Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 3)

அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்

எம்பெருமானின் ஸ்வரூபம், ஸ்ரீவைகுண்டம், ஜீவனின் ஸ்வரூபம் ஆகியவை பரமபதம்

மூலம்– இப்படி ஸர்வ ப்ரகார விசிஷ்டனாய்க் கொண்டு ஸர்வேச்வரன் போக்யனென்னுமிடம் ச்ருதி ஸ்ம்ருத்யாதிகளிலே ப்ரஸித்தம். இவ்வர்த்தத்தை பூமாதிகரணத்திலே ஸாதித்தருளினார். இவற்றில் நிரதிசயாநுகூல்யத்தாலே பரமப்ராப்யமாகையாலே பகவத்ஸ்வரூபத்தைப் பரமபதமென்கிறது. இப்பகவத் ஸ்வரூபத்தினுடைய பரிபூர்ணாநுபவம் பெறுவது போக்யதமாய் ஸர்வோத்தரமாயிருப்பதொரு ஸ்தாந விசேஷத்திலே சென்றாலாகையாலே அந்த ஸ்தாந விசேஷத்தையும் பரமபதமென்கிறது. இவ்வநுபவத்துக்கு ஆச்ரயமாய்க் கொண்டு அநுபாவ்யமாகையாலே பகவத் விபூதிபூதமாய் ஞானாநந்த லக்ஷணமான தன் ஸ்வரூபத்தையும் பரமபதமென்கிறது. இவை மூன்றுக்கும் மற்றுள்ளவற்றுக்கும் ப்ராப்யத்வமாத்ரம் அவிசிஷ்டம்.

– ஸர்வேச்வரன் தனது குணங்கள் மற்றும் திருமேனி ஆகியவற்றுடன் கூடியவனாக இன்பம் அளிக்கவல்ல வஸ்துவாகவே உள்ளவன் என்பதை ச்ருதி மற்றும் ஸ்ம்ருதிகளில் காணலாம். இதனை ஸ்ரீபாஷ்யத்தில் பூமாதிகரணத்தில் எம்பெருமானார் அருளிச்செய்தார். அடையவேண்டிய மிக உயர்ந்த இலக்காக எம்பெருமானின் ஸ்வரூபம் உள்ளதால், அந்த ஸ்வரூபமானது பரமபதம் எனப்படுகிறது. இப்படிப்பட்ட எம்பெருமானின் ஸ்வரூபம் என்பதை முழுமையாக அனுபவிக்கவேண்டும் என்றால், அனைத்தையும் விட மிகவும் உயர்ந்த இன்பம் அளிப்பதாக உள்ள இடத்திற்குச் சென்றால் மட்டுமே கிட்டும் என்பதால், அந்த இடமும் பரமபதம் எனப்படுகிறது. ஞானமயமாகவும் ஆனந்தமயமாகவும் இருப்பதும், எம்பெருமானின் செல்வங்களில் மிகவும் முக்கியமாக உள்ளதும், எம்பெருமானை அடைவதால் உண்டாகும் மகிழ்ச்சியைப் பெறுவதும் ஆகிய ஜீவனின் ஸ்வரூபமும் பரமபதம் எனப்படுகிறது. இம்மூன்றுக்கும் மற்றவற்றுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், இம்மூன்றும் அடையப்பட வேண்டிய இலக்காக உள்ளதே ஆகும்.