Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம் (பத்தி 4)

அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம்

ஜீவனை விரஜை நதியின் அக்கரையில் வைத்து, திவ்ய சரீரம் அளித்தல்

மூலம்– லோகம் வைகுண்ட நாமாநம் திவ்யம் ஷட்குண்ய ஸம்யுதம் அவைஷ்ணவாநாமப்ராண்யம் குணத்ரய விவர்ஜிதம் நித்யஸித்தை: ஸமாகீர்ணம் தந்மயை: பாஞ்சகாலிகை: ஸபா ப்ராஸாத ஸம்யுக்தம் வநைச்சோபவநை: சுபம் வாபீ கூப தடாகைச்ச வ்ருக்ஷ ஷண்டைச்ச மண்டிதம் அப்ராக்ருதம் ஸுரைர்வந்த்யமயுதார்க்கஸமப்ரபம் ப்ரக்ருஷ்ட ஸத்த்வராசிம் தம் கதா த்ரக்ஷ்யாமி சக்ஷுஷா என்று நெடுங்காலம் காண ஆசைப்பட்டதொரு தேசவிசேஷத்திலே சென்றவாறே கர்மபலம் விசேஷ போகார்த்தமாகவன்றிக்கே வித்யதையாலே ஸ்தாபிதமாய் கதிமாத்ரார்த்தம் அநுவ்ருத்தமான ஸூக்ஷ்ம சரீரத்தை ஆறு கடக்கைக்குப் பற்றின தெப்பம் போகவிடுமாப்போலே போகவிடுவித்து, விரஜைக்கு அக்கரைப்படுத்தி, அப்ராக்ருத சரீரத்தைக் கொடுத்து,

– ஜிதந்தே ச்லோகம் (2-18 தொடங்கி 2-20 முடிய) - லோகம் வைகுண்ட நாமாநம் திவ்யம் ஷட்குண்ய ஸம்யுதம் அவைஷ்ணவா நாமப்ராண்யம் குணத்ரய விவர்ஜிதம் நித்யஸித்தை: ஸமாகீர்ணம் தந்மயை: பாஞ்சகாலிகை: ஸபா ப்ராஸாத ஸம்யுக்தம் வநைச்சோபவநை: சுபம் வாபீ கூப தடாகைச்ச வ்ருக்ஷ ஷண்டைச்ச மண்டிதம்அப்ராக்ருதம் ஸுரைர்வந்த்யமயுதார்க்கஸமப்ரபம் ப்ரக்ருஷ்ட ஸத்த்வராசிம் தம் கதா த்ரக்ஷ்யாமி சக்ஷுஷா – ஸ்ரீவைகுண்டமானது தானாகவே ஒளிரக்கூடிய தன்மை கொண்டது; ஆறு குணங்கள் வெளிப்படும் இடம்; ஸ்ரீவைஷ்ணவர்கள் அல்லாதவர்களால் செல்ல இயலாத இடம்; ஸத்வம் போன்ற மூன்று குணங்கள் இல்லாத இடம்; நித்யஸூரிகளால் ஐந்து காலங்களிலும் கைங்கர்யங்கள் செய்யப்படும் இடம்; முக்தர்களால் நிரம்பியுள்ள இடம்; ஸபை, மாளிகைகள், அழகான நந்தவனங்கள், கிணறுகள், குளங்கள், சோலைகள் ஆகியவைகளால் நிரம்பியுள்ள இடம்; ப்ரக்ருதியின் தொடர்பு இல்லாத இடம்; தேவர்களால் போற்றத்தக்க இடம்; பல ஆயிரக்கணக்கான சூரியன்களின் பிரகாசம் கொண்ட இடம்; சுத்தஸத்வமயமான இடம்; அப்படிப்பட்ட உலகத்தை எனது கண்களால் எப்போது காண்பேன் – என்று ஏங்கியபடி இருந்த இடத்திற்கு ஜீவன் செல்கிறான். அப்போது கர்மபலனை அனுபவிப்பதற்காக அல்லாமல், ஸ்ரீவைகுண்டம் வருவதற்காக மட்டுமே உண்டான ஸூக்ஷ்ம சரீரத்தை அவன் கைவிடுகிறான். ஆறு ஒன்றைக் கடக்க உதவிய படகை அக்கரைக்குச் சென்றவுடன் கைவிடுவது போன்று, விரஜை நதிக்கு அக்கரை சென்றவுடன் ஜீவனுடைய ஸூக்ஷ்ம சரீரத்தை விலக்கி, ப்ரக்ருதி தொடர்பற்ற திவ்யமான சரீரத்தை எம்பெருமான் அளிக்கிறான்.