Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 2)
அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்
எம்பெருமானின் ஸ்வரூபம் என்பது இவனுக்கும் இன்பமாக இருத்தல்
மூலம்– இக்கதிவிசேஷத்தாலே சென்றவனுடைய பரிபூர்ண ப்ரஹ்மாநுபவமிருக்கும்படி எங்ஙனேயென்னில், “அனைத்துலகுமுடைய அரவிந்தலோசனனைத் தினைத்தனையும் விடாள்” இத்யாதிகளிற்படியே ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வேச்வரனை அநந்தங்களான விக்ரஹ குண விபூதி சேஷ்டிதங்களில் ஒன்றும் குறையாமே நிரதிசய போக்யமாக விஷயீகரித்துக் கொண்டிருக்கும். இவ்வநுபவம் ஈச்வரனுக்கும் இவனுக்கும் அத்யந்ததுல்யமாகையாலே பரமஸாம்யம் சொல்லுகிறது. “உணர் முழுநலம்” என்றும், “நிரஸ்தாதிசயாஹ்ணாத ஸுகபாவைக லக்ஷணா பேஷஜம் பகவத்ப்ராப்திரேகாந்த ஆத்யந்திகீ மதா” என்றும் சொல்லுகிறபடியே பகவத்ஸ்வரூபம் போக்யமாகப் ப்ராப்தம். மற்றுள்ளவை போக்யமாம்படி எங்ஙனேயென்னில் – ராஜமஹிஷிக்கு ராஜா போக்யனானால் அவனுக்கு அபிமதங்களாய் அவனுடைய போகத்துக்கு உறுப்பான போகோபகரண போகஸ்தாநாதிகளும் இவளுக்கு அநுகூலமாமாப் போலே இங்கும் பகவத்ஸ்வரூப அநுபந்திகளானவையெல்லாம் போக்யமாகக் குறையில்லை.
– உயர்ந்த கதியில் செல்கின்ற ப்ரபந்நன் ஒருவனுடைய பரிபூர்ணமான ப்ரஹ்ம அனுபவம் எப்படி இருக்கும் என்றால்: திருவாய்மொழி (6-7-10) - அனைத்துலகுமுடைய அரவிந்தலோசனனைத் தினைத்தனையும் விடாள் – என்று கூறுவதற்கு ஏற்ப, அனைத்து இடங்களிலும், அனைத்து காலங்களிலும், அனைத்து நிலைகளிலும் ஸர்வேச்வரனை அவனுடைய எண்ணற்ற திருமேனி, குணங்கள், விபூதிகள் மற்றும் லீலைகள் ஆகியவற்றுடன் ஒன்றும் குறையாமல் எப்போதும் இன்பத்துடன் அனுபவிக்கப் பெறுகிறான். இத்தகைய அனுபவம் என்பது ஈச்வரனுக்கும் முக்தனுக்கும் அனைத்துவிதங்களிலும் ஒன்றாகவே இருப்பதால் ஒற்றுமை கூறப்படுகிறது. எம்பெருமானின் ஸ்வரூபமானது எல்லையற்ற இன்பம் அளிப்பதாக உள்ளது என்பது முறையானதே என்னும் கருத்து கீழே உள்ள வரிகளின் மூலம் உணரலாம்: திருவாய்மொழி (1-1-2) - உணர் முழுநலம் ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-5-59) - நிரஸ்தாதிசயாஹ்ணாத ஸுகபாவைக லக்ஷணா பேஷஜம் பகவத்ப்ராப்திரேகாந்த ஆத்யந்திகீ மதா – மற்ற இன்பங்களை அனுபவிக்கும் எண்ணமே இல்லாமல் செய்யும்படியாக உயர்ந்த சுகமே ரூபமாக உள்ளதும், சற்றும் துன்பத்தின் கலப்பே இல்லாததும், முடிவே இல்லாமல் இருப்பதும் ஆகிய எம்பெருமானின் அனுபவம் என்பது ஸம்ஸாரம் என்னும் நோய்க்கான சிறந்த மருந்தாக உள்ளது. ஸர்வேச்வரன் மட்டும் அல்லாமல் அவனுடைய குணக்கள் உள்ளிட்ட பலவும் எவ்விதம் இன்பம் அளிப்பதாக உள்ளன என்றால்: ஓர் அரசன் அரசிக்கு இன்பமாக இருக்கிறான் என்றால், அவனுக்கு இன்பம் அளிப்பவை அனைத்தும் அவளுக்கும் இன்பம் அளிப்பதாகவே இருக்கும்; அவன் எந்தெந்த இடங்கள் இன்பம் அளிக்கின்ற என்று கொள்கிறானோ அவை அவளுக்கும் இன்பங்களை அளிப்பதாகவே இருக்கும். இது போன்றே ஸர்வேச்வரனுக்கும் இன்பம் அளிக்கவல்ல அனைத்தும் முக்தனுக்கும் இன்பம் அளிப்பதாகவே உள்ளன என்று கருத்து.