Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம் (பத்தி 5)

அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம்

விரஜை நதியிலிருந்து திருமாமணி மண்டபம் செல்லுதல்

மூலம் – ஐரமதீயமென்கிற ஸரஸ்ஸினளவும் சேர்த்து, ஸோமஸவநமென்கிற அச்வத்தத்தைக் கிட்டுவித்து, மாலா அஞ்ஜந சூர்ண வாஸ: பண ஹஸ்தைகளான ஐந்நூறு திவ்யாப்ஸரஸ்ஸுங்களையிட்டு எதிர்கொள்வித்து, ப்ரஹ்மாலங்காரத்தாலே அலங்கரிப்பித்து, ப்ரஹ்மகந்தரஸ தேஜஸ்ஸுக்களை ப்ரவேசிப்பித்து, “குடியடியார் இவர் கோவிந்தன் தனக்கென்று முடியுடை வானவர் முறை முறை எதிர்கொள்ளக் கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகு” வித்து, இந்த்ர ப்ரஜாபதிகளென்று பேருடையை த்வாரகோபரைக் கிட்டுவித்து, “வைகுந்தம் புகுதலும்” என்று தொடங்கி மேல், மூன்று பாட்டிலும் சொல்லுகிறபடியே அப்ராக்ருதங்களான ராஜோபசாரங்களைப் பண்ணுவித்து, ஆனந்தமயமான மண்டபரத்நத்தில் அழகோலக்கத்திலே புகவிட்டு,

– அதன் பின்னர் அந்த ஜீவனை ஐரமதீயம் என்னும் ஏரியில் சேர்க்கிறான். பின்னர் ஸோமவஸநம் என்னும் மரத்தை அடையும்படிச் செய்கிறான். அத்ன் பின்னர் ஐந்நூறு அப்ஸரஸ் பெண்கள் தங்கள் கைகளில் மாலைகள், சந்தனம், நறுமணப் பொடிகள், வாஸனை திரவியங்கள் மற்றும் ஆபரணங்களை வைத்தபடி அந்த ஜீவனை வரவேற்கின்றனர். அவர்களால் அந்த ஜீவன் ப்ரஹ்மத்திற்கு ஏற்றபடி அலங்கரிக்கப்படுகிறான். மேலும் அந்த ஜீவனிடம் ப்ரஹ்மத்திற்கே உரிய நறுமணங்களும், சுவைகளும், தேஜஸ்ஸும் சேர்க்கப்படுகின்றன. பின்னர் திருவாய்மொழி (10-9-8) - குடியடியார் இவர் கோவிந்தன் தனக்கென்று முடியுடை வானவர் முறை முறை எதிர்கொள்ளக் கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகு – என்று கூறுவதற்கு ஏற்ப நித்யஸூரிகளால் எதிர்கொண்டு அழைக்கப்பட்டு, கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட மதில்கள் கொண்ட கோபுரத்தினுள் அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கு அந்த ஜீவன் இந்த்ரன் மற்றும் ப்ரஜாபதி போன்ற வாயிற்காப்பவர்களால், திருவாய்மொழி (10-9-9) - வைகுந்தம் புகுதலும் – என்று தொடங்கி அடுத்து உள்ள மூன்று பாசுரங்களில் கூறப்படுவது போன்று, திவ்யமான அரச மரியாதைகள் அளிக்கப்படுகிறான். பின்னர், இரத்தினங்களால் இழைக்கப்பட்ட ஆனந்தமே வடிவான திருமாமணி மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான்.