Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம் (பத்தி 8)

அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம்

கத்ய (கதி) அநுஸந்தானம் செய்வதால் ப்ரபந்நனுக்கு உண்டாகும் பலன்

மூலம்– இக்கத்யநுஸந்தாநாதிகள் ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனான இவனுக்கு ஸத்வாரக ப்ரபத்தி நிஷ்டனுக்குப்போலே உபாயாங்கமாக நாள்தோறும் கர்த்தவ்யங்களல்லவாகிலும் இவ்வுபாயத்தில் இழியும்போது அதிகாரித்வ ஸித்திக்காகப் பலார்த்தித்வம் அபேக்ஷிதமாகையாலே பலபர்வவிசேஷாநுஸந்தாநமாய்ப் புகக்கடவன. பின்பு, வரப்போகிற கண்ணாலத்துக்கு நாள் எண்ணி இருக்குமாப் போலே பூர்வப்ரார்த்தித புருஷார்த்த ஸ்மரணமாத்ரமாய் இப்புருஷார்த்தம் பெறப் போகிறோமென்கிற ப்ரீதித்யதிசயத்தை விளைவித்துக் கொண்டு ஸ்வயம்ப்ரயோஜநமாயிருக்கும். ஆகையால் இங்கு ஸமுதாய ஞானமாத்ரத்தாலும் இவனுக்கு அபேக்ஷிதஸித்தியுண்டு.

– யார் ஒருவன் தனது உபாயமாக பக்தி அல்லது உபாஸனத்தைக் கைக்கொண்டபடி உள்ளானோ அவனுக்கு முக்தி மார்க்கம் என்பதை அனுஸந்தித்தபடி இருத்தல் என்பது மற்ற அன்றாட அங்கங்கள் போன்றே ஆகும். ஆனால் ப்ரபத்தியை உபாயமாகக் கொண்டவன் இவ்விதம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ப்ரபத்தியைக் கைக்கொள்ளும் நேரத்தில் அவன் தனது இலக்கு என்ன என்று அறிந்தால் மட்டுமே அந்த இலக்கிற்கான உபாயத்தைக் கைக்கொள்ளும் தகுதியை அடைகிறான். ஆகவே அந்த நேரத்தில் தனது உயர்ந்த இலக்கை எண்ணும் பொருட்டு அவன் முக்தி மார்க்கத்தை நினைக்கவேண்டும். இவ்விதம் செய்யும்போது, நடக்க உள்ள கல்யாணத்தை எண்ணி மகிழ்வது போன்று, எப்போதும் எண்ணியபடி உள்ள புருஷார்த்தம் கைகூட உள்ளது என்னும் நிலையை ப்ரபத்தியின்போது செய்யப்பட்ட முக்தி மார்க்கம் பற்றிய எண்ணங்கள் தானாகவே உண்டாக்கிவிடும். அந்த முக்திமார்க்கம் பற்றி ப்ரபந்நன் நன்கு அறியவில்லை என்றாலும், மேலோட்டமாக மட்டுமே அறிந்தான் என்றாலும், அவன் விரும்பிய முக்தி கிட்டும்.