Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம் (பத்தி 6)

அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம்

பரமபதம் செல்லும் ஜீவன் அங்கு அடைகின்ற பேறுகள்

மூலம்– அநயாஹம் வசீபூத: காலமேதந்ந புத்வவாந் உச்ச மத்யம நீசாந்தாம் தாமஹம் கதமாவஸே அபேத்யாஹமிமாம் ஹித்வா ஸம்ச்ரயிஷ்யே நிராமயம் அநேந ஸாம்யம் யாஸ்யாமி நாநயாஹமசேதஸா க்ஷமம் மம ஸஹாநேந ஹி ஏகத்வம் நாநயா ஸஹ க்ரீடந்தம் ரமயா ஸார்தம் லீலாபூமிஷு கேசவம் மேகச்யாமம் விசாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சக்ஷுஷா மேகச்யாமம் மஹாபாஹும் ஸ்திரஸத்த்வம் த்ருடவ்ரதம் கதா த்ரக்ஷ்யாமஹே ராமம் ஜகத: சோகநாசநம் த்ருஷ்ட ஏவ ஹி ந: சோகமபநேஷ்யதி ராகவ: தம: ஸர்வஸ்ய லோகஸ்ய ஸமுத்யந்நிவ பாஸ்கர: இத்யாதிகளின் கட்டளையிலே இவன் மநோரதித்தபடியே இழந்த இழவெல்லாந் தீர நிரதிசய போக்யனான தன்னைக் காட்டித் “தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க்” கொண்டு தன்னோடு ஸமாநபோகத்வலக்ஷணமான ஸாயுஜ்யத்தாலே இவனுக்கு ஸஜாதீயரான “அந்தமில் பேரின்பத்தடியரோடிரு” த்தி, இப்படி ஸமஸ்த ப்ரதிபந்தக நிவ்ருத்திபூர்வகமாகவும் தேசகாலாவஸ்தா ஸங்கோசமில்லாதபடியாகவும் தன் மநோரதத்துக்கு அநுரூபமாக இவன் மநோரதித்த கைங்கர்யங்களை எல்லாம் யாவதாத்மபாவியாகக் கொண்டருளி, ஸவயஸ இவ யே நித்ய நிர்தோஷ கந்தா: என்கிறபடியே தனக்கு அந்யோந்யம் ஒரு வயஸ்ஸில் தோழன்மாரைப் போலே இருக்கிற நித்யஸூரிகளோடு இன்று வந்த இவனோடு வாசியறப் புறையறப் பரிமாறி, ஸ்தோத்ரத்திலும் ஸ்ரீவைகுண்ட கத்யத்திலும் அருளிச் செய்த மநோரதத்தின்படியே ஐகாந்திக ஆத்யந்திக நித்ய கிங்கரனான இவனுக்கப்பாலே தான் நிரதிசய ஆனந்தனாயிருக்கும்.

– கீழே உள்ள வரிகள் காண்க: மஹாபாரதம் சாந்திபர்வம் (312-30, 38, 39) - அநயாஹம் வசீபூத: காலமேதந்ந புத்வவாந் உச்ச மத்யம நீசாந்தாம் தாமஹம் கதமாவஸே, அபேத்யாஹமிமாம் ஹித்வா ஸம்ச்ரயிஷ்யே நிராமயம் அநேந ஸாம்யம் யாஸ்யாமி நாநயாஹமசேதஸா, க்ஷமம் மம ஸஹாநேந ஹி ஏகத்வம் நாநயா ஸஹ – இந்த ப்ரக்ருதியில் கட்டுப்பட்டு, அதன் பிடியில் நான் வீணாக எத்தனை கால போக்கினேன் என்று அறியவில்லை. உயர்ந்த தேவர்களின் சரீரம், நடுவில் உள்ள மனித சரீரம், தாழ்ந்த விலங்குகளின் சரீரம் போன்றவற்றைக் கொண்ட இந்த ப்ரக்ருதியில் நான் எவ்விதம் தொடர்ந்து வஸிப்பது? இங்கிருந்து விலகி துன்பங்களில் தொடர்பில்லாமல் உள்ள எம்பெருமானை அடையப் போகிறேன். எம்பெருமானுடன் கலந்த பின்னர், ப்ரக்ருதியிடம் சேரமாட்டேன். அவனுடன் உள்ளதே எனக்கு ஏற்றதாகும். ஜிதந்தே ஸ்தோத்ரம் (4-21) - க்ரீடந்தம் ரமயா ஸார்தம் லீலாபூமிஷு கேசவம் மேகச்யாமம் விசாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சக்ஷுஷா – விளையாடி மகிழ ஏற்றதான இடங்களில் பிராட்டியுடன் விளையாடியபடி உள்ளவனும், கறுத்த மேகம் போன்ற நிறம் கொண்டவனும், விசாலமான அழகான திருக்கண்களை உடையவனும் ஆகிய எம்பெருமானை நான் எப்போது பார்ப்பேன்? இராமாயணம் அயோத்யாகாண்டம் (83 – 8, 9) - மேகச்யாமம் மஹாபாஹும் ஸ்திரஸத்த்வம் த்ருடவ்ரதம் கதா த்ரக்ஷ்யாமஹே ராமம் ஜகத: சோகநாசநம், த்ருஷ்ட ஏவ ஹி ந: சோகமபநேஷ்யதி ராகவ: தம: ஸர்வஸ்ய லோகஸ்ய ஸமுத்யந்நிவ பாஸ்கர: - மேகம் போன்ற நீல நிறம் கொண்டவனாக, நீண்ட திருக்கரங்களை உடையவனாக, நிலையான ஸத்வகுணம் கொண்டவனாக, மாறாத ஸங்கல்பம் கொண்டவனாக, இந்த உலகின் துயரங்களை நீக்குபவனாக உள்ள இராமனை நாம் எப்போது காண்போம்? இந்த உலகின் இருள் முழுவதையும் சூரியன் விலக்குவது போன்று, நாம் இராமனைப் பார்த்த உடனேயே நமது துயரங்களை அவன் விலக்குவான். மேலே உள்ள வரிகளின்படி, அந்த ஜீவன் விரும்பினபடியே, அவன் இத்தனை காலம் இழந்திருந்தவை கிட்டும்படியாகத் தன்னைக் காட்டிக் கொடுக்கிறான். திருவாய்மொழி (3-7-7) - தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ் – கூறுவது போன்று அந்த ஜீவனைத் தனது திருவடிகளில் கொண்டு, தனக்கு ஒத்தபடியான இன்பங்களை அந்த ஜீவனுக்கு அளித்து, தனது கைங்கர்யத்தில் எப்போது ஈடுபட்டபடி உள்ள நித்ஸூரிகளின் நடுவே அந்த ஜீவனை நிறுத்துகிறான். அந்த ஜீவன் தன்னை அடைய உள்ள தடைகள் அனைத்தையும் நீக்கி, அந்த ஜீவனின் ஸ்வரூபத்திற்கு ஏற்றபடியும் தனக்கு ஏற்றபடியும் அந்த ஜீவன் விரும்பினபடியும் உள்ள கைங்கர்யங்களை அவனுக்கு அளிக்கிறான். அவன் செய்கின்ற கைங்கர்யங்களானவை கால, தேச, சூழ்நிலைக்கு ஏற்ப மாறாதபடி அமைத்துக் கொடுக்கிறான். அந்த ஜீவன் உள்ளவரை கைங்கர்யங்களும் நிலைக்கும்படிச் செய்கிறான். அங்குள்ள நித்யஸூரிகள் எவ்விதம் தோஷங்கள் அற்றவர்களாக, எம்பெருமானுடன் சமமான வயது கொண்ட நண்பர்கள் போன்று பழகுவார்களோ அது போன்று, அங்கு வந்த ஜீவனை எம்பெருமான் கட்டித் தழுவி, அவர்களுக்கும் இவனுக்கும் எந்தவிதமான ஏற்றத்தாழ்வும் இல்லை என்னும்படியாக பேதமின்றி நடத்துகிறான். மேலும் ஆளவந்தார் ஸ்தோத்ரரத்நத்தில் கூறியபடியும், எம்பெருமானார் ஸ்ரீவைகுண்ட கத்யத்தில் அருளிச்செய்தபடியும் (நான் எப்போது பரமபதம் அடைந்து, எம்பெருமானைக் கண்டு, கைங்கர்யம் செய்வேன்), அந்த ஜீவன் தான் விரும்பியபடி உன்னதமான உயர்ந்த இடத்தை அடைந்தது குறித்து ஆனந்தம் அடைவது கண்டு, எம்பெருமான் மிகுந்த ஆனந்தம் அடைகிறான்.