Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 4)
அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்
லீலாவிபூதியில் உள்ளவை முக்தனுக்கு இன்பமாக இருத்தல்
மூலம் – இப்படி பகவத்ஸ்வரூப குண விக்ரஹாதிகளும் சுத்தஸத்த்வாச்ரயமான நித்யவிபூதியும் ஸ்வஸ்வரூபமும் போக்யமானால் ப்ரதிகூலமாகப் ப்ரத்யக்ஷாதி ப்ரமாண ஸித்தமாய் முமுக்ஷுவுக்குத் த்யாஜ்யமாகச் சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்ட லீலாவிபூதியில் பதார்த்தங்கள் முக்தனுக்கு போக்யமாகக் கூடுமோ என்னில், அதிலும் குறையில்லை. பித்தோபஹதனுக்குப் ப்ரதிகூலமான பால் பித்தம் சமித்தால் அநுகூலமாமாப் போலவும் ஸர்வபௌமனான பிதாவினுடைய சிறைக்கூடம் சிறை கிடக்கிற ராஜகுமாரனுக்கு அப்போது ப்ரதிகூலமாய் ராஜா சிறைக் கூடத்தினின்றும் புறப்படவிட்டு உகந்து துல்யபோகனான வைத்தவளவில் சிறைக்கூடமான கோப்புக் குலையாதிருக்கச் செய்தே பிதாவின் விபூதியென்று அநுகூலமாமாப் போலவும், யஸ்த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ்த்வயா விநா என்றும், ந ஹி மே ஜீவிதேநார்த்தோ நைவார்த்தைர்ந ச பூஷணை: வஸந்த்யா ராக்ஷஸீமத்யே விநா ராமம் மஹாரதம் என்றும், “ஏறாளும் இறையோ” னிலும் சொல்லுகிறபடியே ஸம்ச்லேஷமின்றிக்கே தான் நின்றபோது கர்மாநுரூபமாகத் தனக்குப் ப்ரதிகூலமாயும் அல்பாநுகூலமாயும் தோன்றின லீலாவிபூதியில் பதார்த்தங்கள் முக்தனாய் நிரந்தர பகவதநுபவம் பண்ணுகிறவனுக்கு நிரதிசய போக்யவர்க்கத்திலே சொருகுகை உபபந்நம் இப்படி பத்தருக்குப் ப்ரதிகூலமாயும் அல்பாநுகூலமாயும் கர்மபந்தமில்லாதார்க்கு அநுகூல ஸ்வபாவமாயுமிருக்கை அப்பதார்த்தங்களுக்கு பகவதிச்சாஸித்தம்.
– இப்படியாக பகவத் ஸ்வரூபமும், குணங்களும், திருமேனியும், சுத்தஸத்வமாக உள்ள நித்யவிபூதியும், தன்னுடைய ஸ்வரூபமும் முக்தன் ஒருவனுக்கு இன்பமாக உள்ளன எனப்பட்டது. இங்கு ஒரு கேள்வி எழலாம் – அவைகள் இன்பத்தை அளிப்பதாக இருக்கலாம்; இந்த உலகில் நாம் ப்ரத்யக்ஷமாகவும் ஞானம் மூலமும் அறியக்கூடிய வஸ்துக்கள் அனைத்தும் சாஸ்த்ரங்களால் கைவிடப்பட வேண்டியவை என்று கூறப்படுவதாகும்; அப்படி உள்ளபோது இந்த லீலாவிபூதியில் உள்ள வஸ்துக்கள் முக்தனுக்கு இன்பம் அளிப்பதாக இருக்குமோ? இதில் எந்தவிதமான குறையும் இல்லை. பித்தம் அதிகமாக உள்ள ஒருவனுக்கு பால் என்பது ஏற்காத ஒன்றாக உள்ளது; ஆயினும் அவனது பித்தம் நீங்கிய பின்னர் அதே பால் ஏற்கக்கூடியதாக உள்ளது. ஓர் அரசகுமாரனை ஓர் அரசன் சிறையில் வைத்திருந்தால், அந்தச் சிறைச்சாலை ராஜகுமாரனுக்கு ஏற்காத ஒன்றாக உள்ளது; அதன் பின்னர் அவனை அரசன் சிறையில் இருந்து விடுவித்து, தனது அருகில் அமரவைத்துக் கொண்டு இன்பமாக வைத்துக் கொள்ளும்போது, அந்தச் சிறைச்சாலை எந்தவிதமான மாற்றமும் அடையாதபோதும், தனது தந்தையின் மேன்மைக்கு அடையாளமாக உள்ளது என்று எண்ணக்கூடியதாக உள்ளது. கீழே உள்ள வரிகள் காண்க: இராமாயணம் அயோத்யாகாண்டம் (30-18) - யஸ்த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ்த்வயா விநா – சீதை இராமனிடம், ”நீங்கள் எனது அருகில் இருப்பது ஸ்வர்க்கம் போன்று உள்ளது, உங்களைப் பிரிவதே நரகம் ஆகும்”, என்றாள். இராமாயணம் ஸுந்தரகாண்டம் (26-5) - ந ஹி மே ஜீவிதேநார்த்தோ நைவார்த்தைர்ந ச பூஷணை: வஸந்த்யா ராக்ஷஸீமத்யே விநா ராமம் மஹாரதம் – இராமனை விட்டுப் பிரிந்து நான் இந்த அரக்கியர்கள் நடுவில் வாழ்வதால் என்ன பயன்? எனது செல்வங்களாலும் ஆபரணங்களாலும் என்ன பயன்? திருவாய்மொழி (4-8-1) - ஏறாளும் இறையோனும் – எம்பெருமானால் ஏற்றுக் கொள்ளப்படாதவற்றால் எந்தவிதமான பயனும் இல்லை. இப்படியாக ஜீவன் எம்பெருமானுடன் சேர்ந்திருக்காதபோது இந்த உலகில் உள்ள வஸ்துக்கள் முக்தனுக்கு ஏற்புடையது அல்ல என்று இருந்தாலும், அவன் முக்தனாக நிண்று எம்பெருமானுடன் சேர்ந்து எல்லையற்ற இன்பம் கொள்ளும்போது, இந்த வஸ்துக்கள் ஏற்புடையதாகவே உள்ளன. இப்படியே இங்கு கொள்ளவேண்டும். ஸம்ஸாரத்தில் உள்ள ஒருவனுக்கு ஏற்புடையதாக இல்லாத வஸ்துக்கள், கர்மங்களில் இருந்து விடுபட்ட ஒருவனுக்கு ஏற்புடையதாக உள்ளன. இப்படியாக அந்த வஸ்துக்கள் இருப்பது என்பது எம்பெருமானின் ஸித்தம் ஆகும்.