நிவர்த்தந்தே சந்த்ர ஸூர்யாதயோ க்ரஹா: அத்யாபி ந நிவர்த்தந்தே த்வாதசாக்ஷர சிந்தகா: வாயினால் நமோ நாராயணாவென்று மத்தகத்திடைக் கைகளைக் கூப்பிப் போயினால் பின்னை இத்திசைக்கென்றும் பிணைகொடுக்கிலும் போகவொட்டாரே இத்யாதிகளிலே ப்ரஸித்தம். பகவத் கைங்கர்யாந்தர்கதமான ஸ்வச்சந்த விஹாரத்தாலே லீலாவிபூதியிலே புகுந்தாலும் இவ்வநுபவத்துக்கு ஸங்கோசாதிகள் பிறவாமையாலே புநராவ்ருத்தியில்லை என்கிறது.

– முக்தனுக்கு இப்படிப்பட்ட பகவத் அனுபவம் கிட்டிய பின்னர் ஒருபோதும் அழியாது என்பதைக் கீழே உள்ள வரிகள் மூலம் அறியலாம்: அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37-26) - ப்ராப்யதே பரமம் தாம யதோ நாவர்த்ததே யதி: - அடையப்படவேண்டிய இலக்கான பகவானை உபாஸிப்பவன், மீண்டும் திரும்பி வராத பரமபதத்தை அடைகிறான். கீதை (8-15) - மாமுபேத்ய புநர்ஜந்ம துக்காலயம சாஸ்வதம் நாப்நுவந்தி மஹாத்மந: ஸம்ஸித்தி பரமாம் கத: - என்னை உண்மையாக அறிந்தவர்களாகவும், என்னிடம் அளவில்லாத அன்பு காரணமாக என்னைப் பிரிந்து இருக்க முடியாதவர்களாகவும், என்னிடம் மட்டுமே மனத்தைச் செலுத்தியவர்களாகவும் உள்ளவர்கள் என்னையே அடைகின்றனர்; அதன் பின்னர் அவர்களுக்கு மீண்டும் பிறவி என்பது இல்லை. கீதை (8-16) - ஆப்ரஹ்ம புவநால்லோகா: புநராவர்த்திந: அர்ஜுந மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்யதே – ப்ரம்மலோகம் முடிய உள்ள அனைத்து பலன்களும் அழியும் இயல்பைக் கொண்டவை ஆகும். அர்ஜுனா! என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு என்பது இல்லை. மஹாபாரதம் சாந்தி பர்வம் (323-80) - யதா ஸ கேவலீபூத: ஷட்விம்சமநுபச்யதி ததா ஸ ஸர்வஸித்தத்வாத் புநர்ஜந்ம ந விந்ததி – இந்த உலகின் தொடர்பு நீங்கிய பின்னர், இருபத்துஆறாவது தத்துவமாக உள்ள ஸர்வேச்வரனைக் காண்கின்ற முக்தன் ஒருவன் அனைத்து ஸித்திகளையும் பெறுகிறான். அதன் பின்னர் அவனுக்கு மீண்டும் பிறவி என்பது இல்லை. ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-8-40) - கத்வா கத்வா நிவர்த்தந்தே சந்த்ர ஸூர்யாதயோ க்ரஹா: அத்யாபி ந நிவர்த்தந்தே த்வாதசாக்ஷர சிந்தகா: - சந்த்ரன் மற்றும் சூரியன் உள்ளிட்ட பல ஜீவன்களும் ப்ரளயம் உண்டாகும்போது தங்களது அதிகாரம் அழிந்தவர்களாக மீண்டும் ஸம்ஸாரத்திற்குத் திரும்புகின்றனர். ஆனால் த்வாதநசாக்ஷர மந்த்ரம் மூலம் (ஓம் நமோ பகவதே வாஸுதேவாய) ஸர்வேச்வரனை த்யானம் செய்து பரமபதம் சென்றவர்கள் மீண்டும் திரும்புவதில்லை. பெரியாழ்வார் திருமொழி (4-5-2) - வாயினால் நமோ நாராயணாவென்று மத்தகத்திடைக் கைகளைக் கூப்பிப் போயினால் பின்னை இத்திசைக்கென்றும் பிணைகொடுக்கிலும் போகவொட்டாரே – “ஓம் நமோ நாராயணா” என்று கூறியபடி ஸ்ரீவைகுண்டம் சென்ற ஒருவனை, பெரியபிராட்டியாரையே பணயமாக வைக்க நேர்ந்தாலும், ஸம்ஸார உலகிற்குச் செல்ல விடமாட்டான். ஆனால் ஒரு சில முக்தர்கள் இந்த உலகில் மீண்டும் தோன்றி எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்யவேண்டும் என்னும் தங்களுடைய ஆசை காரணமாக மீண்டும் இந்த உலகில் பிறக்கக்கூடும். இப்படிப்பட்டவர்களுக்கு இந்த உலகில் உள்ளபோதும் பகவத் அனுபவம் குறையில்லாமல் கிட்டுவதால், ஸம்ஸாரத்தில் அவர்கள் சிக்குவதில்லை.